2024 மக்களவைத் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட்டால்?... ஐ.பியின் சவாலும் உண்மை நிலையும்!

அமைச்சர் சொல்வதைப்போல, 2024 தேர்தலில் திமுக தனித்து நின்றாலும் வெல்லக்கூடிய அரசியல் சூழல் நிலவுகிறதா?

Published:Updated:
அமைச்சர் ஐ.பெரியசாமி
அமைச்சர் ஐ.பெரியசாமி
0Comments
Share

``வரப்போகிற நாடாளுமன்ற தேர்தலில் எல்லா கட்சிகளும் சேர்ந்தாலும் தி.மு.க. தனித்து நின்று வெற்றி பெற முடியும் என்பதை நிரூபிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இப்போதும் சொல்கிறேன். சவாலாகச் சொல்கிறேன். மேடைப்பேச்சுக்காக நான் சொல்லவில்லை'' என திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்களுள் ஒருவரான ஐ.பெரியசாமி தெரிவித்திருக்கும் கருத்து தமிழக அரசியல் களத்தில் பல விவாதங்களை உண்டாக்கியுள்ளது.

திமுக பொதுக்குழு கூட்டத்தில்
திமுக பொதுக்குழு கூட்டத்தில்

திமுக பொதுக்குழுக்கூட்டம் சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடந்தது. பொதுக்குழு கூட்டத்தில் தமிழகம் முழுவதும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2 ஆயிரத்து 600 பொதுக்குழு உறுப்பினர்களும் ஆயிரத்து 500 சிறப்பு அழைப்பாளர்களும் என மொத்தம் 4 ஆயிரத்து 100 பேர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் திமுக தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது முறையாகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும் பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பொதுக்குழு கூட்டத்தில் வெளியிடப்பட்டது. அதேபோல், திமுக துணை பொதுச்செயலாளராக கனிமொழி எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோரும் திமுக துணைப் பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். திமுக முதன்மை செயலாளராக கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து திமுக முன்னணி நிர்வாகிகள் மேடையில் உரை நிகழ்த்தினர். அப்போது திமுக துணைப் பொதுச் செயலாளர்களுள் ஒருவரும் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி தெரிவித்த கருத்துகள் பல்வேறு அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது. அவர் பேசும்போது, ``2019 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி, அதிமுக ஆட்சியில் இருக்கும்போதே, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி, 2021 சட்டமன்றத் தேர்தல் வெற்றி, நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி என நான்கு வெற்றிகள். இப்படி அவர்கள் (எதிர்க்கட்சிகள்) வெற்றி பெற்றிருக்கிறார்களா?..,இப்போதும் சொல்கிறேன்.., அடித்துச் சொல்கிறேன்..,இப்போது ஒவ்வொரு அமைச்சரின் செயலையும் சிந்தனையையும் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தனது பொன்னான நேரத்தை வீணடிக்காமல் உழைத்துக் கொண்டிருக்கின்ற தலைவரைப் (ஸ்டாலின்) பார்க்கிற போது, எல்லோருக்கும் உற்சாகம் வந்துவிட்டது.

இப்போது நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி சேர்ந்துவிட்டால் அவ்வளவுதான் என்கிறார்கள். இந்தக் கட்சி சேர்ந்தால் அவ்வளவுதான், அந்தக் கட்சி சேர்ந்தால் அவ்வளவுதான் என்று சொல்கிறார்கள்'' என்று பேசிக்கொண்டே வந்தவர், ``2024 தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும் திமுக அமோக வெற்றிபெறும்'' எனச் சவால்விடும் வகையில் பேசினார்.

தி.மு.க கூட்டணி
தி.மு.க கூட்டணி

அமைச்சர் ஐ.பெரியசாமியின் இந்தப் பேச்சு குறித்து, செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனிடம் நிருபர்கள் கேட்க,

``திமுக வலுவாக இருப்பதை வைத்தும், மக்கள் செல்வாக்கு பெற்று திமுக இருப்பதையும் வைத்து அவ்வாறு பேசியிருக்கலாம்'' என்றும் கருத்துத் தெரிவித்தார்.

