நிர்வாண டார்ச்சர்; மனைவியுடன் மோதல்... மலேசியப் பெண்ணுடன் உறவு - 64 பக்க கடிதத்தில் கதறிய ஹரி நாடார்

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டதும் தன்னை ஜாமீனில் எடுப்பதற்காக மலேசியாவிலிருந்து வந்த பெண், தன் சொந்தப் பணத்தை செலவு செய்து, வழக்கறிஞர்கள் மூலம் முயற்சி மேற்கொண்டுவருவதாக ஹரி நாடார் குறிப்பிட்டிருக்கிறார்.

Published:Updated:
ஹரி நாடார்
ஹரி நாடார்
0Comments
Share

கழுத்து நிறைய நகைகளுடன் நடமாடும் நகைக்கடையாக வலம் வந்தவர், ஹரி நாடார். அவர் உடலில் ஏழு கிலோ நகை எப்போதும் இருக்கும். தனக்கு நகைகள் அணிவதற்கு மிகவும் பிடிக்கும் என பலமுறை அவரே தெரிவித்திருக்கிறார். ஒல்லியான தேகத்துடன் வெள்ளி பேன்ட், ஜிப்பா அணிந்து நகைகளுடன் அவர் வலம் வருவதைப் பார்க்கவே கூட்டம் கூடுவது வழக்கம்.

ராக்கெட் ராஜா தலைமையிலான பனங்காட்டுப் படை கட்சியில் இணைந்து அதன் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்ட ஹரி நாடார், அரசியலிலும் கலக்கினார். நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் முதன்முதலாகக் களமிறங்கிய அவர் மூன்றாம் இடத்தைப் பிடித்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 37,727 வாக்குகள் பெற்று பலரின் கவனத்தையும் பெற்றார்.

மோசடிப் புகாரில் கைது!

ராக்கெட் ராஜாவுடன் சேர்ந்த பின்னர் அவர்மீது கட்டப்பஞ்சாயத்து புகார்கள் வரத் தொடங்கின. சீமானுக்கு எதிராக வீடியோ வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை விஜயலட்சுமியை மிரட்டி தற்கொலைக்குத் தூண்டியதாகவும் ஹரி நாடார்மீது வழக்கு நிலுவையில் இருக்கிறது.

கழுத்து நிறைய நகைகளுடன் ஹரி நாடார்
கழுத்து நிறைய நகைகளுடன் ஹரி நாடார்

இந்த நிலையில், வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலதிபர்களைக் குறிவைத்து பண மோசடியில் ஈடுபட்டதாக அவர்மீது பரபரப்புக் குற்றச்சாட்டு எழுந்தது. பணத்தேவையில் இருக்கும் தொழிலதிபர்களுக்கு 6 சதவிகிதத்துக்கு வட்டிக்குப் பணம் கொடுப்பதாகத் தெரிவித்து, முதலிலேயே இரண்டு சதவிகிதம் கமிஷன் பெற்றுக்கொள்வதாகவும்... பின்னர் கடன் பெற்றுக் கொடுக்காமல் ஏமாற்றுவதாகவும் புகார் வந்தது.

பெங்களூரைச் சேர்ந்த வெங்கட்ராமன் சாஸ்திரி என்பவருக்கு ரூ.360 கோடி கடன் வாங்கிக் கொடுப்பதாகச் சொல்லி புரோக்கர் கமிஷனாக 7.2 கோடி ரூபாயை வாங்கியிருக்கிறார். அதன் பின்னர் கடன் தொகையைக் கொடுக்காமல் நீண்டகாலம் இழுத்தடித்ததால் கமிஷனாகக் கொடுத்த பணத்தை அவர் திருப்பிக் கேட்டிருக்கிறார். அதையும் கொடுக்காததால் வெங்கட்ராமன் பெங்களூரு குற்றப்பிரிவில் புகார் செய்தார்.

