காங்கிரஸ் தலைவர் தேர்தல்: ``கட்சிக்காரர்கள் விரும்பினால் வேண்டாமென்று சொல்ல மாட்டேன்!"- அசோக் கெலாட்

`கட்சியில் இருப்பவர்கள், காங்கிரஸின் தலைவர் பதவி அல்லது முதல்வர் பதவிக்கு நான் தேவை என்று நினைத்தார்கள் எனில், நான் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன்.' - அசோக் கெலாட்

Published:Updated:
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்
0Comments
Share

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஒருபக்கம் பரத் ஜோடோ யாத்திரை நடத்திக்கொண்டிருக்க, மறுபக்கம் காங்கிரஸில் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வேலைகளும் நடந்துகொண்டே வருகின்றன. இந்த வேலைகள் தொடங்கப்பட்ட நாள் முதலே ராகுல் காந்தி கட்சியின் தலைவர் பதவிக்கு ஆர்வம் காட்டாமலிருந்தாலும், கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் `ராகுல் காந்தியே மீண்டும் தலைவராகப் பதவியேற்கவேண்டும்' என்று வெளிப்படையாகக் கூறிவருகின்றனர்.

ராகுல் காந்தி -சசி தரூர்
ராகுல் காந்தி -சசி தரூர்

அதேசமயம், காங்கிரஸ் எம்.பி சசி தரூர், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர், தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப்போவதாகச் செய்திகளும் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. இருப்பினும் கட்சியின் உயர்மட்டத்திலிருந்து இதுவரை யார் போட்டியிடப்போகிறார்கள் என்று எந்த தகவலும் வெளியாகவில்லை.

அசோக் கெலாட்
அசோக் கெலாட்

இந்த நிலையில், காங்கிரஸின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை இன்று நேரில் சந்திப்பதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அசோக் கெலாட், ``கட்சியும், கட்சித் தலைமையும் எனக்கு அனைத்தையும் கொடுத்திருக்கிறது. 40-50 ஆண்டுகளாக நான் பதவியில் இருக்கிறேன். எனவே எந்த பதவியும் எனக்கு முக்கியமில்லை. மேலும், கட்சி எனக்கு எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் அதை நிறைவேற்றுவேன். அதேசமயம் கட்சியில் இருப்பவர்கள்,  காங்கிரஸின் தலைவர் பதவி அல்லது முதல்வர் பதவிக்கு நான் தேவை என்று நினைத்தார்கள் எனில், நான் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன். ஆனாலும், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்திக்கே மீண்டும் கோரிக்கை வைப்பேன்" எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.