``என் சாப்பாட்டுக்காக மாதம் 15 ஆயிரம் ரூபாய் கவர்னர் மாளிகைக்குக் கொடுத்துவருகிறேன்'' - தமிழிசை

தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசையிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

Published:Updated:
தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்
0Comments
Share

``மக்களுக்குப் பணியாற்றுவதே எனது நோக்கம். நான் ஒரு பெண் என்பதாலேயே என்மீது தெலங்கானா மாநில அரசு பாரபட்சமாக நடந்துகொள்கிறது. ஒரு பெண் கவர்னர் எப்படி நடத்தப்பட்டார் என்பது மாநில வரலாற்றில் எழுதப்படும்” என அதிரடியான ஸ்டேட்மென்ட்டை சமீபத்தில் வெளியிட்டு பரபரப்பைப் பற்றவைத்தார், தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

தமிழிசை சௌந்தரராஜன் - சந்திரசேகர ராவ்
தமிழிசை சௌந்தரராஜன் - சந்திரசேகர ராவ்

``பாஜக தலைவர்போலச் செயல்படுகிறீர்கள் என உங்கள்மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு உங்களின் நேரடியான பதில் என்ன?''

``எங்களுடைய கடந்தகால அரசியல் வாழ்க்கையை வைத்து அப்படிச் சொல்கிறார்கள். நான் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களைச் சந்திப்பதோ, அவர்களுடன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதோ இல்லை. என் கருத்துகளை நான் வலிமையாகச் சொல்வதால் அப்படி விமர்சிக்கிறார்கள். அரசியல் சாராமல்தான் நடந்துகொள்கிறோம். தவிர ஆளுநர் பதவி என்பது சும்மா தூக்கிக் கொடுக்கப்படுவதில்லை. திறமையாலும், பொதுவாழ்வு அனுபவத்தாலும்தான் அமரவைக்கப்படுகிறார்கள். அதனால், ஆளுநர் எப்படிப் பேசலாம், அவர்கள் எக்ஸ்ட்ரா லக்கேஜ், ஆட்டுக்குத் தாடி எதற்கு என்று பேசுவதெல்லாம் தவறான அணுகுமுறை. ஆளுநர்கள் ஏதாவது கருத்து சொன்னால், `மக்களிடம் ஓட்டு வாங்கிவந்திருந்தால்தானே தெரியும்’ என்றெல்லாம் பேசுகிறார்கள். மக்கள் வாக்களித்துத் தேர்வு செய்த ஓர் அரசாங்கத்தின் மூலம்தான் நாங்கள் பதவிக்கு வருகிறோம். எங்களின் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால், எதிர்க்கருத்து சொன்னால் மதிக்க மாட்டேன் என்று சொல்வதில் என்ன கருத்துச் சுதந்திரம் இருக்கிறது?''

``ஆளுநரின் எல்லையைத் தாண்டி அரசாங்க விஷயத்தில் நீங்கள் தலையிடுகிறீர்கள் என்கிற விமர்சனங்கள் உங்கள்மீது முன்வைக்கப்படுகின்றனவே?''

``ராஜ் நிவாஸில் மிகப்பெரிய பங்களா இருந்தும் ஒரேயோர் அறையில்தான் நான் தங்கியிருக்கிறேன். ஆளுநராகத் தனி விமானம் பயன்படுத்த முடியும். ஆனால், நான் ஹெலிஹாப்டர் பயன்படுத்துவது கிடையாது. நான் விமானத்தில் செல்லும்போது இரண்டு உதவியாளர்கள், இரண்டு காவல் அதிகாரிகள், ஒரு பணிப்பெண் என ஐந்து பேரை அழைத்துச் செல்லலாம். ஆனால், நான் ஒரேயொருவரைத்தான் அழைத்து வருகிறேன். தெலங்கனா, பாண்டிச்சேரி இரண்டு இடங்களிலும் என் சாப்பாட்டுக்கு ஆகும் செலவு 15 ஆயிரத்தையும் நான் கொடுத்துவிடுகிறேன். கூடுதலாக, விருந்தினர்கள் வந்தால் அவர்களுக்கு ஆகும் செலவையும் கொடுத்துவிடுகிறேன். புதுவையில் கொரோனா காலத்தில், கவர்னர் ஆட்சி நடந்தபோது மூன்று மாதங்கள் நான் ஒழுங்காக தூங்கவேயில்லை. அந்த அளவுக்கு மக்களுக்காகப் பணி செய்திருக்கிறேன். தெலங்கானாவிலும் ஆக்கபூர்வமான பல பணிகளைச் செய்திருக்கிறேன். ஆனால், ஆளுநர் தலையிடுகிறார் என்று விமர்சிக்கிறார்கள். நான் தலையிட்டு மக்களுக்கு நல்லது நடக்கும்போது நான் ஏன் தலையிடக் கூடாது. கவர்னர்கள் தலையிடக் கூடாது என அரசமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் சொல்லவில்லை.''

