இந்தியா 75: உலகக்கோப்பைகளும் நெகிழச் செய்த ரசிகர்களும் - இந்திய கிரிக்கெட்டின் டாப் 10 தருணங்கள்!

விவ் ரிச்சர்ட்ஸின் விக்கெட்டை வீழ்த்த கபில்தேவ் பின்னோக்கி ஓடிச் சென்று திறம்பட ஒரு கேட்ச்சை பிடித்திருப்பார். கபில்தேவ் கேட்ச்சை பிடித்தார்; இந்தியர்கள் கிரிக்கெட்டைப் பிடித்துக்கொண்டனர்!

Published:Updated:
உலகக்கோப்பை வெற்றிகள்
உலகக்கோப்பை வெற்றிகள்
0Comments
Share

ஒரு சுதந்திர தேசமாக நாம் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடவிருக்கிறோம். இந்த 75 ஆண்டுகளில் பல துறைகளிலும் இந்தியாவின் வளர்ச்சி ஏற்ற இறக்கமாக மாறி மாறியே அமைந்திருக்கிறது. ஆனால், கிரிக்கெட் மட்டும்தான் தொடர்ந்து எல்லாவிதத்திலும் முன்னேற்றத்தை மட்டுமே கண்டிருக்கிறது. ஒட்டுமொத்த தேசமுமே கிரிக்கெட்டை உயிருக்கு உயிராக நேசித்து வருகிறது. அப்படிப்பட்ட கிரிக்கெட்டில் கடந்த 75 ஆண்டுகளில் இந்திய அணி செய்த சாதனைகள் சிலவற்றின் தொகுப்பு இங்கே...

முதல் வெற்றி!

விஜய் ஹசாரே | Vijay Hazare
விஜய் ஹசாரே | Vijay Hazare

இந்திய அணி இன்றைக்கு பல மாபெரும் வெற்றிகளைப் பெற்று ஆதிக்கமிக்க ஒரு அணியாக தன்னை நிலைநிறுத்தியிருக்கிறது. ஆனால், இதே இந்திய அணி தங்களின் முதல் வெற்றியை பெறுவதற்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் காத்திருக்க வேண்டியிருந்தது. 1932-ல் டெஸ்ட் கிரிக்கெட் ஆடத் தொடங்கிய இந்திய அணிக்கு முதல் வெற்றி 1952-ல்தான் சாத்தியப்பட்டது. டொனால்ட் கேர் தலைமையில் இந்தியா வந்திருந்த இங்கிலாந்து அணிக்கு எதிராக விஜய் ஹசாரே தலைமையிலான இந்திய அணி இந்த வெற்றியை பதிவு செய்தது. வினோ மங்கட் சிறப்பாக செயல்பட்டு 12 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு அச்சாரமிட்டார்.

கூடுதல் சிறப்பம்சம் என்னவெனில், வரலாற்றுத் தருணங்கள் பலவற்றையும் தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்தான் இந்தப் போட்டியும் நடைபெற்றிருந்தது.

கிரிக்கெட்டை ஜனநாயகப்படுத்திய 1983 உலகக்கோப்பை:

Kapil Dev with the 1983 World Cup
Kapil Dev with the 1983 World Cup

இந்தியாவில் கிரிக்கெட் இந்தளவுக்கு வேரூன்ற காரணமாக அமைந்தது 1983 உலகக்கோப்பை வெற்றியே. கத்துக்குட்டி என்கிற பட்டத்தோடு துச்சமாக மதிப்பிடப்பட்டு இங்கிலாந்துக்குப் பறந்த கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி ஒரு வரலாற்றையே படைத்துவிட்டு இந்தியா திரும்பியது. லார்ட்ஸில் இறுதிப்போட்டியில் க்ளைவ் லாயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை அசாத்தியமாக வீழ்த்தி இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது.

அந்தப் போட்டியில் விவ் ரிச்சர்ட்ஸின் விக்கெட்டை வீழ்த்த கபில்தேவ் பின்னோக்கி ஓடிச் சென்று திறம்பட ஒரு கேட்ச்சை பிடித்திருப்பார். கபில்தேவ் கேட்ச்சை பிடித்தார்; இந்தியர்கள் கிரிக்கெட்டைப் பிடித்துக்கொண்டனர்!

