இட்லி, தோசை மாவு விற்பனையில் ரூ.700 கோடி... எப்படி ஜெயித்தது இந்த நிறுவனம்? #திருப்புமுனை - 21

ஆரம்பத்தில் மாவு மட்டுமே விற்பனை செய்த, ஐடி, தற்போது பரோட்டா, சப்பாத்தி, காபி, வடை, பனீர், தயிர் உள்ளிட்ட பல பொருள்களை விற்பனை செய்கிறது. இந்தியாவின் முக்கியமான நகரங்களில் விற்பனை செய்வதோடு, அமெரிக்கா, யு.ஏ.இ உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

Published:Updated:
ஐ.டி ஃப்ரெஷ் ஃபுட்ஸ் (ID Fresh Foods)
ஐ.டி ஃப்ரெஷ் ஃபுட்ஸ் (ID Fresh Foods)
0Comments
Share

சிலர் செய்யும் தொழிலில் எப்போதாவது திருப்புமுனை ஏற்படலாம். ஆனால், சிலருடைய வாழ்க்கை மொத்தமுமே திருப்புமுனைதான். அப்படிப்பட்ட ஒருவர்தான், ஐடி ஃப்ரெஷ் ஃபுட்ஸ் (ID Fresh Foods) நிறுவனத்தின் நிறுவனர் முஸ்தபா. இந்த நிறுவனம் நடப்பு நிதி ஆண்டில் ஆண்டுக்கு ரூ.700 கோடி அளவுக்கு வருமானம் ஈட்ட இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.2,000 கோடிக்குமேல்.

2016-ம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ.300 கோடிக்குமேல் பணியாளர்களுக்குப் பங்குகளை ஈசாப் (ESOP) மூலம் ஒதுக்கீடு செய்திருக்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் 100 கோடீஸ்வரர்களை உருவாக்கும் திட்டத்தையும் வைத்திருக்கிறது. ஆனால், இந்த நிறுவனத்தின் நிறுவனர் பி.சி.முஸ்தபா மெழுகுவத்தி வெளிச்சத்தில் படித்தவர்.

மதிய உணவு சாப்பிடும் மாணவர்கள்
மதிய உணவு சாப்பிடும் மாணவர்கள்

மதிய சாப்பாட்டுக்கு பள்ளிக்கூடம்...

கேரளாவில் உள்ள வயநாட்டில் பிறந்தவர் முஸ்தபா. பெரிய குடும்பம். அப்பா கூலி வேலை பார்ப்பவர். அம்மாவும் கிராமத்தில் கிடைக்கும் சிறுசிறு வேலையை செய்பவர். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மூன்று வேலை உணவு என்பது கனவுதான். சிறு வயதில் முஸ்தபா பள்ளிக்கூடத்துக்கு செல்வதே மதியம் உணவு கிடைக்கும் என்பதற்காகத்தான்.

வறுமை காரணமாகப் படிப்பில் கவனம் செல்லவில்லை. பள்ளிக்குச் சென்றுகொண்டே சின்னச் சின்ன வேலைகளை செய்யத் தொடங்கினார். மிட்டாய் விற்பனை செய்வது, ஆடு வளர்ப்பது எனப் பல வேலைகளைச் செய்யத் தொடங்கினார். மெழுகுவத்தி மற்றும் விளக்கு வெளிச்சத்தில் படிக்க வேண்டும் என்பதால், படிப்பில் பெரிய ஆர்வம் இல்லை. அதனால் ஆறாம் வகுப்பில் பெயில் ஆனார் முஸ்தபா.

இதனால் ஜூனியர் மாணவர்களுடன் பள்ளிக்குச் செல்ல விரும்பாமல் அப்பாவுடன் வேலைக்குச் சென்றார். கணக்குப் பாடத்தில் மட்டுமே ஆர்வமாக இருந்ததால், கணக்கு ஆசிரியர் முஸ்தபாவின் அப்பாவைச் சந்தித்துப் பேசிய பின்னர் மீண்டும் பள்ளிக்குச் சென்றார் முஸ்தபா.

பள்ளிப்படிப்பை படித்தாலும் வறுமை இன்னும் நீங்கவில்லை. கோழிக்கோட்டில் உள்ள கல்லூரியில் சீட் கிடைத்தது. ஆனாலும் வறுமை துரத்தியது. படிப்பு மற்றும் உணவுக்கு ஸ்காலர்ஷிப்பில் இடம் கிடைத்து. அதனால் பணம் கட்டிப் படித்தவர்கள் சாப்பிட்ட பின்புதான் சாப்பிட வேண்டிய சூழல். இது பெரிய சிக்கலாக மாறியது. ஆனால், வேறுவழியில்லாமல் படித்தாக வேண்டிய சூழல்.

படித்து முடித்தவுடன் பெங்களூருவில் மாதம் ரூ.14,000-க்கு வேலை கிடைத்தது. ஆனால், முஸ்தபாவின் அப்பா நம்பவில்லை. இது மோசடி என்றே நினைத்தார். ஆனால், சம்பளம் நிஜம் என்ற பிறகே சந்தோஷப்பட்டார் முஸ்தபாவின் அப்பா.

