10 ரூபாய் நோட்டு சீக்ரெட் கோடு; கை மாறிய பல கோடி பணம்; களமிறங்குகிறதா என்.ஐ.ஏ?

கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதன் பின்னணியில் ‘துபாய்’ சீக்ரெட் இருப்பதாக வந்த தகவலால், என்.ஐ.ஏ ‘டீம்’ விசாரணையில் இறங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Published:Updated:
கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்ட பணம்
கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்ட பணம்
0Comments
Share

செப்டம்பர் 29-ம் தேதி நள்ளிரவு, வேலூர் அருகே சின்னகோவிந்தம்பாடி பகுதியில், கார் ஒன்றிலிருந்து 48 பணப் பண்டல்களை கேரளப் பதிவெண் கொண்ட லாரிக்கு மாற்றிக்கொண்டிருந்தது 4 பேர் கும்பல். அந்தக் கும்பலை பள்ளிகொண்டா போலீஸார் மடக்கிப் பிடித்தனர். இதில், 14,70,85,400 ரூபாய் பணம் கட்டுக்கட்டாகப் பறிமுதல் செய்யப்பட்டு, மாவட்டக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதன் பின்னணியில் ‘துபாய்’ சீக்ரெட் இருப்பதாக வந்த தகவலால், என்.ஐ.ஏ ‘டீம்’ விசாரணையில் இறங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இது குறித்துப் பேசுகிற வேலூர் மாவட்டக் காவல்துறை அதிகாரிகள் சிலர், ‘‘சென்னையைச் சேர்ந்த நிசார் அகமது, மதுரை வசிம் அக்ரம், கேரளாவின் ஷர்புதின், அப்துல் நாசர் ஆகியோர்தான் பிடிபட்டவர்கள். இவர்கள் சென்னையிலிருந்து கேரளாவுக்குப் பணத்தைக் கடத்திச்செல்ல முயன்றனர்.

கைதுசெய்யப்பட்ட 4 பேர்
கைதுசெய்யப்பட்ட 4 பேர்

இதற்கான சென்டர் பாயிண்ட்டாக வேலூரைத் தேர்ந்தெடுத்திருந்தனர். இதில் முக்கியக் குற்றவாளி நிசார் அகமது. இவர், துபாயிலிருக்கும் தன் தந்தையின் நண்பர் ஒருவர் கொடுக்கும் ரகசிய வேலைகளை முடித்துக்கொடுத்துவிட்டுப் பணம் பெற்றுக்கொள்வாராம். இதுவும் தந்தையின் நண்பர் கொடுத்த சீக்ரெட் அசைன்மென்ட்தான். பணத்தை யார் பெறப்போகிறாரோ, அவர் தன்னிடமிருக்கும் 10 ரூபாய் நோட்டு ஒன்றை போட்டோ எடுத்து, துபாயிலிருக்கும் மீடியேட்டருக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்ப வேண்டும். அவர், நிசார் அகமதுக்கு அந்தப் படத்தை ஷேர் செய்வாராம். சொல்லும் இடத்துக்குப் பணத்தைக் கொண்டுசேர்த்தவுடன், வாட்ஸ்-அப்பில் பகிரப்பட்ட ஒரிஜினல் 10 ரூபாய் நோட்டை நிசார் அகமது கையில் வாங்கி, சீரியல் எண்ணை சரிபார்க்க வேண்டும்.

பின்னரே பணத்தைக் கைமாற்ற வேண்டும். 10 ரூபாய் நோட்டின் சீரியல் எண்தான் இந்தக் கும்பலின் சீக்ரெட் கோடு. பணம் கொண்டுவரப்பட்ட காரில் ஒரு அமைப்பின் பெயர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததால், பிடிபட்ட 4 பேரும் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டது. ஒருநாள் முழுவதும் விசாரணை நடத்தியும் அவர்கள் வாய் திறக்கவே இல்லை. முக்கிய குற்றவாளியான நிசார் அகமது மட்டும் ‘வருமான வரித்துறையினரிடம் கணக்கில் காட்டாத கலெக்‌ஷன் பணம். மேலிடத்தில் கொடுக்கச் சொன்னார்கள். வேறு எதுவும் தெரியாது’ என்றார். ‘மேலிடம் என்றால், யார்...’ என்பதற்கான பதிலைச் சொல்ல மறுக்கிறார்.

பாராட்டிய டி.ஜி.பி சைலேந்திரபாபு
பாராட்டிய டி.ஜி.பி சைலேந்திரபாபு

இவர்கள், இதற்கு முன்பு என்னென்ன வழிகளில், எத்தனை கோடிகளை கைமாற்றினார்கள், துபாயிலிருக்கும் மெயின் மீடியேட்டரின் பின்னணி என்ன, கேரளாவில் யாரிடம் ஒப்படைக்கப் பணத்தைக் கொண்டுசென்றார்கள், பின்னணியில் ஏதேனும் அமைப்பிருக்கிறதா? போன்ற சந்தேகத்துக்குரிய பல்வேறு கேள்விகளுக்கான விடையைத்தேட இப்போது என்.ஐ.ஏ அதிகாரிகளும் விசாரணையைத் தொடங்கவிருக்கிறார்கள்’’ என்றனர். இதனிடையே, இந்த வழக்கில் சிறப்பாகச் செயல்பட்டதாக பள்ளிகொண்டா காவல் நிலைய போலீஸாரை நேரில் அழைத்துப் பாராட்டியதுடன், வெகுமதி மற்றும் சான்றிதழையும் வழங்கினார் டி.ஜி.பி சைலேந்திரபாபு.