முதல்வர் வேட்பாளரா அண்ணாமலை... மாணவர்கள் வரை குறிவைக்கும் பாஜக-வின் திட்டம் என்ன?

``பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களை ‘வருங்கால முதல்வர்’ என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை.” - கரு.நாகராஜன்

Published:Updated:
அண்ணாமலை
அண்ணாமலை
0Comments
Share

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நேற்று (ஜூலை 17-ம் தேதி), மத்திய அரசின் சாதனைகளை விளக்கும், 'தாமரை மாநாடு' பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்டது. முன்னதாக கொங்கு மண்டலத்தில் கட்சியை வளர்க்கும்விதமாக, மாநாட்டை பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்ட பா.ஜ.க-வினர் மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன், பள்ளி மாணவ, மாணவியர் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்தனர். இதன்படி, குறிப்பிட்ட சில பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களை, குலுக்கல் முறையில் தேர்வு செய்தனர். மாணவர்களுக்கு வழங்கப்படும் அந்தக் குலுக்கல் அட்டையில், 'வருங்கால முதல்வரைச் சந்தியுங்கள்' என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வருங்கால முதல்வரைச் சந்தியுங்கள்
வருங்கால முதல்வரைச் சந்தியுங்கள்

`தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்போம்' என பா.ஜ.க-வினர் கூறிவரும் நிலையில், பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை, முதல்வர் வேட்பாளராக, வெளிப்படையாகவே அடையாளம் காண்பிக்கும் வகையில் பா.ஜ.க-வினர் அதிரடி காட்டிவருகின்றனர். பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இதுபோல் மாணவர்களுடன் கலந்துரையாடுவது முதன்முறையல்ல. இதற்கு முன்பு பல்வேறு கல்லூரிகள், பள்ளிகளில் பலமுறை நிகழ்வுகளில் பங்கெடுத்திருக்கிறார். ஆனால், ‘வருங்கால முதல்வரைச் சந்தியுங்கள்’ என்பதுதான் இப்போது பேசுபொருளாகியிருக்கிறது.

2014-ம் ஆண்டு மக்களைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக, அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை முன்னிறுத்தி பா.ஜ.க பிரசாரம் செய்து வெற்றி கண்டது. அதைத் தொடர்ந்து வந்த 2019-ம் ஆண்டு தேர்தலிலும் அதைவிடப் பெரும்பான்மையான உறுப்பினர்களோடு வெற்றியைத் தக்கவைத்துக்கொண்டது. சமீபத்தில் நடந்த பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டத்தில் ‘பா.ஜ.க-வின் அடுத்த சுற்று வளர்ச்சி என்பது தென்மாநிலங்களிலிருந்து வரும்' என்று அமித் ஷா பேசியது அரசியலில் உற்று நோக்கப்பட்டது. இது போன்ற ஒரு நிலையில்தான் அண்ணாமலை குறித்தான இந்த வாசகம் கவனம் பெற்றிருக்கிறது.

செல்ஃபி வித் அண்ணாமலை: மாணவர்களைக் குறிவைக்கும் பாஜக-வுக்குப் பலன் கிட்டுமா?

பாஜக திருப்பூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மற்றும் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் `செல்ஃபி வித் அண்ணாமலை’ என்ற பெயரில் நிகழ்ச்சி நடைபெறும் என்று விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான உறுப்பினர் சேர்க்கை முகாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கல்லூரியில் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்த எப்படி அனுமதி அளிக்கப்பட்டது என்று சர்ச்சை எழுந்திருக்கிறது. இந்நிலையில், கல்லூரி வளாகத்தில் நிகழ்ச்சி நடத்த எந்த அனுமதியும் தரவில்லை என்று சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அனுமதியின்றி கல்லூரியின் பெயரைத் தவறாக பயன்படுத்துவதாகவும், கல்லூரி முதல்வர் தெரிவித்திருந்தார். எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரியும் இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற அனுமதி அளிக்கவில்லை என்று விளக்கம் அளித்திருக்கிறது.

செல்ஃபி வித் அண்ணாமலை
செல்ஃபி வித் அண்ணாமலை

இது குறித்து சிக்கண்ணா கலைக் கல்லூரி சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், 'சமூக ஊடகமான வாட்ஸ்அப் வாயிலாக சிக்கண்ணா கலைக் கல்லூரியின் பெயரைக் கல்லூரி நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் தவறாகப் பயன்படுத்திவருவதாக அறிகிறோம். இந்த நிகழ்வுக்கும் கல்லூரிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. மேலும் கல்லூரி நிர்வாகம், கல்லூரி வளாகத்தில் இது போன்ற எந்த நிகழ்வுக்கும் அனுமதி அளிக்கவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்' என கூறப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக பா.ஜ.க மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், “பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களை `வருங்கால முதல்வர்’ என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை. ஒவ்வொரு கட்சியும் அதன் தலைவர்களை `வருங்கால முதல்வர்’ என்று எழுதுகிறார்கள், பேசுகிறார்கள். அப்படித்தான் இதுவும். முதல்வருக்கான தகுதியும், அதன் வலிமையும், முயற்சியும் அண்ணாமலையிடம் இருக்கின்றன. எனவே நிர்வாகிகள், தொண்டர்கள் அவரை முன்னிறுத்துகிறார்கள்” என்றவரிடம், ‘இதன் அடிப்படையில் பார்த்தால் 2026- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரை அண்ணாமலைதான் பா.ஜ.க மாநில தலைவர் என்று எடுத்துக் கொள்ளலாமா?’ என்கிற கேள்வியை முன்வைத்தோம்.

கரு.நாகராஜன்
கரு.நாகராஜன்

‘அந்த அடிப்படையில்தானா என்பது தெரியவில்லை. ஏனென்றால் ஒவ்வொரு மாநில முடிவுகள், அதன் நிர்வாகிகள், தலைவர்கள் என எல்லாவற்றையும் அகில இந்திய பா.ஜ.க வழிகாட்டுகிறார்கள். ஆனால், வருங்கால முதல்வர் ஆகக்கூடிய அத்தனை ஆற்றல், திறமை அண்ணாமலைக்கு இருக்கிறது. தமிழ் நாட்டில் பா.ஜ.க வளர்ந்துவருகிறது. மக்களிடம் அது பிரதிபலிக்கிறது. இப்படி ஓர் அட்டையை யார் அடித்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இன்றைய கள நிலவரம் தெரிந்து அடுத்த தலைமுறைக்கும் பா.ஜ.க-வை எடுத்துச்செல்வதற்கான இந்த நடவடிக்கையைக் கருத்தில்கொண்டு செய்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது” என்கிறார்.