இந்தநிலையில், அமைச்சர் ஐ.பெரியசாமி சொல்வதைப்போல, 2024 தேர்தலில் திமுக தனித்து நின்றாலும் வெல்லக்கூடிய அரசியல் சூழல் நிலவுகிறதா என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம்..,

``கடந்த ஒன்றரை ஆண்டுகால திமுக ஆட்சிக்கு எதிராக கடுமையான எதிர்ப்புகள் இருக்கிறபோதும், ஸ்டாலினின் இமேஜுக்கு மிகப்பெரிய டேமேஜ் ஏதும் ஏற்படவில்லை. ஆனால், இந்த இடைப்பட்ட காலத்தில் திமுகவின் செல்வாக்கை அளந்து பார்ப்பதற்குத் தோதாக இடைத்தேர்தல் எதுவும் வரவில்லை. அமைச்சர் ஐ.பெரியசாமி திமுக மிகப்பெரிய செல்வாக்கைப் பெற்றிருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து 37 தொகுதிகளில் ஜெயித்ததைப்போல, வெற்றி பெறலாம் என நினைக்கிறார். ஆனால், அப்போது இருந்த அரசியல் சூழல் வேறு. அந்தத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் தனித்தனியாகப் பிரிந்து நின்றது, ஜெயலலிதா மிகப்பெரிய செல்வாக்கோடு இருந்தகாலம் அது. அதனால், அதோடு இதை ஒப்பிட முடியாது.

ப்ரியன்
ப்ரியன்

அடுத்ததாக, அதிமுக நான்கு அணிகளாகப் பிரிந்திருப்பதை வைத்து அமைச்சர் அப்படிச் சொல்லியிருக்கலாம். ஆனால், தேர்தலுக்கு முன்பாக, அதிமுக அணிகள் அனைத்தையும் ஒன்றுசேர்த்து வாக்குகளை தங்கள் பக்கம் இழுக்கவே பாஜக நினைக்கும். அதனால், ஐ.பெரியசாமி நினைப்பது நடக்காது. ஒட்டுமொத்தமாக தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக அமைச்சர் அப்படிப் பேசியிருக்கலாம். ஆனால், கள எதார்த்தம் அப்படி இல்லை என்பதே உண்மை. திமுக கூட்டணி இப்படியே தொடர்ந்தால் மட்டும்தான், 2019 தேர்தலைப்போல மிகப்பெரிய வெற்றியைப்பெற முடியும். ஸ்டாலின் கூட்டணியில் உறுதியாக இருக்கிறார். திமுக தனியாக நின்றால், பாஜகவுக்கு, மோடிக்கு எதிரான வாக்குகள் சிதறிப் போவதற்கான வாய்ப்புகள்தான் அதிகமாக இருக்கிறது'' என்றார்.

ரவீந்திரன் துரைசாமி
ரவீந்திரன் துரைசாமி

அமைச்சரின் பேச்சு குறித்து, அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசினோம்..,

``ஜெயலலிதா அதிகார பலத்தை பயன்படுத்தி தனித்து நின்று ஜெயிக்கும்போது, திமுக ஏன் ஜெயிக்கமுடியாது என்கிற கேள்வியைத்தான் ஐ.பெரியசாமி முன்வைக்கிறார். அடுத்ததாக, திமுக தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை அதிகப்படுத்த நினைத்திருக்கலாம். அதாவது, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 20 இடங்களில் போட்டியிட்ட திமுக, 2024 தேர்தலில் 30 இடங்களில் போட்டியிட முடிவு செய்திருக்கலாம். அதற்கான முன்னோட்டமாகவே அமைச்சரின் இந்தப் பேச்சைப் பார்க்கிறேன். ஸ்டாலினின் எண்ணப்படிதான் அமைச்சர் பெரியசாமி பேசியிருக்கிறார்'' என்று முடித்தார்.