குரங்கு அம்மை: இந்தியாவில் முதன்முதலாக கேரளாவில், கொல்லம் இளைஞருக்கு சிகிச்சை; அறிகுறிகள் அலர்ட்!

காய்ச்சல், தீவிர தலைவலி, முதுகு வலி, உடல் வலி, உடற்சோர்வு உள்ளிட்டவை அறிகுறிகள். காய்ச்சல் ஏற்பட்டு 13 நாள்களுக்குள் உடலில் கொப்பளங்கள் ஏற்படும். முகம், கை, கால்களில் அதிகமாக ஏற்படும். குழந்தைகளுக்கு தாக்கம் அதிகமாக இருக்கும்; பார்வைக்குறைவு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படலாம்.

Published:Updated:
Monkeypox
Monkeypox ( Pixabay )
0Comments
Share

கேரளாவில் குரங்குக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது. அதற்கு வயநாட்டில் ஒருவர் பலியான சோக சம்பவமும் நடந்தது. இந்த நிலையில் யு.ஏ.இ-யில் இருந்து கடந்த 12-ம் தேதி விமானத்தில் கேரளா வந்த 35 வயது உள்ள ஒருவருக்கு மங்கி பாக்ஸ் (குரங்கு அம்மை) நோய் பாதித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. யு.ஏ.இ-ல் இருந்து விமானத்தில் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்த அவர், அங்கிருந்து காரில் கொல்லத்தில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். அவருக்கு உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் கொல்லத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அவரது சாம்பிள் பரிசோதனைக்காக புனே வைராலஜி இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனை முடிவு வந்த நிலையில் அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டது உறுதிசெய்யப்பட்டது.

பரிசோதனை
பரிசோதனை

முதலில் ஐரோப்பாவில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய் பின்னர் அமெரிக்காவிலும் பரவிய நிலையில் இந்தியாவில் முதன்முதலாக கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது. குரங்கு அம்மை விலங்குகளிடம் இருந்து மனிதனுக்குப் பரவும் நோயாகும். 1980-ம் ஆண்டு உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அம்மை நோயைப் போன்று உடலில் கொப்பளங்கள் ஏற்படும். பயப்படும்படியான தீவிரமான நோய் இல்லை என்றாலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது

1958-ல் முதன்முதலில் இந்த நோய் மிருகங்களிடம் கண்டறியப்பட்டது. மத்திய ஆப்பிரிக்கா, மேற்கு ஆப்பிரிக்காவில் பரவலாக இந்த நோய் இருந்துள்ளது. இந்த நோய் பரவிய மிருகங்களின் ரத்தம், உடல் திரவங்களின் நேரடி தொடர்பு மூலம் மனிதர்களுக்கு இந்த நோய் பரவுகிறது. அணில், எலி, குரங்கினங்கள் மற்றும் மிருகங்களிடம் இருந்து இந்த நோய் பரவுவதாகக் கண்டறியப்பட்டது. வனங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எளிதில் பரவும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. உலகில் முதன்முதலாக 1970-ல் காங்கோ-வில் 9 வயது சிறுவனுக்கு குரங்கு அம்மை கண்டறியப்பட்டது. இப்போது குரங்கு அம்மை நோய்க்கு தடுப்பூசி கிடைக்கிறது.

குரங்கு அம்மை
குரங்கு அம்மை

இந்த நோய் வைரஸ் மூலம் பரவக்கூடியது. நோய் பாதித்த மனிதரின் சுவாச பாதைகளில் உள்ள திரவங்கள் முலமும், பாதிக்கப்பட்டவரின் உடலில் உள்ள காயம், உடலுறவு கொள்ளுவது போன்றவைகளாலும் குரங்கு அம்மை பரவுகிறது. தாய் மூலம் கருவில் இருக்கும் குழந்தைக்கும், குழந்தை பிறந்த பிறகும் பரவ வாய்ப்பு உள்ளது. உலகம் முழுவதும் பெரியம்மை நோய்க்கான தடுப்பூசி நிறுத்தப்பட்டதால் எதிர்ப்பு சக்தி குறைந்து இப்போது குரங்கு அம்மை பரவுவதாகவும் கருதப்படுகிறது. குரங்கு அம்மை பாதிப்பு குறைய 6 முதல் 13 நாட்கள் வரை ஆகும். 5 முதல் 21 நாட்கள் வரை நோயின் தாக்கம் இருக்கலாம். 2 முதல் 4 வாரங்கள் நோய்க்கான அறிகுறி இருக்கும். மங்கி பாக்ஸ் நோயில் இறப்பு விகிதம் குறைவு என்றாலும் விழிப்புணர்வு தேவை என கேரள சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் நோய்வாய்பட்ட மிருகங்களிடம் இருந்து விலகி இருக்கும்படியும், இறைச்சியை நன்கு வேகவைத்து சாப்பிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குரங்கு காய்ச்சலை விட வித்தியாசமான அறிகுறிகள் குரங்கு அம்மை நோயின்போது ஏற்படும் என்கிறார்கள். காய்ச்சல், தீவிர தலைவலி, முதுகு வலி, உடல் வலி, உடற் சோர்வு உள்ளிட்டவை குரங்கு அம்மையின் அறிகுறிகளாகும். காய்ச்சல் ஏற்பட்டு 13 நாள்களுக்குள் உடலில் கொப்பளங்கள் ஏற்படும். முகம், கை, கால்களில் அதிகமாக கொப்பளங்கள் ஏற்படும்.

A nurse prepares a shot
A nurse prepares a shot
Frank Augstein

குழந்தைகளுக்கு இந்த நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும் இதனால் பார்வை குறைவு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. குரங்கு அம்மைக்கு குறிப்பிட்டு சொல்லும் அளவில் சிகிச்சை எதுவும் இல்லை , நோயின் அறிகுறியின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படும்.

இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், "ஐக்கிய அரபு நாட்டில் இருந்து விமானத்தில் வந்த கொல்லத்தைச் சேர்ந்த 35 வயது இளைஞருக்கு மங்கி பாக்ஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்து அங்கிருந்து கொல்லத்தில் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். கைகளில் கிளவுஸ் உள்ளிட்டவை அணிந்து முன்னெச்சரிக்கையுடன் தான் வந்துள்ளார். ஆனாலும் விமான பயணத்தின் போது அவருடன் பயணித்தவர்களில் 11 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்

மேலும், அந்த நபர் பயணித்த காரின் டிரைவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொல்லத்தில் அவர் சென்ற ஆஸ்பத்திரியின் ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மங்கி பாக்ஸ் பாதிக்கப்பட்டவரை 21 நாள்கள் தனிமையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும். மங்கி பாக்ஸ் நோயைக் கண்டு யாரும் பயப்பட வேண்டாம். விழிப்புணர்வுடன் இருந்தால் போதும். நோய் அறிகுறி உள்ளவர்கள் அருகில் உள்ள மருத்துவரை உடனே அணுக வேண்டும்" என்றார்.