மதுரை போலி பாஸ்போர்ட் விவகாரம்... உளவுத்துறை ஏடிஜிபி மீது அண்ணாமலை புகார் - பின்னணி என்ன?

அப்போதைய க்யூ பிரிவி டி.ஐ.ஜி., அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் இளவரசு, ஐ.எஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம், ஐ.எஸ் உதவி கமிஷனர் சிவகுமார், மதுரை கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்று அப்போது டி.ஜி.பி-க்குக் கடிதம் எழுதினார்.

Published:Updated:
அண்ணாமலை
அண்ணாமலை
0Comments
Share

மதுரையில் காவல்துறை அதிகாரிகள் உதவியுடன் 200 போலி பாஸ்போர்ட் வழங்கிய வழக்கை சி.பி.ஐ., என்.ஐ.ஏ விசாரிக்க உத்தரவிடக் கோரி தமிழ்நாடு ஆளுநருக்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அனுப்பியிருக்கும் புகார்க் கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அண்ணாமலை
அண்ணாமலை

அதிலும் குறிப்பாக உளவுத்துறை ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதத்தைக் குறிவைத்து குற்றம்சாட்டியிருப்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து அவர் ஆளுநருக்கு அனுப்பிய புகாரில், ``தமிழ்நாடு உளவுத்துறை தலைவராக இருக்கும் டேவிட்சன் தேவாசீர்வாதம் 2018-ல் மதுரை மாநகர கமிஷனராகப் பொறுப்பேற்றார். 13 மாதங்களுக்குப் பிறகு திருச்சியிலிருந்து இலங்கைக்குச் சென்ற ஒருவரின் பாஸ்போர்ட் போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பல போலி பாஸ்போர்ட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவையெல்லாம் போலி ஆவணங்கள் மூலம் மதுரையில் பெறப்பட்ட பாஸ்போர்ட்டுகள் என்பது தெரியவந்து, வழக்கு பதிவுசெய்து க்யூ பிரிவு போலீஸ் இந்த விவகாரத்தை விசாரித்தது.

டேவிட்சன் தேவாசீர்வாதம்
டேவிட்சன் தேவாசீர்வாதம்

க்யூ பிரிவு விசாரணையில் போலி பாஸ்போர்ட் வழங்கியதில் மதுரை மாநகர காவல்துறை அதிகாரிகள், பாஸ்போர்ட் அதிகாரிகள், தபால்துறையினர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்ற மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தபோது, `இந்த வழக்கில் 175 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டதாகவும் 22 பேர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதாகவும், காவல்துறையைச் சேர்ந்த மூன்று பேர், பாஸ்போர்ட் அதிகாரிகள் உள்ளிட்ட 16 பேர் கைதுசெய்யப்பட்டதாக’வும் 2021, ஜனவரியில் தமிழ்நாடு அரசு சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. வழக்கை மூன்று மாதங்களில் முடிக்க க்யூ பிரிவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் பாஸ்போர்ட், தபால்துறை அதிகாரிகளை விசாரிக்கக் கடிதம் அனுப்பிய அப்போதைய க்யூ பிரிவி டி.ஐ.ஜி ஈஸ்வரமூர்த்தி, அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் இளவரசு, ஐ.எஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம், ஐ.எஸ் உதவி கமிஷனர் சிவகுமார், மதுரை கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்று அப்போது டி.ஜி.பி-க்கு கடிதம் எழுதினார்.

போலி பாஸ்போர்ட் விவகாரம்
போலி பாஸ்போர்ட் விவகாரம்

ஆனால், தமிழ்நாடு அரசு அனுமதி தரவில்லை. அவனியாபுரத்தில் இருந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. நீதிமன்றம் உத்தரவிட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் முக்கியமான இந்த வழக்கில் விசாரணை நடக்கவில்லை. உளவுத்துறை ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதத்தால் வழக்கு விசாரணை தாமதம் செய்யப்படுகிறது.

இந்த போலி பாஸ்போர்ட் வழக்கை சி.பி.ஐ., என்.ஐ.ஏ விசாரிக்க உத்தரவிட வேண்டும்" என்று ஆளுநருக்கு அனுப்பிய புகாரில் தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை. மேலும் இது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் கடிதம் அனுப்பவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

ஆளுநருக்கு அண்ணாமலை அனுப்பிய கடிதம்
ஆளுநருக்கு அண்ணாமலை அனுப்பிய கடிதம்

இந்தப் புகார் குறித்து மதுரை மாநகர காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ``பாஸ்போர்ட் விசாரணை நடத்துவது சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள்தான். இதை கீழ்மட்டத்திலுள்ள அதிகாரிகள்தான் விசாரணை நடத்துவார்கள். இதில் தவறு நடந்தால் உயர் பொறுப்பிலுள்ள கமிஷனர் எப்படிக் காரணமாக முடியும்... மேலும் இந்த வழக்கு முடிக்கப்படவில்லை. இப்போதும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

ஆரம்பத்திலிருந்தே பா.ஜ.க-வினருக்கு டேவிட்சன் தேவாசீர்வாதத்தைப் பிடிக்காது. தற்போது அவர் உளவுத்துறையில் இருப்பதால் பா.ஜ.க-வினரின் மூவ்மென்ட்டுகளை உளவு பார்க்கிறார், தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக் கேட்கிறார் என்ற குற்றச்சாட்டை சமீபகாலமாக வைத்துவரும் நிலையில் அதன் வெளிப்பாடாகத்தான் இந்தக் குற்றச்சாட்டைப் பார்க்க முடிகிறது' என்றனர்.