அதிகாரப் போட்டி, நிர்வாகக் கோளாறு - தடையினால் தள்ளாடும் இந்தியக் கால்பந்து! தீர்வுதான் என்ன?

மூன்றாம் நபர்களின் தலையீடே இந்தத் தடைக்குக் காரணம் என FIFA அமைப்பு கூறியிருக்கிறது. நீதிமன்றம் மற்றும் அரசின் தலையீட்டையே FIFA அமைப்பு மூன்றாம் நபரின் தலையீடெனக் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிகிறது.

Published:Updated:
All India Football Federation
All India Football Federation
0Comments
Share
இந்தியக் கால்பந்து ரசிகர்கள் அனைவரும் பெரும் வருத்தத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். காரணம், FIFA அமைப்பு அகில இந்தியக் கால்பந்து கூட்டமைப்பிற்கு (AIFF) விதித்திருக்கும் தடை!

இந்த அதிரடி நடவடிக்கையால் இந்தியாவின் கால்பந்து போட்டிகள் மொத்தமாக முடங்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. அக்டோபரில் இந்தியாவில் நடைபெறவிருந்த 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலகக்கோப்பைத் தொடர் திட்டமிட்டப்படி நடைபெறுமா என்பதுமே சந்தேகமாகியுள்ளது.

இந்தப் பிரச்னையின் பின்னணி என்ன?

கடந்த ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பிரச்னை தொடங்கிவிட்டது. 2016-ம் ஆண்டில் அகில இந்தியக் கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக பிரஃபுல் படேல் தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் ராகுல் மேரா என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பிரஃபுல் படேலின் தேர்வு 2011-ல் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய விளையாட்டு ஒழுங்கு விதிகளுக்கு எதிராக இருப்பதாக வாதம் முன்வைக்கப்பட்டது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிரஃபுல் படேலுக்கு எதிராக தீர்ப்பு வரவே, அகில இந்தியக் கால்பந்து கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது. அங்கே டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தீர்ப்பு பிரஃபுல் படேலுக்குச் சாதகமாக அமைந்திருந்தாலும், கூட்டமைப்பின் சட்டத்திட்டங்களில் மாற்றம் கொண்டு வரவும் உத்தரவிட்டது. 2016-ல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரஃபுல் படேலின் பதவிக்காலம் 2020-ல் முடிவுக்கு வந்தது. நியாயப்படி அப்போதே தேர்தல் நடத்தப்பட்டு அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.

Praful Patel
Praful Patel
Twitter

ஆனால், கூட்டமைப்பும் பிரஃபுல் படேலும் அதைச் செய்வதற்கு தயாராக இல்லை. கூட்டமைப்பின் சட்டத்திட்டங்கள் குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேற்கோள்காட்டி தேர்தலை இப்போதைக்கு நடத்த முடியாதென கூறினர். இது தொடர்பான வழக்குகள் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தன.

இடையில் பிரஃபுல் படேல் FIFA கவுன்சில் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலகக்கோப்பைத் தொடரை நடத்தும் வாய்ப்பையும் இந்தியா பெற்றிருந்தது.

இந்நிலையில், கடந்த மே மாதத்தில் உச்சநீதிமன்றம் பிரஃபுல் படேலை தலைவர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்தது. மேலும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.தவே, முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி, இந்தியக் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாஸ்கர் கங்குலி ஆகியோரை உள்ளடக்கிய ஒரு நிர்வாகக் குழுவையும் உச்சநீதிமன்றம் உருவாக்கியது. இவர்களே கூட்டமைப்பின் நடவடிக்கைகளையும் தேர்தல் நடைமுறைகளையும் கவனிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தக் குழு சட்டத்திட்டங்களில் மாற்றம் செய்து புதிய சட்டத்திட்டங்களை FIFA அமைப்பிடமும் உச்சநீதிமன்றத்திடமும் சமர்பித்தது. இந்த மாத இறுதியில் தேர்தலை நடத்தும் வேலைகளிலும் இறங்கியிருந்தது. இதற்கிடையில், மாநிலங்களைச் சேர்ந்த கூட்டமைப்புகள் புதிய சட்டத்திட்டங்களில் பல, பாரபட்சமாக இருப்பதாகக் கூறி FIFA-விடம் முறையிட்டனர். தேர்தலில் அதிகப்படியான முன்னாள் வீரர்களுக்கு வாக்குரிமை அளிப்பதை மாநிலங்களின் கூட்டமைப்புகள் விரும்பவில்லை. இந்த விஷயத்தில் FIFA அமைப்பிற்குமே அதிருப்தி இருந்தது. அதிகப்படியாக 25 முன்னாள் வீரர்களுக்கு வாக்குரிமை அளிக்கலாம் என FIFA அறிவுறுத்தியது. ஆனால், நிர்வாகக் குழுவோ 36 முன்னாள் வீரர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கியிருந்தது. இதனைத் தொடர்ந்தே அகில இந்தியக் கால்பந்து கூட்டமைப்பிற்கு FIFA அமைப்பு தடை விதித்திருக்கிறது. மூன்றாம் நபர்களின் தலையீடே இந்தத் தடைக்குக் காரணம் என FIFA அமைப்பு கூறியிருக்கிறது. நீதிமன்றம் மற்றும் அரசின் தலையீட்டையே FIFA அமைப்பு மூன்றாம் நபரின் தலையீடெனக் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிகிறது.

