தேசிய அரசியலில் காங்கிரஸுக்கு மாற்றாக ஆம் ஆத்மியா... கெஜ்ரிவாலுடன் ஸ்டாலின் நெருக்கமாவது ஏன்?!

காங்கிரஸ் கட்சி சற்று பலவீனமாகக் காணப்படும் நிலையில், தேசிய அரசியலில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்று ஆம் ஆத்மியா என்கிற கேள்வி சிலரால் எழுப்பப்படுகிறது.

Published:Updated:
கெஜ்ரிவால் - ஸ்டாலின்
கெஜ்ரிவால் - ஸ்டாலின்
0Comments
Share

2014-ல் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலிலிருந்து, பல சட்டமன்றத் தேர்தல்களிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடர் தோல்விகளை காங்கிரஸ் கட்சி சந்தித்துவருகிறது. இதனால், தேசிய அரசியலில் எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரஸ் கட்சியின் இடத்தைப் பிடிப்பதற்கு பல கட்சிகள் முனைப்புக் காட்டுகின்றன.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

திரிணாமுல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி, ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட பலருக்கும் அந்த விருப்பம் இருக்கிறது. ஆகையால்தான், மேற்கு வங்கத்தைத் தாண்டி மம்தா பானர்ஜியும், உத்தரப்பிரதேசத்தைத் தாண்டி மாயாவதியும் டெல்லியைத் தாண்டி கெஜ்ரிவாலும் தங்களின் எல்லைகளை விரிவுபடுத்துவதற்கு விரும்புகிறார்கள். இவர்களில் மாயாவதியிடம் முந்தைய வேகம் இல்லை.

டெல்லியில் 2014-ம் ஆண்டிலும், 2020-ம் ஆண்டிலும் தொடர்ச்சியாக இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்றது. தற்போது அங்கு அதிகாரத்தில் இருந்துவரும் ஆம் ஆத்மி, வேறு சில மாநிலங்களிலும் கால்பதிக்க தீவிர முயற்சி எடுத்துவருகிறது. அந்த வகையில், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்றது.

பகவந்த் மான்
பகவந்த் மான்

மொத்தம் 117 சட்டமன்றத் தொகுதிகளைக்கொண்ட பஞ்சாப் மாநிலத்தில், 92 இடங்களை ஆம் ஆத்மி கட்சி பிடித்தது. சிரோன்மணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல், காங்கிரஸ் கட்சித் தலைவரும், முதல்வருமான சரண்ஜித் சிங் சன்னி, முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து உட்பட பல முக்கியத் தலைவர்கள் தோல்வியைத் தழுவிய நிலையில், ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது அங்கு, பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்றுவருகிறது.

பஞ்சாப் மாநிலத் தேர்தல் வெற்றியால் தேசிய அரசியலில் முக்கிய இடத்தை ஆம் ஆத்மி கட்சி பெற்றிருக்கிறது. அதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பாளராகவும், டெல்லி முதல்வராகவும் விளங்கும் அரவிந்த் கெஜ்ரிவாலை, பிரதமர் மோடிக்கு மாற்றாக ஆம் ஆத்மி தலைவர்கள் முன்னிறுத்திவருகிறார்கள்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா ஆகிய சட்டமன்றங்களுக்குக் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டது. அவற்றில், உத்தரப்பிரதேசத்திலும் உத்தரகாண்ட்டிலும் ஆம் ஆத்மியால் வெற்றிபெற முடியவில்லை. ஆனால், மொத்தம் 40 சட்டமன்றத் தொகுதிகளைக்கொண்ட கோவாவில், முதன்முறையாக இரண்டு எம்.எல்.ஏ-க்களை ஆம் ஆத்மி பெற்றது.

அடுத்ததாக, இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கும் குஜராத், இமாச்சலப்பிரதேசம் ஆகிய சட்டமன்றத் தேர்தல்களிலும் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டிருக்கிறது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில், ஆம் ஆத்மி கட்சி களமிறங்குவதால் ஆளும் பா.ஜ.க கலக்கமடைகிறது. ஏனெனில், இலவச மின்சாரம் உள்ளிட்ட ஆம் ஆத்மியின் தேர்தல் வாக்குறுதிகள் வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன. அந்தத் தாக்கம், குஜராத் வாக்காளர்களிடமும் ஏற்படும் என்று பா.ஜ.க அஞ்சுகிறது.

