``காவியின் பலம் கறுப்பினால் மறைந்துவிடக் கூடாது" - வித்யாஜோதி பட்டமளிப்புவிழாவில் ஆளுநர் தமிழிசை

'மத்தியப் பிரதேசத்தில் அவர்களின் மாநில மொழியான இந்தியில் மருத்துவக் கல்வி கொண்டுவந்திருக்கிறார்கள். தமிழ்மீது அக்கறை இருந்தால் அதுபோல முயற்சி செய்து ஒரு தாய்மொழி மருத்துவக் கல்வியை இங்கு கொண்டுவந்திருக்கலாமே' என்றார் ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன்.

Published:Updated:
தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன்
தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன்
0Comments
Share

கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிமலை இந்து தர்ம வித்யாபீடம் சார்பில் கொல்லம்விளையில் நடந்த சமய வகுப்பு மாணவர்களுக்கான வித்யாஜோதி பட்டமளிப்புவிழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டார். வித்யாஜோதி பட்டத்தை வெள்ளிமலை ஆசிரம சுவாமி சைதன்யானந்தஜி மஹராஜ் வழங்கினார். பட்டம்பெற்ற மாணவிகளுக்குக் கேடயம் வழங்கி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், ``தமிழகத்தில் இந்து தர்மத்தைப் பற்றிப் பேசுவதும், ஆன்மிகத்தைப் பற்றிப் பேசுவதும் ஏதோ தவறான் ஒரு நிகழ்வுபோலவும், பேசக் கூடாத ஒன்றை பேசுவதுபோலவும் மாயத் தோற்றம் இருக்கிறது. இந்த மாயத் தோற்றம் நிச்சயமாக அகற்றப்பட வேண்டும். குமரியில் நம் பலத்தை காட்டிக்கொண்டிருக்கிறோம். இதே பலம் மற்ற இடங்களிலும் வர வேண்டும். ஆன்மிகம்தான் நம் அடிப்படை. ஆனால், காவியின் பலம் கறுப்பினால் மறைந்துவிடக் கூடாது. ஆளுநர் இப்படிப் பேசலாமா என ஒரு பெரிய கேள்வி கேட்பார்கள். ஆளுநராக இருந்தாலும், நான் தமிழகத்தின் மகள் என்பதை நினைவுபடுத்துகிறேன்.

வித்யாஜோதி பட்டமளிப்பு விழாவில் மாணவிகளுக்குக் கேடயம் வழங்கிய ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்.
வித்யாஜோதி பட்டமளிப்பு விழாவில் மாணவிகளுக்குக் கேடயம் வழங்கிய ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்.

எல்லோரின் தர்மங்களையும், நம்பிக்கைகளையும் மதிக்க வேண்டும். எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒருத்தர் இருக்கிறார். அவர் ரம்ஜானுக்கும், கிறிஸ்துமஸுக்கும் வாழ்த்துச் சொல்வார், ஆனால் தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்ல மாட்டார். நீங்கள் தமிழ்நாட்டில்தானே இருக்கிறீர்கள், அந்தப் பண்டிகைக்கும் வாழ்த்துச் சொல்லவேண்டியதுதானே என நான் கேட்டேன். ஆனால், பக்கத்து வீட்டு அண்ணனுக்கு அது தெரியமாட்டேங்குது. ஒருவரின் எழுச்சி மற்றவரின் வீழ்ச்சி அல்ல. எல்லோரின் நம்பிக்கையும் மதிக்கப்பட வேண்டும். ஆனால் பெரும்பான்மையினரின் நம்பிக்கை மட்டும் அவமதிக்கப்படும்போது நாம் எழுச்சிக்கொள்ள வேண்டும். நமது நாட்டின் பண்பாட்டை, பழக்க வழக்கங்களை சொல்லிக்கொடுப்பதில் என்ன பிரச்னை இருக்கிறது... அவர்கள் கருத்தை ஏன் திணிக்க வேண்டும்... நாம் எதாவது பேசினால் இவர்கள் எப்படிப் பேசலாம் என அம்புக்கணைகளை வீசுகிறார்கள். வேறு யார் பக்கமும் அந்த அம்பு எய்யப்படுவதில்லை.

