புதுச்சேரி: ஆ.ராசாவுக்கு எதிராக இந்து முன்னணி பந்த்! - அரசுப் பேருந்துகள் உடைப்பு; பதறிய பயணிகள்

தி.மு.க எம்.பி ஆ.ராசாவுக்கு எதிராக இந்து முன்னணி சார்பில் புதுச்சேரியில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 5 தமிழக அரசுப் பேருந்துகள் மற்றும் இரண்டு கல்லூரிப் பேருந்துகளின் கண்ணாடிகள் கல் வீசி உடைக்கப்பட்டிருக்கின்றன.

Published:Updated:
பந்த் போராட்டத்தில் உடைக்கப்பட்ட அரசு பேருந்து
பந்த் போராட்டத்தில் உடைக்கப்பட்ட அரசு பேருந்து
0Comments
Share

சென்னை பெரியார் திடலில் கடந்த 6-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மனுதர்மத்தை மேற்கோள்காட்டிப் பேசியிருந்தார் எம்.பி ஆ.ராசா. அந்தக் கருத்துக்கு எதிர்ப்பும் ஆதரவும் ஒருசேர எழுந்திருக்கும் நிலையில், இந்து முன்னணி அமைப்பும், பா.ஜ.க-வும் கடுமையான கண்டனக் குரல்களை கொடுத்துவருகின்றன. அதனடிப்படையில் ஆ.ராசாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக, இன்று புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது இந்து முன்னணி அமைப்பு. அதற்கு எதிர்வினையாற்றும்விதமாக பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க அரசைக் கண்டித்து நேற்று 26-ம் தேதி பந்த் போராட்டத்தை அறிவித்திருந்தன பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்கள்.

இந்து முன்னணி பந்த் போராட்டத்தில் உடைக்கப்பட்ட கல்லூரி பேருந்து
இந்து முன்னணி பந்த் போராட்டத்தில் உடைக்கப்பட்ட கல்லூரி பேருந்து

ஆனால் மாணவர்களின் காலாண்டு தேர்வு பாதிக்கப்படும் என்றும், வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கோரிக்கைகள் எழுந்ததால், மாவட்ட ஆட்சியருடனான பேச்சுவார்த்தையில் பந்த் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தன பெரியாரிய இயக்கங்கள். ஆனால், போராட்டத்தை வாபஸ் வாங்க முடியாது என்று மறுத்துவிட்டது இந்து முன்னணி அமைப்பு. அந்த போராட்டத்திற்கு பா.ஜ.க ஆதரவு தெரிவித்திருக்கிறது. ஆனால், “பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம். அதையடுத்து பேருந்து நிலையம், ரயில் நிலையம், நேரு வீதி உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இன்று காலை சுமார் 5 மணியளவில் தமிழக அரசின் பேருந்து ஒன்று புதுச்சேரியிலிருந்து விழுப்புரத்துக்குச் சென்றுகொண்டிருந்தது. அப்போது தட்டாஞ்சாவடியை அந்தப் பேருந்து கடந்துகொண்டிருந்தபோது, முன்பக்க கண்ணாடிமீது கற்கள் வீசப்பட்டன. அதில் பலத்த சத்தத்துடன் கண்ணாடி நொறுங்கி விழுந்தது. அப்போது பேருந்துக்குள் அமர்ந்திருந்த பயணிகள், பேருந்துக்குள்ளேயே இங்கும் அங்கும் பதறியடித்துக்கொண்டு ஓடினர். அதையடுத்து விழுப்புரத்திலிருந்து தமிழக அரசின் இரண்டு பேருந்துகள் புதுச்சேரி நோக்கி வந்துகொண்டிருந்தன. அப்போது அந்தப் பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டதால் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன. உடனே அந்தப் பேருந்துகள் நிறுத்தப்பட்டதும், பயணிகள் அதிலிருந்து  அலறியடித்துக்கொண்டு இறங்கினர். தகவலறிந்து அங்கு விரைந்த போலீஸார், பேருந்துகளை காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.

அதையடுத்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பயணிகள் வேறு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டுவருகின்றனர். அதேபோல மதகடிப்பட்டில் இயங்கிவரும் தனியார் பொறியியல் கல்லூரி மற்றும் அரியூரில் இயங்கிவரும் தனியார் மருத்துவக் கல்லூரியின் இரண்டு பேருந்துகள் மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்தப் பேருந்துகளும் கல்வீசித் தாக்கப்பட்டதில் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன. உடனே அந்தப் பேருந்துகள் ஓரங்கட்டி நிறுத்தப்பட்டு மாணவர்கள் இறக்கிவிடப்பட்டனர் . இந்தக் கல்வீச்சில் ஈடுபட்ட இந்து முன்னணி மற்றும் பா.ஜக நிர்வாகிகளை போலீஸார் விசாரணை செய்துவருவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.