தென்னிந்திய பிரபலங்களுக்கு நியமன எம்.பி பதவி - பாஜகவின் அரசியல் நகர்வா?!

இளையராஜா, பி.டி.உஷா உள்ளிட்ட நான்கு தென்னிந்திய பிரபலங்களுக்கு மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி வழங்கியிருக்கிறது மத்திய அரசு. அதன் பின்னணியில் உள்ள அரசியல் என்ன என்ற விசாரணையில் இறங்கினோம்...

Published:Updated:
இளையராஜா
இளையராஜா
0Comments
Share

இசையமைப்பாளர் இளையராஜா மட்டுமின்றி விளையாட்டுத்துறையில் சாதனை படைத்த முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா, பிரபல தெலுங்குப்பட கதையாசிரியரும் இயக்குநருமான விஜயேந்திர பிரசாத், கர்நாடகாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வீரேந்திர ஹெகடே ஆகியோரும் நியமன உறுப்பினர்களாகத் தேர்வாகியிருக்கின்றனர். இவர்களுக்கான நியமன உத்தரவு விரைவில் குடியரசுத் தலைவரால் பிறப்பிக்கப்படும்.

``தலைமுறைகளைக் கடந்து மக்களைத் தன்பால் ஈர்த்த படைப்புலக மேதை இளையராஜா. அவரின் இசை பல்வேறு உணர்வுகளை அழகாகப் பிரதிபலிக்கக்கூடியது. எளிய பின்னணியிலிருந்து இந்த அளவுக்குச் சாதனைகளைப் படைத்தவரின் வாழ்க்கைப் பயணம் மிகவும் ஊக்கமளிக்கக்கூடியது. அவர் மாநிலங்களவைக்கு நியமனம் செய்யப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது” என இளையராஜாவுக்குத் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.

மேலும், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் “இசையால் நம் உள்ளங்களையும் மாநிலங்களையும் ஆண்ட 'இசைஞானி' இளையராஜா அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராய்ச் சிறப்புற செயல்பட வாழ்த்துகள்’ எனவும் மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன், ``ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இளையராஜா அவர்களைக் கலைச் சாதனைக்காகக் கௌரவிக்க வேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம்” எனவும் வாழ்த்தியிருக்கிறார்கள். மத்திய அமைச்சர் எல்.முருகன், நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மோடி - இளையராஜா
மோடி - இளையராஜா

``மோடிஜியின் எண்ணங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இசை, கலை மற்றும் கலாசாரத்தின் அழகை நம் சமூகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதற்கான வாய்ப்பு இது” எனப் பிரதமர் மோடிக்கும், “என்மீது அன்பு கொண்ட ஏராளமான அபிமானிகள் இந்திய அரசு எனக்களித்த கௌரவமான அங்கீகாரத்திற்காகப் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்திருந்த வண்ணமிருக்கின்றனர். உங்கள் அனைவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல இயலாதாகையால் எல்லோருக்கும் என் உளங்கனிந்த நன்றி.” என மற்றவர்களுக்கும் நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

``இனி எங்கள் இலக்கு தென் மாநிலங்கள்தான்” என உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய ஒரு வார காலத்துக்குள் இப்படியொரு அறிவிப்பு வந்துள்ளது வரவேற்பைப் போல விமர்சனங்களையும் சந்தித்துள்ளது. இந்த நியமனங்கள் குறித்து, குறிப்பாக இளையராஜாவின் நியமனம் குறித்து தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் கேட்டோம்.

``இசைஞானி இளையராஜா-வுக்கு நியமன மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது, தமிழனாக உள்ளபடியே நம் அனைவருக்கும் மகிழ்ச்சி, பெருமை. அவரது இசை ஞானத்தைப் பார்த்துத்தான் தலைவர் அவருக்கு இசைஞானி என்ற பட்டத்தைக் கொடுத்தார். இன்றைக்கு வரை அல்லது எந்தக் காலத்திலும் அவருக்கு அந்தப் பட்டத்துக்கு இணையான பாராட்டோ அங்கீகாரமோ வரப்போவதில்லை. தலைவர் கலைஞரால் பாராட்டப்பட்ட ஒருவருக்கு துறை சார்ந்த திறமை அடிப்படையில் பதவி கிடைத்திருப்பதற்கு நமது வாழ்த்துகள். ஆனால், இது திறமைக்காக மட்டுமே இளையராஜாவுக்குக் கொடுக்க வேண்டும் என நினைத்திருந்தால் அதற்கு எட்டு ஆண்டுகள் எடுத்துக்கொண்டிருக்கத் தேவையில்லை.

