அத்தியாவசியப் பொருள்களுக்கு ஜி.எஸ்.டி - தாக்கமும் பாதிப்பும் - ஒரு பார்வை

அத்தியாவசியப் பொருள்களின் மீது புதிதாக விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரி விகிதங்கள் அமலுக்கு வந்ததால், மக்கள் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். அத்தியாவசியப் பொருள்களின் விலை மேலும் உயர்ந்து, சாமானிய மக்களை வதைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Published:Updated:
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
0Comments
Share

மத்திய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 47-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் கடந்த ஜூன் 29-ம் தேதி சண்டிகரில் நடைபெற்றது. அதில், பல்வேறு பொருள்கள் மற்றும் சேவைகள் மீதான ஜி.எஸ்.டி வரி உயர்த்தப்பட்டது. இதுவரை விலக்கு அளிக்கப்பட்டிருந்த சரக்குகளுக்கும் சேவைகளுக்கும் புதிதாக வரிகள் விதிக்கப்பட்டன.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

இறைச்சி, மீன், தயிர், பனீர் போன்ற முன்கூட்டியே பேக் செய்யப்பட்ட, லேபிளிடப்பட்ட உணவுப்பொருள்கள் ஜி.எஸ்.டி உயர்வுப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அரிசி, பருப்பு, கோதுமை போன்ற பேக் செய்யப்படாத உணவுப்பொருள்கள், பேனா, மை, கத்தி, பிளேடு, ஸ்பூன்கள், கத்தரிக்கோல், உள்ளிட்ட பல பொருள்களும் ஜி.எஸ்.டி உயர்வுப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.

எல்.இ.டி விளக்குகள், எல்.இ.டி சாதனங்கள் ஆகியவற்றுக்கான ஜி.எஸ்.டி 12 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.அதனால், இந்தப் பொருள்களின் விலையும் உயருகிறது.

மாற்றியமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரி விகிதங்கள் 2022, ஜூலை 18 முதல் அமலுக்கு வருவதாகச் சொல்லப்பட்டது. அதன்படி, நேற்று முதல் ஜி.எஸ்.டி வரி விகிதம் அமலுக்கு வந்திருக்கிறது.

இதனால், அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் பொருள்களின் விலை உயருகிறது. மருத்துவ சேவை, வங்கி சேவை, ஹோட்டல் உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணங்களும் உயருகின்றன.

அரிசி
அரிசி

பிராண்ட் அல்லாத பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களுக்கும் முதன்முறையாக ஐந்து சதவிகித ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டிருக்கிறது. இவற்றின் விலையும் உயர்கிறது.

அட்லஸ்கள் உள்ளிட்ட வரைபடங்களுக்கும் 12 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதிப்பு அமலுக்கு வந்திருக்கிறது. கத்தரிக்கோல் போன்ற தையல் சார்ந்த பொருள்கள், பென்சில், ஷார்ப்னர்கள் போன்ற ஸ்டேஷனரிப் பொருள்கள், பிளேடுகள், ஸ்பூன்கள், போர்க்ஸ் போன்ற சில்வர் பொருள்கள், லேடில்ஸ் ஸ்கிம்மர்கள், கேக்- போன்ற அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களுக்கான ஜி.எஸ்.டி முன்பு 12 சதவிகிதமாக இருந்தது. தற்போது, அது 18 சதவிகிதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதனால், இந்தப் பொருள்களின் விலையும் உயருகிறது.

பனீர்
பனீர்

மருத்துவமனைகளில் ஐ.சி.யூ தவிர்த்து ஒரு நோயாளிக்கு ஒரு நாளைக்கு ரூ. 5,000-க்கும் அதிகமாக வாடகை வசூலிக்கப்படும் அறைகளுக்கு, ஐந்து சதவிகிதம் ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டிருக்கிறது. நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக வாடகை வசூலிக்கப்படும் ஹோட்டல் அறைகளுக்கு 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டிருக்கிறது.

மோட்டார் பம்ப்புகள், பால் பண்ணை இயந்திரங்களுக்கான வரி 12 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகவும், அரிசி ஆலை இயந்திரங்களுக்கான வரி 5 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது.

சாலைகள், பாலங்கள், ரயில்வே, மெட்ரோ, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட ஒப்பந்தப் பணிகளுக்கான ஜி.எஸ்.டி 12 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. சூரியசக்தியில் இயங்கும் ஹீட்டர்களுக்கான ஜி.எஸ்.டி வரி ஐந்து சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாகவும், பதப்படுத்தப்பட்ட தோல்களுக்கான ஜி.எஸ்.டி ஐந்து சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது.

சூப்பர் மார்க்கெட்
சூப்பர் மார்க்கெட்

வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் காசோலைகளுக்கு வசூலிக்கும் கட்டணத்துக்கு இனிமேல் 18 சதவிகித ஜி.எஸ்.டி செலுத்த வேண்டும். சில சேவைகளுக்கான ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, எரிபொருள்களை உள்ளடக்கிய ஆபரேட்டர்களுடன்கூடிய சரக்கு வாகனங்களை வாடகைக்கு எடுப்பதற்கு, முன்பு 18 சதவிகித ஜி.எஸ்.டி வசூலிக்கப்பட்ட நிலையில், அது தற்போது 12 சதவிகிதமாக குறைக்கப்பட்டிருக்கிறது.

எலும்பு முறிவு சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் சாதனங்கள், உடலின் செயற்கை பாகங்கள், குறைபாடுகளை ஈடுசெய்ய உடலில் பொருத்தப்படும் பிற உபகரணங்கள், கண்விழி லென்ஸ் ஆகியவற்றின் ஜி.எஸ்.டி விகிதங்கள் 12 சதவிகிதத்திலிருந்து ஐந்து சதவிகிதமாகக் குறைகின்றன. ஆனால், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்கள் மீது ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டிருப்பதாலும், ஜி.எஸ்.டி சதவிகிதம் உயர்த்தப்பட்டிருப்பதாலும் நடுத்தர, ஏழைக் குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள்.

உணவு பொருள்கள்
உணவு பொருள்கள்

அரிசி, பருப்பு போன்ற உணவுப்பொருள்களின் விலை ஏற்கெனவே உயர்ந்திருக்கிறது. அதனால், குடும்ப வருமானத்தில் பெரும் பகுதியை உணவுக்காகச் செலவிடும் நிலை பெரும்பாலான நடுத்தர, ஏழைக் குடும்பங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், தற்போது ஜி.எஸ்.டி விதித்திருப்பதால், அத்தியாவசியப் பொருள்களின் விலை மேலும் உயர்ந்து, சாமானிய மக்களை வதைக்கும் என்பதில் சந்தேகமில்லை.