சசிகலா காட்டிய வழி... என்னவாகும் பன்னீரின் எதிர்காலம்?!

``சசிகலாவும், பன்னீரும் கட்சியில் தலைமை பீடத்தை அலங்கரித்திருக்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்கள் எடுத்த தவறான முடிவுகளால் இன்று கட்சியில் அடிப்படை உறுப்பினர்களாகக்கூட இல்லை.”

Published:Updated:
சசிகலா, பன்னீர்
சசிகலா, பன்னீர்
0Comments
Share

ஜெயலலிதா இருந்தபோது திரைமறைவில் அசுர பலத்துடன் இருந்த சசிகலாவை, அவரின் மறைவுக்குப் பின்னர் செல்லாக் காசாக்கியதில் பெரும் பங்கு பன்னீருக்கு உண்டு. அதேபோல, முதல்வர் அரியணையில் இருந்த பன்னீரை, கீழே இழுத்துவிட்டதில் சசிகலாவுக்கே பெரும் பங்கு இருக்கிறது. ``உன்னால நான் கெட்டேன்... என்னால நீ கெட்ட...” என்று பாதிக்கப்பட்ட இருவரையும் ஒரே பாதையில் பயணிக்க வைத்திருக்கிறது காலம்!

பன்னீர்செல்வத்தின் சமீபக்கால அரசியல் நடவடிக்கைகள் எல்லாம், அப்படியே சசிகலாவை ஒத்திருப்பதாகச் சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ‘சசிகலா’ நடந்து காட்டிய வழியில் நடக்கும் பன்னீரின் எதிர்காலம் என்னாகும்?

ஜெயலலிதாவுடன் ஓபிஎஸ்
ஜெயலலிதாவுடன் ஓபிஎஸ்

கோட்டைவிட்ட பன்னீர்...

உடல்நலக்குறைவால் ஜெயலலிதா மரணமடைந்த 2016-ம் ஆண்டு டிசம்பரில்தான், சசிகலா -  பன்னீரின் புதிய அத்தியாயங்கள் தொடங்கியன. ஜெயலலிதா மறைந்த அதேநாள் நள்ளிரவில் முதல்வரான பன்னீரால், அந்தப் பதவியில் நீடிக்க முடியவில்லை. அவரின் நாற்காலியைப் பறித்த சசிகலாவாலும், அதில் உட்கார முடியவில்லை. பொதுச்செயலாளராகவும் நீடிக்க முடியவில்லை.

சொத்துக் குவிப்பு வழக்கால் சசிகலா சிறை சென்ற வாய்ப்பை பயன்படுத்தி கட்சியிலும் ஆட்சியிலும் இழந்த செல்வாக்கை நிலைநிறுத்த பன்னீர் கையில் எடுத்த ஆயுதம் தர்மயுத்தம்... அன்றைய தேதியில் எடப்பாடி, தினகரன், சசிகலாவைவிட ‘பவர்ஃபுல்லாக’ பார்க்கப்பட்டவர் பன்னீர்தான். அப்போது இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக தினகரன் மீது அமலாக்கத்துறை வழக்கு பாய்ந்தது. கைதும் அரங்கேறியது. அந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி எடப்பாடியும் பன்னீரும் இணைந்தனர். ஆனால், சசிகலா பொதுச்செயலாளர் ஆனபோது, துணைப் பொதுச்செயலாளராக தினகரனை உட்காரவைத்து எல்லாவற்றையும் கெடுத்துக்கொண்டது போலவே, ஒருங்கிணைப்பாளரான பன்னீர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை எடப்பாடிக்குத் தரச் சம்மதித்து தன் அரசியல் வீழ்ச்சிக்கு அவரே அஸ்திவாரம் போட்டார்.

புஸ்ஸாகிப்போன செல்வாக்கு...

2021-ம் ஆண்டு தண்டனை காலம் முடிந்து சிறையிலிருந்து வெளியேவந்த சசிகலா, சென்னைக்கு வந்ததும் ஜெயலலிதா சமாதி, தலைமை அலுவலகம், போயஸ் கார்டன் என எல்லா இடத்துக்கும் செல்வார். சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை முழுமையாகக் கைப்பற்றபோகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அந்த நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டு எந்த அலப்பறையும் செய்யாமல் அமைதியாகிப்போனார். சிறிது நாள்களில் அரசியலை விட்டு விலகப் போவதாக அறிவித்து தனது மொத்த செல்வாக்கையும் ஒரே அறிக்கையில் இழந்திருந்தார் சசிகலா. ஒருவேளை சசிகலா தீவிர அரசியலில் ஈடுபட்டியிருந்தால், கட்சி அவரின் கட்டுக்குள் வந்திருக்குமோ இல்லையோ, கண்டிப்பாக இன்றைய நிலைமைக்கு வந்திருக்க மாட்டார்.

சசிகலா
சசிகலா

கிட்டதட்ட சசிகலா செய்த அதே தவறுகளைத்தான் பன்னீரும் செய்துவருகிறார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ஒருங்கிணைப்பாளராக இருந்த பன்னீர், தர்மயுத்தம் காலகட்டத்தில் தன்னோடு துணை நின்ற நிர்வாகிகளை கண்டுகொள்ளாமல் இருந்தது, நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உட்கட்சித் தேர்தலில் தனது ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் போனது உள்ளிட்ட காரணங்களால்தான் சேர்த்து வைத்த செல்வாக்கை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தார். இந்த சமயத்தில் வந்த சட்டமன்றத் தேர்தலில்  தான் முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தப்படவில்லை என்றாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை அவர் பயன்படுத்தி, தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தால் கட்சி கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கக்கூடும்.