சமீபத்தில் இளையராஜா அண்ணல் அம்பேத்கரோடு பிரதமர் மோடியோடு ஒப்பிட்டுப் பேசியிருந்தார். அது அரசியல் தளத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது இது நிச்சயம் அரசியல் ஆதாயத்தை நோக்கித்தான் வழங்கப்பட்டிருக்கிறது என்பது வெளிச்சமாகிறது. பா.ஜ.க மத, சாதிய ரீதியிலான வெறுப்பு அரசியலை முன்னெடுக்கும் அமைப்பு. ஆனால், இந்த அரசியலைப் போல ஆயிரமாயிரம் அரசியலைத் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துவிட்டார்கள். இது இங்கே எடுபடாது.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

எல்.முருகான் மத்திய அமைச்சரானதும் டாக்டர் கிருஷ்ணசாமியை உள்ளே கொண்டுவந்தது எல்லாம் இவர்களின் அரசியல் கணக்குதான். பா.ஜ.க-வின் தொடர் நடவடிக்கையைப் பார்க்கும்போது தலித் அரசியலை முன்னெடுப்பதைப் புரிந்துகொள்ள முடியும். அவர்கள் நினைப்பதைப் போலத் தமிழ்நாட்டில் அரசியலைச் செய்துவிட முடியாது. ஏனெனில் இங்கே பெரியார், அண்ணா, கலைஞர் என அரசியல் கற்றுத் தந்த ஆசான்களின் வரிசை அப்படி.” என இளையராஜாவுக்கான வாழ்த்தையும் அதில் உள்ள அரசியலையும் விளக்கினார்.

எதிர்க்கட்சிகளின் விமர்சனம் குறித்து பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் திருப்பதி நாராயணனிடம் கேட்டோம். “இளையராஜா ஒவ்வொரு தமிழனின் வாழ்விலும் இன, சாதி, மத வேறுபாடின்றி ஒவ்வொருவர் மனங்களிலும் ஊடுருவி இருக்கிறார். அரசியல் அடையாளங்களைக் கடந்தவர். அன்றைக்கு அவர் பேசியதையும் இன்றைக்கு அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டிருப்பதையும் தொடர்புப்படுத்திப் பேசினால் அது இளையராஜாவையும் அவரின் உன்னதமான கலையையும் அவருக்குத் தற்போது கொடுத்திருக்கும் பொறுப்பையும் குறைத்துப் பேசுவதாகப் பொருள் கொள்ளப்படும்.

அரசியல் கலப்பின்றி ஒரு தமிழனுக்கு, சிறந்த கலைஞனுக்கு உயரிய மரியாதையை இந்த நாடு கொடுத்திருக்கிறது. நமது பிரதமர் கொடுத்திருக்கிறார் என்பதை உணர்ந்து பேசினால் சிறப்பாக இருக்கும். அம்பேத்கரையும் பிரதமரையும் இளையராஜா ஒப்பிட்டுப் பேசியதற்கு அரசியல் சாயம் பூசுவது ஒரு மனிதனுடைய, கலைஞனுடைய கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதாகத்தானே ஆகும். இதுபோன்ற கேள்வியை யார் எழுப்பினாலும் அவர்களிடத்தில் குறை இருக்கிறது என்பதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

தமிழ்… தமிழ் என்று பேசிக்கொண்டிருப்பவர்கள் தமிழுக்கு, தமிழனுக்கு ஒரு பெருமை சேரும்போது அதற்கோர் அரசியல் பின்னணி கற்பிப்பது தவறானது. தங்களின் இரட்டை நிலைப்பாட்டைத் தாங்களாகவே வெளிக் கொண்டு வந்துவிடுகிறார்கள் என்பதும் வெட்ட வெளிச்சமாகிறது.” என இளையராஜாவுக்கு வழங்கப்பட்ட நியமனப் பதவி குறித்த விமர்சனங்களுக்கு விடையளித்தார்.