அதைத் தொடர்ந்து மோட்டரோலா நிறுவனத்தில் சேர்ந்தார். அந்த நிறுவனம் மூலம் அயர்லாந்து சென்றார். அதன்பிறகு, சிட்டி வங்கியின் சவுதி அரேபியா பிரிவில் வேலை என வறுமை விலகியது.

P.C.Mustafa
P.C.Mustafa

தோல்வியில் முடிந்த முதல் முயற்சி...

1996-ம் ஆண்டு சவுதி அரேபியாவில் இருந்த நேரம். முஸ்தபாவும் அவருடைய நண்பர்களும் இணைந்து பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான இணையதளத்தைத் தொடங்கினார்கள். அதாவது, விற்பனை செய்பவர்களையும் வாங்குபவர்களையும் ஒருங்கிணைக்கும் நிறுவனம் அது. இந்த நிறுவனத்துக்குப் பெரிய வளர்ச்சியும் இருந்தது. சில அமெரிக்க நிறுவனங்கள் வாங்குவதற்கும் முன்வந்தன. ஆனால், விற்பனை செய்யவில்லை. ஆனால், டாட்காம் பபுள் வந்த பிறகு, இந்த நிறுவனம் பெரிய சிக்கலை சந்தித்தது. சேமிப்பும் நம்பிக்கையும் கறைந்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் வேலையில் கவனம் செலுத்தத் தொடங்கினார் முஸ்தபா.

சில ஆண்டுகள் வேலை செய்த பிறகு, இந்தியாவுக்கு திரும்பலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, அதை வீட்டில் உள்ள பலரும் ஒப்புக்கொள்ளவில்லை. என்றாலும், பெங்களூரூவில் வந்திறங்கியது முஸ்தபாவின் குடும்பம். அங்கு அவருடைய உறவினர் நாஸர் அங்கு மளிகைக்கடை வைத்திருந்தார். இண்டெல் நிறுவனத்தில் வேலை. மீண்டும் ஏதாவது பிசினஸ் செய்ய வேண்டும் என்பதுதான் முஸ்தபாவின் திட்டம்.

எம்.பி.ஏ படித்திருந்ததால் என்ன செய்யலாம் என்பதைவிட எப்படிச் செய்யலாம் என விவாதத்தை சரி செய்ய முடிந்தது. ஆரம்பத்தில் சூப்பர் மார்க்கெட் தொடங்கும் திட்டம் இருந்தது. இதற்கு என்ன செய்யலாம் என்பது குறித்து கடுமையாக யோசித்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு தெளிவு கிடைத்தது. பன்னாட்டு நிறுவனங்கள் இல்லாத தொழிலாக இருக்க வேண்டும். அதே சமயம், வேகமாக வளர்ச்சி அடையும் தொழிலாகவும் இருக்க வேண்டும் என சில வரையறைகளைத் தனக்குள் நிர்ணயித்துக்கொண்டார் முஸ்தபா.

அப்போது நாஸரின் மளிகைக் கடைக்கு வரும் மாவு பாக்கெட் தரம் இல்லாமலும், சுகாதாரம் இல்லாமலும் இருந்தது. அப்போது உருவான ஐடியாதான் ஐ.டி நிறுவனம். ரூ.50,000 முதலீட்டில் 50 சதுர அடியில் ஐடி உருவானது ஐடி ஃப்ரெஸ் ஃபுட்ஸ். இட்லி, தோசை என்பதன் சுருக்கம்தான் ஐடி.

இட்லி
இட்லி

வெடித்த மாவு பாக்கெட்...

``நாங்கள் நிறுவனத்தைத் தொடங்கிவிட்டோம். போதிய அளவு இடமில்லை என்பதால், தினமும் அரிசி வாங்கி, மாவாக அரைத்து விற்போம். ஒரு நாள் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து போன் வந்தது. ``உங்கள் மாவு பாக்கெட் வெடிக்கிறது; கொஞ்சம் அவசரமாக வரவும்’’ எனக் கடைக்காரர் அழைத்தார். நாங்கள் உடனே சென்று பார்த்து, கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருந்தோம். எல்லாம் சரியாகிவிடும் என்று கடைக்காரருடன் இன்னொரு பாக்கெட்டும் வெடித்தது. அப்போதுதான் நொதித்தல் (fermentation) என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொண்டோம். இப்படி பல பிரச்னைகள் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொண்ட பிறகு அந்தத் தொழிலை செய்ய யாரும் முன்வர மாட்டார்கள். ஆனால், நாங்கள் அந்தத் தொழிலில் தைரியமாக இறங்க முடிவு செய்தோம்’’ என்று சொல்லி இருக்கிறார் முஸ்தபா.