அதிமுக - ஓபிஎஸ். - இபிஎஸ்
அதிமுக - ஓபிஎஸ். - இபிஎஸ்

ஆனால், எடப்பாடி மீதிருந்த மனஸ்தாபத்தில், தான் அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் என்பதையும் மறந்து தேர்தல் பரப்புரைக்கு ஒழுங்காக செல்லாமல் இருந்துவிட்டார் பன்னீர். தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் கொடநாடு வழக்கு, நெடுஞ்சாலை டெண்டர் தொடர்பான வழக்கு என கட்சியின் சக்தியாக இருந்த எடப்பாடிக்கு நெருக்கடி வந்தது. இந்த காலகட்டத்தில் கட்சிப் பணியில் தீவிரம் காட்டிருந்தால் பன்னீரின் கை மீண்டும் ஓங்கியிருக்கும். ஆனால், கட்சிப் பணியாற்றாமல், யாரால் முதல்வர் பதவியை இழந்தோமோ, யாரை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தினமோ அவரையே கட்சியில் இணைக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டு, தனது வீழ்ச்சியின் கிட்டதட்ட கடைசி அத்தியாயத்தையும் எழுதினார் பன்னீர்.

சசிகலா பாதையில் பயணிக்கும் பன்னீர்...

சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சந்தித்த தோல்வியால், கட்சியைக் கைப்பற்ற, நிர்வாகிகளுடன் பேசும் ஆடியோக்களை வெளியிட்டு சில முன்னெடுப்புகளை மீண்டும் சசிகலா மேற்கொண்டார். அதேபோல, கட்சியை விட்டு நீக்கியது செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தும், நான்தான் அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் என்று தொடர்ந்து அறிக்கை விட்டும், அ.தி.மு.க கொடியுடன் சுற்றுப்பயணமும் செய்துவருகிறார். அதேபோலதான், ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழுவில் பன்னீர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். அலுவலகத்தின் சாவி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இதை உறுதி செய்துள்ளது. இருந்தபோதிலும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் நான்தான் என பன்னீர் அறிக்கைவிட்டு வருகிறார்.

சசிகலாவுடன் பன்னீர்
சசிகலாவுடன் பன்னீர்
விகடன்

ஆனால், இதுவும் அரசியல் களத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தற்போதுக்கூட அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் பண்ருட்டி ராமச்சந்திரனை அ.தி.மு.க-வின் ஆலோசகராக நியமிப்பதாக அறிவித்தார் பன்னீர்.  அதற்கான அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, பண்ருட்டி ராமச்சந்திரனை கட்சியை விட்டு நீக்குவதாக எடப்பாடி அறிவிக்கிறார். இந்த காட்சிகளெல்லாம் சசிகலா நிர்வாகிகளுடன் பேசிய ஆடியோ விஷயத்தில் அப்படியே நடந்தது. இதற்கு பின்னர், சசிகலா தனது ஆடியோ வெளியீட்டை அறவே நிறுத்திக் கொண்டார். இதுபோன்ற பணியை தொடர்ந்து செய்தால், பன்னீரிடம் பேசவே நிர்வாகிகள் தயக்கம் காட்டும் நிலை ஏற்படலாம். 

குறிப்பாக, சசிகலாவுக்கும், பன்னீருக்கும் கட்சியில் தலைமை பீடத்தை அலங்கரித்திருக்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்கள் எடுத்த தவறான முடிவுகளால் இன்று கட்சியில் அடிப்படை உறுப்பினர்களாகக்கூட இல்லை. தொண்டர்கள் மத்தியில் இழந்த செல்வாக்கை பெற முயற்சி செய்யாமல், நீதிமன்றங்களையே நாடியே வருகின்றனர். தற்போதுகூட அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் மீது தி.மு.க அரசு மேற்கொள்ளும் ரெய்டு நடவடிக்கைகளுக்கு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று தன்னை முன்னிறுத்தும் பன்னீர் ஆதரவளிக்கிறார்.

பன்னீர்செல்வம்
பன்னீர்செல்வம்

இப்படி இருந்தால், பன்னீரை எப்படி ஏற்றுக்கொள்வது என்பதுதான் கட்சி தொண்டர்களும், நிர்வாகிகள் கருத்தாக உள்ளது. பன்னீருக்கு கட்சிக்குள் தனது செல்வாக்கை மீட்கும் ஆசையிருந்தால், துவண்டு கிடக்கும் தொண்டர்களின் மனங்களைக் கவர நடவடிக்கை எடுக்க வேண்டும். சசிகலாவை போல தொண்டர்கள் என் பக்கம்தான் இருக்கிறார்கள் என்று கூறிக் கொண்டே இருந்தால், களநிலவரம் எதுவும் மாறிவிடாது. மூன்று முறை முதல்வராக இருந்த கர்வத்தோடு அரசின் தவறுகளையும், அரசியல் எதிரிகளையும் எதிர்த்து நிற்க வேண்டும். அதைவிடுத்து வெற்று அறிக்கைகளை மட்டுமே பன்னீர் தொடர்ந்து வெளியிட்டு வந்தால், அவர் இன்னொரு சசிகலா ஆகிவிடுவார் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்காது.