புது நம்பிக்கையளித்த 2007 உலகக்கோப்பை:

இந்தியா vs பாகிஸ்தான் - 2007
இந்தியா vs பாகிஸ்தான் - 2007

2007-ல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பையை மிக மோசமாக தோற்றிருந்தது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரசிகர்கர்கள் இந்திய அணியை வெறுக்கத் தொடங்கினர். அணிக்குள்ளும் எக்கச்சக்க முரண்பாடுகள். இந்த சமயத்தில்தான் முதல் டி20 உலகக்கோப்பைக்காக இளம் வீரரான மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்கவிற்குப் புறப்பட்டது. அவநம்பிக்கைகள் சூழ அந்தத் தொடருக்குச் சென்றிருந்த இந்திய அணி அசாத்தியங்களை நிகழ்த்தத் தொடங்கியது. யுவராஜ் 6 பந்தில் 6 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். கம்பீர், உத்தப்பா, இர்ஃபான், தோனி என ஒட்டுமொத்த அணியுமே மிகச்சிறப்பாக செயல்பட்டது. நடந்ததெல்லாம் நல்லவையாக மட்டுமே இருக்க, இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி டி20 உலகக்கோப்பையைக் கைப்பற்றியது. கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இந்திய அணியின் மீதான நம்பிக்கை புத்துயிர் பெற்றது.

2011-ல் மீண்டும் ஒரு 83 தருணம்!

உலகக் கோப்பையை வென்று கொடுத்த தோனியின் சிக்ஸர்
உலகக் கோப்பையை வென்று கொடுத்த தோனியின் சிக்ஸர்

1983-ல் இந்திய அணி உலகக்கோப்பையை வென்று ஏறக்குறைய 28 ஆண்டுகள் கடந்திருந்த சமயத்தில் தோனி தலைமையிலான இந்திய அணி மீண்டும் சாதித்துக் காட்டியது. 2011 உலகக்கோப்பைத் தொடரை சொந்த மண்ணிலேயே வென்று ஒட்டுமொத்த தேசத்தையுமே இந்திய அணி கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. இந்த உலகக்கோப்பையின் சூப்பர் ஸ்டாரும் யுவராஜ்தான். ஒரு ஆல்ரவுண்டராக முழுமையாக தனது பங்களிப்பை அணிக்குக் கொடுத்திருந்தார்.

83-ல் கபில்தேவ் பிடித்த கேட்ச்சை போல 2011-ல் தோனி அடித்த வின்னிங் ஷாட்டும் காலத்திற்கும் அழிக்கவே முடியாத சித்திரமாக இந்தியர்களின் மனதில் பதிவானது.

இளம்படையை அடையாளம் காட்டிய 2013 மினி உலகக்கோப்பை:

Dhoni Champions Trophy
Dhoni Champions Trophy
Twitter/ICC

2013-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் தோனி தலைமையிலான இந்திய அணியே வென்றிருந்தது. உலகக்கோப்பை வெற்றிகளோடு ஒப்பிடுகையில் இது அவ்வளவு பெரிய வெற்றி கிடையாதுதான். ஆனாலும், இந்த வெற்றி இந்திய அணியில் ஏற்படுத்திய தாக்கம் தவிர்க்க முடியாதது. சீனியர்களையெல்லாம் மெது மெதுவாக ஓரங்கட்டிவிட்டு அடுத்தக்கட்ட இந்திய அணியை தோனி உருவாக்கத் தொடங்கியிருந்தார். அந்தச் சமயத்தில்தான் இந்த சாம்பியன்ஸ் டிராபி நடந்திருந்தது. இளம் வீரர்களை மட்டுமே முக்கியமான துருப்புச்சீட்டாக வைத்துக்கொண்டு தோனி இந்தத் தொடரை வென்று காட்டியிருப்பார். அடுத்த 7-8 ஆண்டுகளுக்கான இந்திய அணியின் பயணம் இங்கிருந்தே தொடங்கியது.

சச்சின் 200*:

சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்

இந்த 75 ஆண்டுகாலத்தில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு காலத்தை சச்சின் மட்டுமே கட்டி ஆண்டிருக்கிறார். 'சச்சின்... சச்சின்' என்கிற அந்த ஆர்ப்பரிப்புதான் இந்திய கிரிக்கெட்டின் மந்திரச் சொல்லாகவே இருந்திருக்கிறது. சுதந்திரமடைந்த 75 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட்டில் நிகழ்ந்த மிகப்பெரிய அற்புதம் சச்சின். வாய்ப்பே இல்லை என அண்ணாந்து பார்க்கப்பட்ட பல சாதனைகளையும் சச்சின் உடைத்துக் காட்டினார். ஓடிஐ போட்டியில் முதன்முதலாக அடித்த டபுள் செஞ்சுரி ஆகட்டும், அசராமல் ஆடிய 200வது டெஸ்ட் ஆகட்டும் எல்லாமே மாஸ்டர் க்ளாஸ்தான்.

சச்சின் இந்திய கிரிக்கெட்டின் சிகரம். இன்னும் 75 ஆண்டுகளானாலும் அவருடைய சாதனைகள் அப்படியேதான் இருக்கும்.

