`தமிழ்நாட்டின் செல்லாத வாக்கு முதல் 100% முர்முவுக்கு வாக்களித்த மாநிலங்கள் வரை!' - தேர்தல் ஹைலைட்ஸ்

நடந்து முடிந்த தேர்தலில் முர்மு 2,824 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். யஷ்வந்த் சின்ஹா 1,877 வாக்குகள் பெற்றிருக்கிறார்.

Published:Updated:
யஷ்வந்த் சின்ஹா - திரௌபதி முர்மு - தேர்தல் ஹைலைட்ஸ்
யஷ்வந்த் சின்ஹா - திரௌபதி முர்மு - தேர்தல் ஹைலைட்ஸ்
0Comments
Share

ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநரும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) வேட்பாளருமான திரௌபதி முர்மு இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மேலும், இந்தியாவின் குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பழங்குடிப் பெண் என்ற பெருமையையும் தட்டிச் சென்றிருக்கிறார். இதற்கு முன்னதாக ஜூலை 18-ம் தேதி நான்கு சுற்றுகளாகத் தேர்தல் நடந்தது. அதன் முடிவு நேற்று வெளியிடப்பட்டது.

நடந்து முடிந்த தேர்தலில் முர்மு 2,824 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். யஷ்வந்த் சின்ஹா 1,877 வாக்குகள் பெற்றிருக்கிறார். இவற்றில் மொத்தம் செல்லுபடியாகும் வாக்குகளில் திரௌபதி முர்மு 64.03 சதவிகித வாக்குகளையும், யஷ்வந்த் சின்ஹா 35.97 சதவிகித வாக்குகளையும் பெற்றிருக்கின்றனர். இதில், ஆந்திரா, சிக்கிம், நாகலாந்து ஆகிய மாநிலங்களிலிருந்து யஷ்வந்த் சின்ஹா ஒரு வாக்குக்கூட பெறவில்லை. இந்த மாநிலங்களின் முழு வாக்குகளையும் திரௌபதி முர்முவே பெற்றிருக்கிறார்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

நாடாளுமன்றத்தின் 4,809 எம்.பி-க்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களில், 53 செல்லாத வாக்குகள் (எம்.பி -15 வாக்குகள், எம்.எல்.ஏ -38 வாக்குகள்) போக மீதமுள்ள 4,754 வாக்குகள் பதிவாகின. இவற்றில், அதிகபட்சமாக 5 செல்லாத வாக்குகள் மத்தியப் பிரதேசத்திலிருந்து பதிவாகியிருக்கின்றன. மேலும், யஷ்வந்த் சின்ஹா சத்தீஸ்கர், கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் முர்முவைவிட அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.

குறிப்பாக தமிழ்நாட்டின் 234 வாக்குகளில் 75 வாக்குகள் திரௌபதி முர்முவுக்கும், 158 வாக்குகள் யஷ்வந்த் சின்ஹாவுக்கும் போடப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டிலிருந்து ஒரே ஒரு வாக்கு மட்டுமே செல்லாத வாக்காகப் பதியப்பட்டிருக்கிறது.