உழவர் சந்தைகள் எப்படி செயல்படுகின்றன? ஸ்பாட் விசிட்

சிறிய அளவில் காய்கறிகள் விளைவிக்கும் விவசாயிகள் இடைத்தரகர் இல்லாமல் தங்கள் பொருள்களை நேரடியாக விற்பனை செய்து வருவாய் ஈட்ட வேண்டும் என்ற நல்ல நோக்கில் 1999-ம் ஆண்டு தி.மு.க, ஆட்சியில் கொண்டு வரப்பட்டது உழவர் சந்தை திட்டம்.

Published:Updated:
தமிழகத்தின் முதல் உழவர் சந்தை
தமிழகத்தின் முதல் உழவர் சந்தை
0Comments
Share

சிறிய அளவில் காய்கறிகள் விளைவிக்கும் விவசாயிகள் இடைத்தரகர் இல்லாமல் தங்கள் பொருள்களை நேரடியாக விற்பனை செய்து வருவாய் ஈட்ட வேண்டும் என்ற நல்ல நோக்கில் 1999-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்டது உழவர் சந்தைத் திட்டம்.

வேளாண்மைத்துறையின் கீழ் நடத்தப்படும் உழவர் சந்தையில் தோட்டக் கலைத்துறையினர் சான்றிதழ் அளித்த பிறகு, விவசாயிகள் வியாபாரம் செய்ய வேண்டும்.

மதுரை அண்ணா நகர் உழவர் சந்தை
மதுரை அண்ணா நகர் உழவர் சந்தை

தமிழகத்தில் ஆட்சிகள் மாறி மாறி வந்துள்ள நிலையில் உழவர் சந்தைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. இச்சந்தைகள் மூலம் உழவர்கள் பலன் அடைந்துள்ளார்களா? எப்படி செயல்படுகிறது? என்பதை நேரில் காணச் சென்றோம்.

மதுரை

மதுரை மாவட்டத்தில் 7 உழவர் சந்தைகள் செயல்படுகிறது. அதில் மதுரை மாநகருக்குள் மட்டும் 4 உள்ளது. 14.11.1999-ல் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் தமிழகத்தில் முதன்முதலில் தொடங்கி வைக்கப்பட்ட அண்ணா நகர் உழவர் சந்தைக்குச் சென்றோம்.

அதிகாலையிலயே பரபரப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தது. மதுரையை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து விளைவித்த கீரைகள், அனைத்து வகையான காய்கறிகளும் பசுமை மாறாமல் சில மணி நேரங்களில் இச்சந்தைக்கு வந்துவிடுகிறது. சாமானிய மக்கள் முதல் பேரங்காடிக்குச் செல்லும் உயர்வருவாய் மக்கள் வரை இங்கு காய்கறிகள் வாங்க வருகிறார்கள்.

உழவர் சந்தையால் பயனுள்ளதா, வியாபாரம் எப்படி நடக்கிறது, போதிய வருவாய் கிடைக்கிறதா? என்று அங்கு வியாபாரம் செய்யும் சிலரிடம் கேட்டோம்,

ஜோதிமணி
ஜோதிமணி

விவசாயி ஜோதிமணி ``இந்த சந்தை தொடங்குன காலத்துல இருந்து இங்க யாவாரம் பண்றேன். அவ்வளவும் என் தோட்டத்துல வெளஞ்ச காய்கறிகதான். காலையில பறிச்சு உடனே இங்க கொண்டாந்துடுறோம். பஸ்ஸுல லக்கேஜ் வாங்குறதில்லை. யாவாரிகிட்டே கொறச்ச வெலைக்கு விக்குற காலமெல்லாம் போயிடுச்சு. எங்கள மாதிரி ஏழைங்களுக்காக இத்திட்டம் கொண்டு வந்த கலைஞரய்யாவை மறக்க மாட்டோம்" என்றார்.

விவசாயி பெருமாள்சாமி பேசியபோது, ``நானும் இந்த உழவர் சந்தை தொறந்த காலத்துலயிருந்து யாவாரம் பண்றேன். இத வச்சுதான் என் குடும்பம் முன்னுக்கு வந்திருக்கு. எங்களுக்கு எல்லா வசதியும் இங்க பண்ணித் தர்றாக. வட்டிக்கு கடன் வாங்குவது, திருப்பி கட்ட முடியாம சிரமப்படுறதுன்னு எந்த சோலியும் இல்லை" என்றார்.

விவசாயி பெருமாள்சாமி | உழவர் சந்தை
விவசாயி பெருமாள்சாமி | உழவர் சந்தை

உழவர் சந்தையில் அமைந்துள்ள கடைகள், செய்துள்ள வசதிகளை சுற்றிப் பார்த்தோம். கழிப்பறை வசதி, மகளிர் குழுக்களின் சிறுதானியக் கடை, டான் டீ கடை, வேளாண் பொருள்கள் விற்பனைக் கடையும் உள்ளது.

உழவர் சந்தையை மேற்பார்வையிடும் வேளாண்துறை அலுவலர்கள் ராஜா, தமிழ்ச்செல்வன் ஆகியோர் நம்மிடம் பேசும்போது, ``ஆரம்பித்த நாளிலிருந்து வெற்றிகரமாக இந்த சந்தை செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இது மட்டுமல்ல மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து உழவர் சந்தைகளும் சிறப்பாக செயல்படுது. எங்களுடைய பணி, வியாபாரம் செய்யும் விவசாயிகளை அடையாளம் காண்பது. அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வதுதான்.

