Suryakumar Yadav: இந்தியாவின் Mr.360; இந்த SKY-க்கு வானமே எல்லை - போராடி வென்ற சூப்பர் சூர்யகுமார்!

ஒரு நல்ல தொடக்கத்தைத் தொடர்ந்து ஆட வந்தாலும் சரி, விக்கெட்டுகளின் சரிவில் ஆட வந்தாலும் சரி, சூர்யாவின் ஆட்டம் சூர்யாவின் ஆட்டம்தான்! ஒரு டி20 அணிக்கு சூர்யா போன்ற வீரர் ஒரு பொக்கிஷம்.

Published:Updated:
Suryakumar Yadav
Suryakumar Yadav ( AP )
0Comments
Share
கடந்த ஆண்டு வரை இந்திய அணியில் இடம்பெறாத சூர்யகுமார் யாதவ், தற்போது உலகக் கோப்பை அணியில் தவிர்க்க முடியாத ஒரு பெயராக உள்ளார். பெரிய வீரர்களான கோலி, ரோஹித் முதல் இளம் வீரர்கள் வரை அணியில் இடம்பெறுவதில் நிறைய விமர்சனங்கள் இந்த ஓராண்டுக் காலத்தில் வந்தன. ஆனால் ஒருவருக்கும் இவர் அணியில் இடம்பெறுவது குறித்து ஒரு சிறிய கேள்வி கூட இருந்தது இல்லை. அதுதான் சூர்யகுமார் யாதவ்! இன்று அவரின் பிறந்தநாள்!

2014ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடத் தொடங்கிய சூர்யகுமார் யாதவை பலருக்கும் நினைவிருக்கலாம். அப்போது கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக விளையாடினாலும் ஒரு தனித்துவமான வீரராக அவரைப் பலரும் பார்க்கவில்லை. ஆனால் ஐ.பி.எல் தொடரில் தொடர்ந்து அவர் பெயர் இடம் பெற்றுக் கொண்டே இருந்தது. விரைவில் கொல்கத்தா அணியின் துணை கேப்டனாகப் பொறுப்பேற்கும் அளவுக்கு உயர்ந்தார்.

SuryaKumar Yadav
SuryaKumar Yadav
IPL

பின்னர் 2018-ல் மும்பை இந்தியன்ஸ் அணி சூர்யாவை ஏலத்தில் வாங்கியது. ஜெர்ஸியின் நிறம் மட்டும் மாறவில்லை, அவர் ஆடும் பொசிஷனும் ஒரு மாற்றம் கண்டது. கொல்கத்தாவில் பெரிதாய் மிடில் ஆர்டரில் ஆடிவந்த சூர்யாவிற்கு டாப் ஆர்டரில் ஆடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. மும்பைக்கு ஆடிய முதல் தொடரிலேயே 512 ரன்கள் அடித்து அனைவரின் கண்களையும் ஈர்க்கத் தொடங்கிய சூர்யா இன்று இந்திய அணியிலும் அதைத் தொடர்ந்து செய்து வருகிறார்.

ஆனால், அப்போதே இப்படித் தொடர்ந்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த சூர்யாவிற்கு அன்று இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. பொதுவாக ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடிய இளைஞர்கள் மட்டுமே இந்திய அணிக்குத் தேர்வாவது வழக்கமாக இருந்தது. ஆனால் சூர்யாவிற்கோ மும்பைக்கு ஆடத் தொடங்கிய போதே வயது 28. அந்த வழக்கத்தை மாற்றி அமைத்து இந்திய அணியில் அவர் பெயரை இடம்பெறச் செய்தார். ஆனால் அது அவருக்கு எளிதாகக் கிடைக்கவில்லை. சிறப்பாக விளையாடியும் தொடர்ந்து அவர் பெயர் அணியில் இடம்பெறாமல் இருந்தது. ஆனால் கயிற்றைக் கட்டி மரத்தை விடாமல் இழுத்தால் மரம் விழுந்துதான் ஆக வேண்டும் அல்லவா? இது போதாதென்று அதைப் பார்க்கும் மக்களின் ஆதரவுக் குரல் வேறு! இப்படியாகத்தான் அவர் 2021 மார்ச் மாதம் இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் இடம்பெற்றார்.

இங்கிலாந்து தொடரின் முதல் மூன்று போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காத சூர்யாவிற்கு நான்காவது போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. இந்திய அணிக்காக தன் முதல் பந்தை ஆடவந்த சூர்யாவிற்கு வந்து வீசியவர் ஜோப்ரா ஆர்ச்சர். ஷார்ட் பாலாக வந்த பந்தை புல் ஷாட்டில் சிக்ஸர் அடித்தார். இவ்வளவு நாள் தொடர் நிராகரிப்பிற்கு அளித்த பதில்தான் அந்த சிக்சர்.

ஆனால், அவர் வெறும் வெறும் சிக்ஸர் மட்டும் அடித்துவிட்டுச் செல்லவில்லை. அந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் பெற்று அவரின் வருகையை உலகம் அறியச் செய்தார் அந்த 30 வயது நாயகன்!
சூர்யகுமார்
சூர்யகுமார்

மொமென்டம் என்ற ஒரு விஷயம் கிரிக்கெட்டில் மிக முக்கியம். விக்கெட்டுகள் விழும் போது மொமென்டம் எதிரணிக்குத் திரும்பி விடும். அந்த மொமென்டத்தை திரும்பவிடாமல் செய்வதே சூர்யாவிடம் இருக்கும் ஒரு மிகப்பெரிய பிளஸ். எவ்வளவு விக்கெட் விழுந்திருந்தாலும் ரன் ரேட்டை பாதிக்காமல் தன் ஆட்டத்தைத் தொடர்வார். ஒரு நல்ல தொடக்கத்தைத் தொடர்ந்து ஆட வந்தாலும் சரி, விக்கெட்டுகளின் சரிவில் ஆட வந்தாலும் சரி, சூர்யாவின் ஆட்டம் சூர்யாவின் ஆட்டம்தான்! ஒரு டி20 அணிக்கு சூர்யா போன்ற வீரர் ஒரு பொக்கிஷம்.