ஆஸ்திரேலிய சம்பவம்:

Australia v India
Australia v India

இந்திய இளம் வீரர்கள் மட்டுமே இணைந்து செய்த இன்னொரு வரலாற்று சம்பவம் இது. கொரோனா முதல் அலை ஓய்ந்திருந்த சமயத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. கோலி உட்பட முக்கியமான வீரர்கள் பலரும் காயம் மற்றும் ஓய்வின் காரணமாக அணியில் இடம்பெறாத சூழலில், டெஸ்ட் தொடரில் இரண்டாம் கட்ட வீரர்களை வைத்துக் கொண்டு ரஹானே தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி பெரும் அதிர்ச்சியை அளித்தது. முதுகுவலியோடு அஷ்வினும் தசைப்பிடிப்போடு ஹனுமா விஹாரியும் சிட்னியில் வெளிக்காட்டிய அந்தப் போராட்ட குணம், அது ஒட்டுமொத்த அணியிடமிருந்தும் வெளிப்பட்டிருந்தது. கோலியாத்தை தாவீது வீழ்த்திய இந்தக் கதைக்கு இந்திய கிரிக்கெட் வரலாற்றில் எப்போதுமே முக்கிய இடமுண்டு.

நெகிழ வைத்த ரசிகர்கள்:

Chennai
Chennai
Pakistan Cricket

இந்திய அணியும் வீரர்களும் மட்டுமில்லை ரசிகர்களுமே கூட சில மறக்க முடியாத நெகிழ்ச்சியான சம்பவங்களை மைதானங்களில் நிகழ்த்தியிருக்கின்றனர். 1999-ல் வாசிம் அக்ரம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெறும் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கும். சச்சின் கடைசி வரை போராடி ஒரு சதமடித்து வீழ்ந்திருப்பார். இந்திய அணி தோற்றுப்போயிருந்த அந்தச் சமயத்திலும் சிறப்பாக ஆடி வென்ற பாகிஸ்தான் வீரர்களுக்காக சேப்பாக்கத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் எழுந்து நின்று கைத்தட்டி மரியாதைச் செலுத்தியிருப்பர். கிரிக்கெட்டின் மூலம் விதைக்க நினைக்கும் வெறுப்புணர்வுக்கெல்லாம் கொடுக்கப்பட்ட சாட்டையடியாக இந்தச் சம்பவம் எப்போதும் வரலாற்றில் நிற்கும்.

கவனம் ஈர்க்கும் பெண்கள் கிரிக்கெட்:

Indian - W Team
Indian - W Team

கிரிக்கெட் என்பது ஆண்களுக்கானது மட்டுமல்ல. இந்தியா சார்பில் பெண்களும் பல காலமாக கிரிக்கெட் ஆடி வருகின்றனர். ஆனால், ஆண்கள் கிரிக்கெட் மட்டுமே இங்கே கவனிக்கப்பட்டு வந்தது. அந்த நிலை இப்போது மெதுமெதுவாக மாறத் தொடங்கியிருக்கிறது. இந்திய பெண்கள் அணியுமே தொடர்ந்து சிறப்பான பெர்ஃபார்மென்ஸ்களைக் கொடுத்து வருகின்றனர். சமீபத்தில், காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றிருந்தனர். உலகக்கோப்பைத் தொடர்களில் இறுதிப்போட்டி வரை முன்னேறியிருக்கின்றனர். ஏழெட்டு ஆண்டுகள் கழித்து வெள்ளை உடை தரித்து டெஸ்ட் போட்டிகளில் ஆடிய போதும் மிகச்சிறப்பாக ஆடி அசத்தியிருக்கின்றனர். அடுத்ததாக பெண்களுக்கான ஐ.பி.எல் தொடரும் விரைவில் தொடங்கவிருக்கிறது. ஆண் கிரிக்கெட்டர்களுக்கு நிகராக பெண் கிரிக்கெட்டர்களும் கொண்டாடப்படும் காலம் வெகு விரைவிலேயே சாத்தியப்படும்.

மிதாலி ராஜ்:

Mithali Raj
Mithali Raj

ஆண்கள் கிரிக்கெட்டின் சிகரம் சச்சின் என்றால் பெண்கள் கிரிக்கெட்டின் அற்புதம் மிதாலி ராஜ். வசதி வாய்ப்புகளே அற்ற 90களிலேயே கிரிக்கெட் ஆடத் தொடங்கி இந்திய அணியின் கேப்டனாக பல ஆண்டுகளாக முன் நின்று உத்வேகத்துடன் போராடியவர். பெண்கள் கிரிக்கெட்டின் உச்சபட்ச சாதனைகள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டிருப்பவர். இன்றைக்கு இந்திய பெண்கள் அணிக்குக் கிடைத்திருக்கும் வெளிச்சம் மிதாலி இல்லாமல் சாத்தியப்பட்டிருக்காது.