3,893 கிராம் தங்க நகை, ரூ.8.76 லட்சம் ரொக்கப் பணம், ஒரு கார் பறிமுதல் செய்தோம்.
பெங்களூரு குற்றப்பிரிவு காவல்துறை

அந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஹரி நாடாரையும், அவரின் கூட்டாளிகளையும் கேரள மாநிலத்திலுள்ள ரிசார்ட்டில் வைத்து கைதுசெய்தனர். அவரிடமிருந்து 3,893 கிராம் தங்க நகைகள், ரூ.8.76 லட்சம் ரொக்கப் பணம், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது. கூட்டாளிகளிடமிருந்து இரு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

மனைவி ஷாலினி... காதலி மஞ்சு!

நெல்லை மாவட்டம், மேல இலந்தைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஹரி நாடார், கேரளாவில் வசித்துவந்த ஷாலினி என்பவரை மணமுடித்தார். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். கடந்த சில வருடங்களாக ஹரி நாடார் மலேசியா நாட்டைச் சேர்ந்த தமிழ்ப் பெண் ஒருவருடன் பழகி வந்தார்.

ஹரி நாடார்
ஹரி நாடார்

பின்னர் இருவரும் கணவன், மனைவியாக வாழத் தொடங்கியதால் ஷாலினியுடன் பிரச்னை ஏற்பட்டது. அதனால் தன் மனைவியைப் பிரிய முடிவெடுத்த ஹரி நாடார், விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்த நிலையில், தன்னைக் கணவருடன் சேர்த்துவைக்க வேண்டும் என்று ஷாலினி நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறார்.

இதற்கிடையே, ஷாலினிக்கும் மலேசியப் பெண்ணுக்குமிடையே தொலைபேசியில் அடிக்கடி மோதல் ஏற்பட்டது. இருவரும் அதன் ஆடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள். ஆபாசமாகவும் அருவருப்பாகவும் இருவரும் சண்டையிடும் ஆடியோக்கள் சூட்டைக் கிளப்பிய நிலையில், மலேசியப் பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது. ஹரி நாடாரும் அதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

மனைவிக்கு எழுதிய கடிதம்
மனைவிக்கு எழுதிய கடிதம்

ஷாலினிக்கும் ஹரி நாடாருக்கும் இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்னையைச் சுமுகமாகத் தீர்க்க குடும்பத்தினர் மேற்கொண்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை. இந்தச் சூழலில் ஹரி நாடார் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் அவரைச் சிறையிலிருந்து வெளியே கொண்டுவருவதற்காக சட்டப் போராட்டத்தில் மலேசியப் பெண் இறங்கியிருக்கிறார். அதற்காக பெங்களூரு நகரில் தங்கியிருந்து வழக்கறிஞர்கள் மூலம் முயன்றுவருகிறார்.

பரபரப்புக் கடிதம்!

பெங்களூரு சிறையிலிருக்கும் ஹரி நாடார், சிறைக் கண்காணிப்பாளர் வழியாக அவர் மனைவி ஷாலினிக்கு 64 பக்கங்கள்கொண்ட கடிதத்தைக் கைப்பட எழுதியிருக்கிறார். அதில், ஷாலினியை முதன்முதலாக பெரியம்மாவுடன் சென்று அவர் வேலை செய்த துணிக்கடையில் வைத்துப் பார்த்தது, அதன் பின்னர் திருமணம் செய்துகொண்டது என அனைத்தையும் குறிப்பிட்டிருக்கிறார்.

பரபரப்புக் கடிதம்
பரபரப்புக் கடிதம்

தன்னுடைய தந்தை, தாயை ஷாலினி சரிவர கவனிக்கவில்லை என்று குறிப்பிட்டிருக்கும் ஹரி நாடார், மகன் சிறு வயதாக இருந்தபோது பொறுப்புடன் பராமரிக்கத் தவறியதால், கொதிக்கும் பால் உடலில் பட்டுவிட்டதாக வருத்தத்துடன் குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன், மகனுடன் தற்கொலை செய்யப்போவதாக அடிக்கடி மிரட்டல் விடுத்து தன்னை மன அழுத்தத்துக்கு உள்ளாக்கியதாகவும் ஷாலினிமீது வருத்தப்பட்டிருக்கிறார்.