எல்லா வீரர்களாலும் எல்லா இடத்திலும் ஆடிவிட முடியாது. நியூ பால் ஆடுவதற்கு டாப் ஆர்டர், விக்கெட்டுகளின் சரிவைச் சரி செய்து ஆடுவதற்கு மிடில் ஆர்டர், போட்டியைச் சிறப்பாக முடிக்க ஃபினிஷர்ஸ், இதில் சூர்யா எங்கு பொருந்துவார்? இவை அனைத்திலும்தான்.

ஒரு அணியின் பேட்ஸ்மேன்களைத் தேர்வு செய்யும் போது இந்த மூன்று விஷயங்களுக்கு வெவ்வேறு வீரர்களைத் தேர்வு செய்வார்கள். ஆனால், மூன்றிலும் பொருந்தும் ஒற்றை ஆளாய் சூர்யா இருக்கிறார். அணித் தேர்வில் இவரின் பெயர் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆனதற்கு இது இன்னொரு முக்கியமான காரணம்!

2022ல் சூர்யகுமார் யாதவின் ஸ்ட்ரைக் ரேட்

பவர் ப்ளே - 149

மிடில் ஓவர்ஸ் - 174

டெத் ஓவர்ஸ் - 265.30

SKY
SKY
ICC

உலகம் முழுக்க மக்களுக்கு டிவில்லியர்ஸைப் பிடிக்கச் செய்த ஒரு விஷயம் மைதானத்தின் எல்லா பக்கங்களிலும் அடிக்கக்கூடிய திறன். கிரிக்கெட்டில் அந்த ஒரு பெரிய மாற்றத்தின் மூலம் தாக்கத்தைக் கொண்டு வந்தவர் அவர்! மற்ற நாடுகளில் சிலர் அதை முயன்றாலும் இந்தியாவில் அதைப் பெரிதாக யாரும் செய்யவில்லை. அதற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சூர்யகுமார். ஸ்பின்னர் பந்தில் ஸ்வீப் ஆடுவது, உடலுக்கு வீசப்படும் ஷாட் பந்தை புல் ஷாட் அடிப்பது, வெளியில் வீசப்படும் ஷார்ட் பந்தை அப்பர் கட் அடிப்பது, கட் செய்யும் அளவுக்கு வரும் பந்துகளை கட் ஷாட் ஆடுவது, அதுபோக நேராக ஆடவேண்டிய பந்துகளை நேராகவும் ஆடுவது என்று சூர்யகுமார் கிரிக்கெட் புத்தகத்தில் இருக்கும் ஷார்ட்களின் எண்ணிக்கை ஏராளம்.

இன்று இந்திய அணியின் Mr.360 என்று அழைக்கப்படுகிறார்.

பொதுவாக கிரிக்கெட் விளையாடுவதைப் பார்க்கும் போது இவர் அவுட் ஆகிவிடுவாரோ என்ற பயம் பலவீரர்கள் விளையாடும் போதும் இருக்கும். அதற்குக் காரணம் கன்சிஸ்டன்ட்டாக விளையாடாமல் இருப்பது. சூர்யா விளையாடும் போது அந்தப் பயம் இருப்பதே இல்லை. மூன்று போட்டிகளில் விளையாடினால் அதில் குறைந்தது இரண்டு போட்டிகளில் கண்டிப்பாக ரன் அடிக்கும் திறன் கொண்டவர் சூர்யா. அதனால்தான் என்னமோ, சூர்யா ஆடும் போது அவர் பேட்டிங்கை முழுமையாக ரசிக்க முடிகிறது.

உலக டி20 தரவரிசையில் தற்போது நான்காவது இடத்தில் உள்ளார் சூர்யா. இந்திய வீரர்களில் தரவரிசையில் சிறந்த இடத்தில் இருக்கும் வீரர் சூர்யாதான். இந்த ஆண்டு மட்டும் டி20 போட்டிகளில் 567 ரன்கள் அடித்து இந்தியாவுக்கு 2022ல் அதிக ரன்கள் அடித்துள்ள வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி சூர்யாவின் இந்த ஆண்டு ஸ்ட்ரைக் ரேட் 182.31.

சூர்யகுமார்
சூர்யகுமார்

வெறும் ஒரே ஆண்டில் இந்தியாவின் ப்ளேயிங் லெவனில் நிச்சயம் இருக்க வேண்டிய ஒரு வீரராக மாறுவதெல்லாம் எளிதான காரியம் அல்ல. சூர்யகுமார் யாதவ் ஆங்கிலத்தில் SKY என்று பிரபலமாக அழைக்கப்படுவார். அதற்கு ஏற்றார் போல் 'வானமே எல்லை' என்ற எண்ணத்தில்தான் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார். தற்போது இந்திய அணியின் நிகரில்லா டி20 பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது! எல்லா இடத்திலும் தொடர்ந்து சிறப்பாக, அதிலும், மைதானத்தின் எல்லா பக்கங்களிலும் விளையாடக் கூடிய சூர்யாவை யாருக்குத்தான் பிடிக்காது?!

உன் நீண்ட கால நிராகரிப்புக்கு ஏற்கெனவே தேவையான பதில்களைச் சொல்லிவிட்டாய்... இனி இது உன் காலம்! பிறந்தநாள் வாழ்த்துகள் சூர்யா!