புதிதாக ஓர் அரசியல் கட்சியைத் தொடங்கி இரண்டு மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்து, மற்ற மாநிலங்களிலும் கால் பதிக்கும் முயற்சியில் முனைப்புக் காட்டிவரும் ஆம் ஆத்மி கட்சி, ஆளும் பா.ஜ.க-வுக்கு சவால் கொடுக்கும் கட்சியாக வளர்ந்திருக்கிறது. எனவே, பிரதான எதிர்க்கட்சி என்ற இடத்தை நோக்கி அது நகர்வதாக சிலர் பார்க்கிறார்கள். மேலும், காங்கிரஸுக்கு மாற்று ஆம் ஆத்மி என்று அந்தக் கட்சியின் தலைவர்கள் பேசிவருகிறார்கள்.

மோடி - கெஜ்ரிவால்
மோடி - கெஜ்ரிவால்

ஆனால், நாடாளுமன்றத் தேர்தல்களிலும், சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களிலும் தோல்வியடைந்ததை வைத்து, காங்கிரஸ் கட்சி மிக மோசமான அளவுக்கு பலவீனமடைந்துவிட்டது என்கிற முடிவுக்கு வந்துவிட முடியாது. பல மாநிலங்களில் இன்னமும் செல்வாக்கு பெற்ற கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது. எனவே, காங்கிரஸின் இடத்தைப் பிடிக்க ஆம் ஆத்மி வெகுதூரம் பயணிக்கவேண்டியிருக்கிறது.

இந்த நேரத்தில், அரவிந்த் கெஜ்ரிவாலுடன் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நெருக்கம் காட்டிவருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் டெல்லிக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள அரசு மாதிரிப் பள்ளியையும், அரசு மொஹலா கிளினிக் என்ற சுகாதார நிலையத்தையும் பார்வையிட்டார். அவை சிறப்பாகச் செயல்படுவதாக ஸ்டாலின் பாராட்டினார். டெல்லியைப்போல தமிழ்நாட்டிலும் மாதிரிப் பள்ளிகளை விரைவில் உருவாக்கப்போவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். தற்போது , தமிழக அரசின் திட்டங்களைத் தொடங்கிவைக்க, தமிழக அரசின் அழைப்பின் பேரில் சென்னை வந்திருக்கிறார் கெஜ்ரிவால்.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் பயின்று உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை கெஜ்ரிவால் தொடங்கிவைத்தார். அதேபோல, கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சியில் உருவாக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தையும் கெஜ்ரிவால் பார்வையிட்டார். சமீபகாலத்தில், ஸ்டாலினும் கெஜ்ரிவாலும் நெருக்கமாகியிருப்பதை அரசியல் பார்வையாளர்கள் உற்றுநோக்குகிறார்கள். இந்த நெருக்கத்தின் பின்னணியில், தேர்தல் கூட்டணிக் கணக்கு இருக்கிறதா என்றும் பார்க்கப்படுகிறது. டெல்லியிலும் பஞ்சாப்பிலும் ஆட்சியில் இருந்தாலும், மற்ற மாநிலங்களில் ஆம் ஆத்மிக்கு பெரிய செல்வாக்கு எதுவும் கிடையாது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில், ஆம் ஆத்மிக்கு செல்வாக்கு எதுவுமில்லை. ஆனாலும், கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட பா.ஜ.க-வைக் கடுமையாக எதிர்க்கும் முதல்வர்களுடன் ஸ்டாலின் நெருக்கமான உறவை பேணுகிறார். அந்த வகையிலேயே, பா.ஜ.க-வை எதிர்க்கும் கெஜ்ரிவாலுடனும் அவர் நட்பு பாராட்டுகிறார் என்று தி.மு.க வட்டாரத்தில் சொல்கிறார்கள். தேர்தல் நெருங்கும்போது அரசியல் கணக்குகளும் வெளிச்சத்துக்கு வரும்!