தோட்டக்கலை அதிகாரிகள் நேரடியாக ஒவ்வொரு விவசாயியின் ஊருக்குச் சென்று அவர்கள் உண்மையிலயே விவசாயம் செய்கிறவர்கள்தானா என்பதை உறுதி செய்து அடையாள அட்டை கொடுப்பார்கள். அவர்களுக்கு நாங்கள் இங்கு கடை வைக்க அனுமதி கொடுப்போம். யார் எந்தக் கடையில் வியாபாரம் செய்ய வேண்டுமென்பதை குலுக்கல் முறையில் தேர்வு செய்வோம். அன்றைக்கான காய்கறி விலையை சென்ட்ரல் மார்க்கெட்டுக்கு சென்று விசாரித்து வருவோம். சில்லறை விலைக் கடையிலும் விலை விசாரிப்போம். இவை இரண்டுக்கும் நடுவிலான விலையில் விற்க இங்குள்ள உழவர்களுக்கு தெரிவிப்போம்.

வேளாண்மைத் துறை அலுவலர் ராஜா
வேளாண்மைத் துறை அலுவலர் ராஜா

ஒவ்வொரு விவசாயிக்கும் தராசுகளை நாங்களே கொடுத்து விடுவோம். சேமிப்பு பழக்கத்தை உருவாக்கியுள்ளோம். காய்கறி உற்பத்தி குறைவான காலங்களில் மொத்த வியாபாரிகளிடம் வாங்கி விற்கச் சொல்கிறோம். அரசு அறிவிக்கும் திட்டங்கள், சலுகைகள் அனைத்தையும் அவர்களுக்குத் தெரிவிக்கிறோம்.

சாதாரண நாள்களில் 85 கடைகளும் சனி, ஞாயிறுகளில் 95 கடைகளும் செயல்படுகின்றன. 150 விவசாயிகள் வரை கடை போட இடமுள்ளது. இங்கே சுய உதவிக்குழுவினர், உழவர் உற்பத்தியாளர் குழுவினர் கடைகள் அமைத்துள்ளனர்.

தமிழ்ச்செல்வன்
தமிழ்ச்செல்வன்

கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கிக் கொள்ளலாம். வேறு எந்த பிரச்னையும் அவர்களுக்கு கிடையாது. கொரோனா காலத்தில் பொருள்களை விற்பவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்று அடையாள அட்டை கொடுத்து குடியிருப்புப் பகுதியில் விற்பனை செய்ய சொன்னோம். இந்த உழவர் சந்தையின் வெற்றியைப் பற்றி சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் சிறிய வாடகை வீட்டில் வசித்த விவசாயிகள் சொந்த வீடு கட்டி நிறைவாக இருக்கிறார்கள்" என்றனர்.

கோவை

கோயம்புத்தூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஆர்.எஸ்.புரம், வடவள்ளி, சிங்காநல்லூர், சுந்தராபுரம், சூலூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன. தமிழகத்தின் பெரும்பான்மையான உழவர் சந்தைகளில் இடைத்தரகர்கள், அரசியல் கட்சிகளின் ஆதிக்கம் அதிகம் இருக்கின்றன.

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதைப் போல உழவர் சந்தையில், உழவர்களைத் தவிர எல்லாருமே இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கோவை உழவர் சந்தை
கோவை உழவர் சந்தை

இதுகுறித்து சாதி, மதம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி பேசியபோது, ``உழவர் சந்தைகள் விதியின்படி நுகர்வோர் பயனுக்காக மொத்த விற்பனை விலையில் இருந்து 20 சதவிகிதம் குறைவாகக் கொடுக்க வேண்டும். அதேபோல விவசாயிகளுக்காக மொத்த விற்பனையில் இருந்து 20 சதவிகிதம் அதிகப்படுத்த வேண்டும். அதாவது, பெரிய சந்தைகளில் இருக்கும் சராசரி விலையை அதிகமாகவும், டிப்பார்ட்மென்ட் ஸ்டோர் உள்ளிட்ட கடைகளை விட குறைவாகவும் கொடுக்க வேண்டும்.

இடைத்தரகர்களை தவிர்ப்பதுடன், விவசாயிகள் மற்றும் நுகர்வோர் இருவரும் பயனடைவார்கள் என்பதற்காகத்தான் இந்தத் திட்டம். உழவர் சந்தை ஆரம்பிக்கப்பட்டபோது, உழவர்கள் மூலம் நேரடியாக வரும் காய்கறிகளையெல்லாம் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் உட்பட மக்கள் பலரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.

கந்தசாமி
கந்தசாமி

உழவர்கள் மட்டுமே அங்கு நேரடியாக விற்பனை கொண்டிருந்தவரை, வியாபாரிகளெல்லாம் உள்ளே வர முடியாத நிலை இருந்தது. அப்படியிருந்த உழவர் சந்தைகளில், இப்போது 10 சதவிகித உழவர்கள்கூட இல்லை. 40 கி.மீ தொலைவுக்குள் விளையும் காய்களை விற்க வேண்டும் என்பதுதான் விதி. இப்போது உழவர்களாக இல்லாதவர்கள் 100 கி.மீ தொலைவில் இருந்து வாங்கிட்டு வந்து விற்கின்றனர்.

சில நேரம் பெரிய பெரிய டிப்பார்ட்மென்ட் ஸ்டோர், பழமுதிர் நிலையங்களைவிட அதிக விலைக்கு விற்கின்றனர். உழவர் சந்தை எதற்காக ஆரம்பிக்கட்டதோ, அதன் நோக்கம் வேறு பாதையில் பயணிக்கத் தொடங்கி பல ஆண்டுகளாகிவிட்டன” என்றார்.