தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு... உருவாகிறதா நான்காம் அலை?

கொரோனா அறிகுறிகள் தென்படும் பலர், பரிசோதனை செய்வதில்லை. கொரோனா இருந்தும் தெரியாதபோது, அவர்களால் பணியிடங்களில் சக பணியாளர்களுக்கு, குடும்பத்தினருக்கு, அண்டை வீட்டார்களுக்கு கொரோனா பரப்பப்படுகிறது.

Published:Updated:
கொரோனா டெஸ்ட்
கொரோனா டெஸ்ட்
0Comments
Share

தமிழகம் முழுவதும் சளி, காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு போன்ற பிரச்னைகளுக்கு ஆளாபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாததால், கோவிட் பதிவேட்டில் இந்த எண்ணிக்கை பிரதிபலிக்கவில்லை. தொற்றுநோயியல் நிபுணர்களும் மருத்துவர்களும் இது கொரோனாவின் நான்காம் அலையாக உருப்பெற்றுவிடுமோ என்று அஞ்சுகின்றனர்.

இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அறிவியலாளர் டாக்டர் சௌமியா சுவாமிநாதன் கூறுகையில், ``தடுப்பூசி போட்டுக்கொண்டதாலேயே பெருந்தொற்று நம்மை தாக்காது என்று நினைக்கின்றனர். தற்போது அதிகரித்து வரும் கொரோனா பற்றி யாருக்கும் தெரியாததற்கான காரணம், போதிய பரிசோதனைகள் இல்லாததுதான்" என்று குறிப்பிடுகிறார்.

தடுப்பூசி
தடுப்பூசி

கொரோனா அறிகுறிகள் தென்பட்டு மருத்துவர்களைக் கலந்தாலோசித்த பிறகு கொரோனாவாக அறியப்பட்டு சிகிச்சை பெறுகிறவர்கள், வீட்டிலேயே பரிசோதனை மேற்கொண்டு கொரோனா இருப்பதை உறுதி செய்தவர்கள், அறிகுறிகள் தென்பட்டும் முகக்கவசம் இல்லாமல் இயல்பாகச் சுற்றித் திரிந்து நோயைப் பரப்புகிறவர்கள் என கொரோனா நோயாளிகள் மூன்று வகைகளில் இருக்கின்றனர். தற்போது தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 1,285 கொரோனா பாதிப்புகள் பதிவாகின்றன.

ஜூன் முதல் வாரத்தில் 14,000-மாக இருந்த RT-PCR சோதனைகள் தற்போது ஒரு நாளைக்கு 25,000-மாக அதிகரிக்கப்பட்டுள்ளன; பிப்ரவரி 23 அன்று 60,000-க்கும் மேற்பட்ட சோதனைகள் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அப்போது தினசரி ஆயிரத்துக்கும் குறைவாகவே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இருந்தது என சுகாதாரத்துறை இயக்குநரகம் தெரிவித்திருக்கிறது.

மாஸ்க்
மாஸ்க்

தினசரி குறைந்தது மூன்று லட்சம் பரிசோதனைகள் செய்யும் திறன் கொண்ட தமிழகம், இப்போது சுமார் 25,000 பேரிடம் இருந்து மட்டுமே மாதிரிகளை எடுக்கிறது. ``அறிகுறிகள் உள்ளவர்கள் பரிசோதனை செய்யாவிட்டாலும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டால் பெரிய பிரச்னை இருக்காது. அறிகுறிகள் லேசாக இருப்பதால் பலர் பரிசோதனை செய்வதில்லை. கொரோனா இருந்தும் தெரியாதபோது அவர்களால் பணியிடங்களில் சக பணியாளர்களுக்கு, குடும்பத்தினருக்கு, அண்டை வீட்டார்களுக்கு கொரோனா பரப்பப்படுகிறது என்று தமிழக பொது சுகாதார இயக்குநர் டாக்டர் டி.எஸ். செல்வவிநாயகம் தெரிவித்திருக்கிறார்.

கொரோனா அறிகுறிகள் இருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் கடப்பதன் மூலமாகவும், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றவில்லையென்றாலும் கொரோனா மேலும் பரவும் வாய்ப்புகள் அதிக அளவில் இருப்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.