``அதிமுக அலுவலக சாவியை எடப்பாடியிடம் ஒப்படைக்க வேண்டும்" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஓபிஎஸ் - இபிஎஸ் என இரு தரப்பினரும் அலுவலகம் தங்களுக்குத்தான் சொந்தம் என சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினர்.

Published:Updated:
அதிமுக தலைமை கழக அலுவலகம்
அதிமுக தலைமை கழக அலுவலகம்
0Comments
Share

கடந்த ஜூலை 11-ம் தேதி சென்னை வானகரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஒற்றைத் தலைமைக்கான ஏற்பாடுகளை செய்துக் கொண்டிருக்கும்போது, ஓ.பன்னீர்செல்வமும் அவர் ஆதரவாளர்களும் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க கட்சித் தலைமை அலுவலகத்தை கைபற்றினார்கள். இதைத் தடுக்கமுயன்ற எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் ஏற்பட்ட மோதலால், ராயப்பேட்டையே கலவர பூமியானது.

இருதரப்பினரும் ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டு, கற்களையும் எறிந்து தாக்குதலில் ஈடுபட்டனர். அவ்வை சண்முகம் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு பேருந்துகள், கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இது தொடர்பாக, போலீஸார் 13 பேரைக் கைதுசெய்தனர். அதே போல, ஓ.பி.எஸ் தரப்பில் 20 பேரும், இ.பி.எஸ் தரப்பில் 20 பேரும் என 47 பேர் காயமடைந்தனர். இது குறித்து ராயப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

அதைத் தொடர்ந்து சம்பவ இடத்தை பார்வையிட்ட வருவாய் கோட்ட அலுவலர் அ.தி.மு.க அலுவலகத்துக்குச் சீல் வைத்தார். மேலும், இந்தப் பிரச்னை தீவிர சட்டம் -ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், ``கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை முடிவு செய்ய வரும் 25-ம் தேதி இரு தரப்பினரும் தாமாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராக வேண்டும்!" எனக் கூறி நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

ஆனால், ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் என இரு தரப்பினரும் அலுவலகம் தங்களுக்குத்தான் சொந்தம் என சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினர். இதனால், சீல் வைத்த தலைமை அலுவலகத்தின் சாவி யாருக்குக் கிடைக்கும் என்று பலத்த எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம், ``அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும், ஒரு மாத காலத்துக்கு தொண்டர்களை அலுவலகத்துக்குள் அனுமதிக்கக் கூடாது. அலுவலகத்துக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்" எனவும் உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து இபிஎஸ் ஆதராவாளரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "ஓ.பி.எஸ் ஐ.நா சபை சென்று முறையிட்டாலும் எடப்பாடி பழனிசாமிக்கு தான் வெற்றி" என கருத்து தெரிவித்துள்ளார்.