ஜெ.பி.நட்டா, மோடி, அமித் ஷா
ஜெ.பி.நட்டா, மோடி, அமித் ஷா

``தெலங்கானா முதல்வர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடியிடம் நீங்கள் புகார் செய்திருப்பதாகச் செய்திகள் வெளியானதே?''

``புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. வழக்கமாக, ஒவ்வொரு மாதமும் மாநிலத்தில் நடக்கும் விஷயங்கள் குறித்து ரிப்போர்ட் அனுப்புவோம். அதில், எது சுமுகமாக நடந்தது, எது நடக்கவில்லை என்பது குறித்துக் குறிப்பிட்டிருப்போம். இதுமட்டுமல்ல, நான் ஏதாவது பேசினால்கூட, அமித் ஷா சொல்லிக்கொடுத்தபடி பேசுகிறார், பிரதமர் சொல்லிக்கொடுத்துப் பேசுகிறார் என்று சொல்கிறார்கள். நாங்கள் யாரும் சொல்லிக்கொடுத்துப் பேசவில்லை. சுய அறிவு உடையவர்கள், தன்னிச்சையாகச் செயல்படும் ஆற்றல் உள்ளவர்கள்.''

`` `ஒரு பெண் என்பதாலேயே என்மீது தெலங்கானா மாநில அரசு பாரபட்சமாக நடந்து கொள்கிறது' என்று கூறியிருந்தீர்கள்... அதற்கான காரணம் என்ன?''

``நான் தெலங்கானா கவர்னராகப் பதவியேற்பதற்கு முன்புவரை அங்கு பெண் அமைச்சர்களே கிடையாது. காலையில் நான் பதவியேற்கிறேன். மாலையில் இரண்டு பெண்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தேன். பெண் மேயர்களையெல்லாம் அதற்குப் பிறகுதான் நிறுத்தினார்கள். எனக்கு முன்பாக இருந்த கவர்னரை எப்படி நடத்தினார்க்ள், என்னை எப்படி நடத்துகிறார்கள் என்று பார்த்தாலே அதை அறிந்துகொள்ள முடியும். எனக்கு முன்பாக இருந்த கவர்னரும் தெலங்கானா அரசின் பஞ்சாயத்து சட்டத்தை மறுத்திருக்கிறார். ஆனால், அவருடன் ஒரு வாரத்துக்கு இரண்டு, மூன்று மணி நேரம் பேசினார்கள். ஆனால், என்னை மட்டும் அவமதிக்கக் காரணம் என்ன... பெண் என்கிற கார்டைவைத்துக்கொண்டு நான் எங்கேயும் பதவிக்கு வந்தது கிடையாது. என்னுடைய கடுமையான உழைப்பினால்தான் ஒவ்வொரு பதவியையும் அடைந்திருக்கிறேன். ஆனால், தெலங்கானா மக்களுக்கு சில உண்மைகள் புரிய வேண்டும். மூன்று ஆண்டுகளாக ஒரு கவர்னர் மாளிகை எப்படி நடத்தப்படுகிறது என்பது சரித்திரத்தின் பக்கங்களில் எழுதப்பட வேண்டும்.''

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

``தமிழ்நாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என்கிற அளவுக்கு எதிர்ப்புகள் இருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

``எதையும் ஜனநாயகரீதியாக அணுகலாம். ஒரு திட்டத்தைக் கொண்டுவர அரசாங்கத்துக்கு ஒரு காரணம் இருக்கிறது என்றால், அதில் உள்ள விஷயங்களை படிப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளவும், இல்லையென்றால் அதை மறுப்பதற்கும் கவர்னருக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன. அரசமைப்புச் சட்டத்தில் கவர்னர் என்று ஒரு பதவி இருக்கிறது. அவர்களுக்கென சில உரிமைகள் இருக்கின்றன. கவர்னரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்கிற வரைமுறைகள் இருக்கின்றன. எந்தவொரு விஷயத்திலும் விவாதத்துக்கு வரலாம். `பேசவே கூடாது... அப்படியே கேட்டுக்கொள்ள வேண்டும்’ என்பது சரியல்ல.''