அதே சமயம், விமானப் பயணத்தின்போது சந்தித்த மலேசியாவைச் சேர்ந்த பெண் தன் மனதைக் கவர்ந்துவிட்டதாகவும் அதன் பின்னர் அடிக்கடி கிளப், பார்ட்டிகளில் சந்தித்தபோது நெருக்கம் ஏற்பட்டதாகவும் மனைவிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஹரி நாடார்
ஹரி நாடார்

தனக்கும் அந்தப் பெண்ணுக்கும் திருமணமாகிவிட்டதாகவும், அதன் அடையாளமாக இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாகவும் தெரிவித்திருக்கும் ஹரி நாடார், பாஸ்போர்ட் இல்லாததால் தன் குழந்தைகளின் முகத்தைக்கூடப் பார்க்க முடியவில்லை என வேதனை தெரிவித்திருக்கிறார். மலேசியப் பெண்ணைச் சந்தித்த பிறகே தன் வாழ்க்கையில் வசந்தம் வீசியதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்

ராக்கெட் ராஜாமீது புகார்!

மோசடிப் புகாரில் பெங்களூரு குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்த பின்னர் தன்னை அடித்து, உதைத்து டார்ச்சர் செய்ததாகக் கடிதத்தில் தெரிவித்திருக்கும் ஹரி நாடார், தன்னிடம் ஆறு கார்கள் இருந்த நிலையில், அந்த கார்களை கேட்டு போலீஸ் துணை ஆணையர் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி லத்தி, ஹாக்கி மட்டையால் முதுகிலும் பின்புறத்திலும் அடித்துக் கொடுமைப்படுத்தியதை வீடியோ எடுத்ததாகத் தெரிவித்திருக்கிறார்.

என்னை நிர்வாணப்படுத்தி லத்தி, மட்டையால் கடுமையாகத் தாக்கினார்கள்.
ஹரி நாடார்

தன்னுடைய சொந்தச் சம்பாத்தியத்தில், தன் பெயரில் வாங்கிய கார்கள் ராக்கெட் ராஜாவிடம் இருப்பதால் அவற்றைக் கொடுக்க முடியவில்லை. கார்கள் தராததால் போலீஸார் அடித்து டார்ச்சர் செய்தார்கள். அதனால் கார்களைத் தருமாறு ராக்கெட் ராஜாவிடம் பலர் வழியாகத் தொடர்புகொண்டும் அவர் கொடுக்க மறுத்துவிட்டதன் காரணமாகவே தனக்கு போலீஸார் மூலம் அவமானம் ஏற்பட்டதாக ஹரி நாடார் வேதனைப்பட்டிருக்கிறார்.

மனைவி ஷாலினி, மகன், மலேசியப் பெண், பனங்காட்டுப்படை கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா எனப் பலரைப் பற்றியும் கடிதத்தில் ஹரி நாடார் குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன், தன்னுடைய கடந்த காலத்து நினைவுகளையும் பதிவுசெய்திருக்கிறார்.

ஹரி நாடாரின் கடிதம்
ஹரி நாடாரின் கடிதம்

சிறையிலிருந்து 64 பக்கங்கள்கொண்ட இந்தக் கடிதத்தை மனைவி ஷாலினிக்கு அவர் எழுதியதற்குக் காரணம் என்ன என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மலேசியாவைச் சேர்ந்த பெண்ணை சட்டப்படி திருமணம் செய்ய வேண்டுமானால் ஷாலினியிடமிருந்து விவாகரத்து பெற வேண்டும். அதனால் மனைவி ஷாலினியை விவாகரத்துக்கு சம்மதிக்கவைக்கும் முயற்சியாக உருக்கத்துடன் இந்தக் கடிதத்தை ஹரி நாடார் எழுதியிருக்கக்கூடும் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.