ஆன்மிகத்துக்கும் தமிழுக்கும் சம்பந்தமே இல்லை என்றும், தமிழை வேறு யாரோ வளர்த்தார்கள் என்றும் சொல்கிறார்கள். இல்லை, நீங்களெல்லாம் வளர்ப்பதற்கு முன்னால் ஆழ்வார்களும் நாயன்மார்களும் ஆன்மிகத் தமிழாக வளர்த்தார்கள். ஆன்மிகத்தைத் தமிழிலிருந்து பிரித்தால் அது உயிரற்ற உடலுக்குச் சமம். `தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்கிறார்கள். இந்து சமூகத்துக்கு சமூகநீதி பேசும் உரிமை இல்லையென்றால், வேறு யாருக்கும் அந்த உரிமை இல்லை. வேறு யாருடைய உணர்வையும் நாங்கள் மதிக்காமல் இல்லை. ஆனால், நம் தர்மம் மதிக்கப்பட வேண்டும் என்பது என் கருத்து.

வித்யாஜோதி பட்டம் பெற்ற மாணவிகளுடன் ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன்
வித்யாஜோதி பட்டம் பெற்ற மாணவிகளுடன் ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன்

நான் தைரியமாகச் சொல்லிவிட்டுக் கோயிலுக்குப் போகிறேன். மண்டைக்காடு கோயிலுக்கும், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்கும் இன்று போவேன். ஆனால் சிலர் வீட்டில் உள்ளவர்களைவைத்து சாமி கும்பிடுவார்கள். அவர்கள் நல்ல நேரம் பார்த்து எல்லாவற்றைம் தொடங்குவார்கள். நம்மை மூடநம்பிக்கை எனச் சொல்லிவிட்டு அவர்கள் செய்வார்கள். நாம் நமது கலாசாரத்தை மீட்டெடுப்போம். நம் கலாசார அடையாளங்கள் மறுக்கப்படும்போது எதிர்த்து குரல் கொடுப்போம். பட்டமும் பட்டயங்களும் வாங்கிய மாணவிகளுக்குப் பாராட்டுக்கள்" என்றார்.

பின்னர் செய்தியாளர்கள் தி.மு.க-வின் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் பற்றி கேட்டதற்கு பதிலளித்து பேசிய ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன், "எங்குமே இந்தியைத் திணிக்கவில்லை. நாடாளுமன்ற நிலைக்குழுவினர் ஒரு சிபாரிசு செய்திருக்கிறார்கள். அதில் எங்குமே மாநில மொழியைக் குறைத்து மதிப்பிட வேண்டும் என்றோ, மாநில மொழியை மீறி இந்தியைக் கொண்டுவர வேண்டும் என்றோ சொல்லவில்லை. இதைவைத்து மட்டும்தான் அரசியல் செய்ய முடியும் என்பதற்காக இதை மறுபடியும் கையில் எடுக்கிறார்கள். `தமிழ், தமிழ்...’ என நாம் சொல்கிறோம். இன்றைக்கு மத்தியப் பிரதேசத்தில் அவர்களின் மாநில மொழியான இந்தியில் மருத்துவக் கல்வி கொண்டு வந்திருக்கிறார்கள். நீங்கள் அரசியலுக்காக மட்டும்தான் பேசுகிறீர்கள். தமிழ்மீது அக்கறை இருந்தால் அதுபோல முயற்சி செய்து ஒரு தாய்மொழி மருத்துவக் கல்வியை இங்கு கொண்டுவந்திருக்கலாமே!

ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன்
ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன்

தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழிக் கல்வியை ஊக்கப்படுத்தச் சொல்கிறார்கள். இதைச் சொன்னால் ஆளுநர் அரசியல் பேசலாமா என்கிறார்கள். இது அரசியல் இல்லை. சமூகத்தின் அவலங்களை எடுத்துச்சொல்ல எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. பிரதமர் திருக்குறள் சொன்னால், திருக்குறள் மட்டும் சொன்னால் போதுமா என்கிறார்கள். இதற்கு முந்தைய ஆட்சியாளர்கள் எத்தனை திருக்குறள் சொன்னார்கள்... உங்களுக்கு எவ்வளவு தாய்மொழிப்பற்று இருக்கிறதோ அதே தமிழ்ப்பற்று தமிழிசைக்கும் இருக்கிறது. நியாயப்படுத்திப் பேசினால் இந்தி இசை என நீங்கள் பேசுவதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். உங்கள் இத்தனை நாள் ஆட்சியில் ஒரு புத்தகம் கொண்டுவந்து, தமிழ் மொழியில் மருத்துவக் கல்லூரி கொண்டுவர முடியாதா?" என்றார்.