இந்திய மகளிர் கால்பந்து அணி (AIFF Photo)
இந்திய மகளிர் கால்பந்து அணி (AIFF Photo)
AIFF

பாதிப்புகள் என்னென்ன?

அகில இந்தியக் கால்பந்து கூட்டமைப்பின் மீதான இந்தத் தடையால் இந்தியாவின் கால்பந்து நடவடிக்கைகள் அனைத்தும் முடங்கிப்போகும் சூழலே உருவாகியிருக்கிறது. குறிப்பாக, அக்டோபரில் நடைபெறவிருந்த 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலகக்கோப்பைத் தொடரை இந்தியா நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. சர்வதேச அளவிலான ஒரு மிகப்பெரிய தொடரை நடத்தும் வாய்ப்பைப் பெற்றும் நிர்வாகக்கோளாறுகள் அந்த வாய்ப்பை இழப்பது பெரும் துரதிர்ஷ்டமாக இருக்கும். மேலும், தொடரை நடத்தும் நாடு என்பதன் அடிப்படையில் இந்திய அணியும் இந்தத் தொடரில் ஆடுவதற்குத் தகுதிப்பெற்றிருந்தது. ஒருவேளை இந்தத் தொடர் வேறு நாட்டிற்கு மாற்றப்படும்பட்சத்தில் இந்திய அணி பங்கேற்க முடியுமா என்பது சந்தேகமே. இந்த வகையில் பெரும் கனவோடு உலகக்கோப்பைக்குத் தயாராகிக் கொண்டிருந்த வீராங்கனைகளுமே சோர்ந்து போகக்கூடும்.

உஸ்பெகிஸ்தானில் ஆசிய கிளப் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கவிருக்கின்றன. இதற்காக இந்தியாவிலிருந்து கோகுலம் கேரளா FC அணி உஸ்பெகிஸ்தான் சென்றிருக்கிறது. அவர்களுக்கான போட்டி இன்னும் சில நாள்களில் தொடங்கவிருக்கும் சூழலில், இந்தத் தடை உத்தரவால் அவர்களும் போட்டிகளில் ஆட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இந்திய ஆண்கள் அணியுமே எந்தவிதமான சர்வதேசப் போட்டிகளிலும் பங்கேற்க முடியாது. இந்தியன் சூப்பர் லீக் தொடர் நடைபெறுவதில் எந்த சிக்கலும் இல்லையெனினும் வெளிநாட்டு வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் சிக்கல் இருக்கக்கூடும். இது சில அணிகளுக்கு பின்னடைவாகவும் இருக்கும். ஒட்டுமொத்தத்தில் இந்தத் தடை உத்தரவு இந்திய கால்பந்திற்கு பெரும் சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது.

FIFA அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தலை முறையாக நடத்தி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறபட்சத்தில் இந்தத் தடை உத்தரவு விலக்கிக்கொள்ளப்படும். மேலும், இதுதொடர்பான வழக்கும் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதில், நீதிபதிகள் தெரிவிக்கப்போகும் கருத்தும் முக்கியமானதாக இருக்கும்.

Sunil Chhetri
Sunil Chhetri

இந்திய விளையாட்டுச் சங்கங்களில் பிரச்னை இல்லாத சங்கங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்தளவுக்கு எல்லா சங்கங்களும் நிர்வாகக் கோளாறுகளில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது.

அதிகாரப் போட்டியில் யார் யாரோ செய்யும் தவறுக்கெல்லாம் வீரர்களும் வீராங்கனைகளும் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்!