அதன் பிறகு இட்லி, மாவு விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியது. 1,000 கடைகள் என்று இலக்கு வைத்தார் முஸ்தபா. இதைத் தொடர்ந்து இருக்கும் சேமிப்பை வைத்து 2,000 கிலோ உற்பத்தித்திறன் கொண்ட பெரிய இடத்தைப் பிடித்து, விற்பனையைப் படிப்படியாக உயர்த்தினார். ஆண்டுக்கு ரூ.10 கோடி அளவுக்கு விற்பனை உயர்ந்தது.

சென்னையில் கற்ற பாடம்...

பெங்களூருவில் நல்ல பெயர் கிடைத்தது. அடுத்து என்ன? சென்னைதான். சென்னையில் அனைவரும் காலையில் சாப்பிடும் உணவு இட்லி, தோசைதான். எனவே, சென்னைக்கு வந்தால் பிசினஸை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்லலாம் என்று திட்டமிட்டார் முஸ்தபா.

அதனால் 2010-ம் ஆண்டு சென்னையில் ஆலை அமைத்தார். இதுவரை தொழிலில் கிடைத்த மொத்த லாபத்தையும் சென்னையில் முதலீடு செய்தார். எங்களுடைய உயரதிகாரிகள் குழுவும் சென்னையில் கவனம் செலுத்தியது. ஆனால், சென்னையில் இட்லி, மாவை விற்பது அவ்வளவு சுலபமாக அவருக்கு இருக்கவில்லை.

ஐடி ஃப்ரெஷ் ஃபுட்ஸ் (ID Fresh Foods)
ஐடி ஃப்ரெஷ் ஃபுட்ஸ் (ID Fresh Foods)

சென்னையில் கடும் போட்டி இருந்தது. தவிர, ரேஷன் அரிசி குறைந்த விலையில் கிடைத்ததால், குறைந்த விலையில் இட்லி, மாவு தயார் செய்து பல ஆயிரம் பேர் விற்றுக் கொண்டிருந் தார்கள். அதனால், ஒரு கிலோ மாவை அவர்களால் ரூ.20-க்கு விற்பனை செய்ய முடிந்தது. ஆனால், குறிப்பிட்ட விலையில் அரிசியை வாங்கித்தான் இந்த நிறுவனம் இட்லி மாவைத் தயாரித்து வந்தது. இதனால், ஒரு கிலோ இட்லி மாவை ரூ.45-க்கு விற்று வந்தது. எப்படியாவது சென்னை மக்களின் மனதில் இடம்பிடித்துவிடலாம் என்று மொத்த கவனத்தையும் சென்னையில் குவித்ததால், பெங்களூரு செயல்பாடும் பாதிப்படைந்தது.

அசீம் பிரேம்ஜி செய்த முதலீடு...

கையில் பணம் இல்லை. தொழில் பாதிப்படைந்து, வருமானமும் குறைந்தது. அப்போது எந்த முதலீட்டாளர்களும் முதலீடு செய்ய முன்வரவில்லை. வட்டிக்குக் கடன் வாங்கி தொழிலை நடத்தலாம் என்கிற யோசனையை சிலர் சொன்னார்கள். ஆனால், இஸ்லாம் மதக் கோட்பாடுகளில் ஆழ்ந்த பற்றுடைய முஸ்தபாவுக்கு வட்டி கொடுப்பது அல்லது வாங்குவதில் உடன்பாடே இல்லை. அதனால் வேறு வழியில்லாமல் சென்னை ஆலையை விற்றார். மிக, மிக கஷ்டப்பட்டுத்தான் இந்த முடிவை எடுத்தார் முஸ்தபா. (பிற்பாடு சென்னையிலும் சிறப்பாக பிசினஸ் செய்யத் தொடங்கினார் என்பது வேறு கதை)

அசீம் பிரேம்ஜி
அசீம் பிரேம்ஜி
vikatan

2014-ம் ஆண்டு ஹீலியன் வென்ச்சர்ஸ் நிறுவனம் முதலீடு செய்ய முன்வந்தது. (தற்போது சீரியஸ் D வரை நிதி திரட்டி இருக்கிறது. பிரேம்ஜி இன்வெஸ்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன!).

ஆரம்பத்தில் மாவு மட்டுமே விற்பனை செய்த, ஐடி, தற்போது பரோட்டா, சப்பாத்தி, காபி, வடை, பனீர், தயிர் உள்ளிட்ட பல பொருள்களை விற்பனை செய்கிறது. தவிர, இந்தியாவின் முக்கியமான நகரங்கள், அமெரிக்கா, யு.ஏ.இ உள்ளிட்ட நாடுகளின் முக்கியமான நகரங்களுக்கும் தனது தயாரிப்பை ஐடி நிறுவனம் ஏற்றுமதி செய்கிறது.

அன்று மெழுகுவத்தி விளக்கு வெளிச்சத்தில் படித்தவர், தற்போது பலருக்கும் கலங்கரை விளக்கமாக இருக்கிறார்!

(திருப்புமுனை தொடரும்)