அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.6.5 கோடி சொத்துகள் முடக்கம் - நடவடிக்கை பாயுமா?!

2001 - 2006 ஆண்டு காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் தற்போதைய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.6.5 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

Published:Updated:
அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்
0Comments
Share

அ.தி.மு.க., தி.மு.க என மாறி மாறி அமைச்சரவையை அலங்கரிப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர் 2001-ம் ஆண்டு திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்று அ.தி.மு.க அமைச்சரவையில் கால்நடை மற்றும் வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தார். இவர் அமைச்சர் பதவியில் இருந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக அப்போதைய எதிர்க்கட்சியான தி.மு.க குற்றம்சாட்டியது. மேலும், அதற்கான ஆதரங்களையும் சேகரித்தது.

ஜெயலலிதாவுடன் அனிதா ராதாகிருஷ்ணன்
ஜெயலலிதாவுடன் அனிதா ராதாகிருஷ்ணன்

அதன் பின்னர், தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அனிதா ராதாகிருஷ்ணன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை 2006-ம் ஆண்டு வழக்கு பதிவுசெய்தது. குறிப்பாக, சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தியது.

மாநில, மத்திய அரசுப் பிரிவுகளின் இந்தக் கிடிக்குப்பிடி விசாரணை காரணமாக கடந்த 2009-ம் ஆண்டு அ.தி.மு.க-விலிருந்து விலகி தி.மு.க-வில் இணைந்தார் அனிதா. தனிப்பட்ட உள்ளூர் செல்வாக்கு அதிகமாக இருந்த காரணத்தால் அவருக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் வந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

இந்நிலையில், 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற அனிதாவுக்கு, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் அமலாக்கத்துறையின் விசாரணை பெரிய அளவில் இல்லை. இந்நிலையில்தான், 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அனிதா ராதாகிருஷ்ணன், அவருடைய குடும்பத்தினரின்  சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.

இந்த நடவடிக்கைகளால் அதிர்ந்துபோன அனிதா, சொத்துகளை முடக்கியதற்கு எதிராகவும், அமலாக்கத்துறையின் வழக்கை ரத்துசெய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. இருந்தபோதிலும், இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி மீண்டும் நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெகதீஷ் சந்திரா அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.

அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை

அப்போது, அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியும் உத்தரவிட்டனர். இந்நிலையில், ரூ. 6.5 கோடி மதிப்பிலான அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

இது தொடர்பாக அமலாக்கத்துறையின் வட்டாரத்தில் விசாரித்தபோது, ``அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிவுசெய்த நாளிலிருந்து விசாரணை நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், குற்றச்சாட்டுக்கான சரியான ஆதாரங்கள் அமலாக்கத்துறையிடம் சிக்கவில்லை. இந்நிலையில்தான், குற்றச்சாட்டை உறுதி செய்யும் அளவுக்கு சில ஆதாரங்கள் சிக்கின. அதேபோல, லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் அனிதா வழக்கு தொடுத்திருக்கிறார். இந்த வழக்கால் அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியிருக்கிறது. அதன்படிதான், ரூ.6.5 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியிருக்கிறோம். இது குறித்து முறையான விளக்கத்தை அவர் மேற்கொள்ளவில்லையென்றால் நிச்சயம் நடவடிக்கை இருக்கும்" என்றனர்.

கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் பதியப்பட்ட வழக்கு, தற்போது 2022-ம் ஆண்டு மீண்டும் தி.மு.க ஆட்சியில் தூசு தட்டப்பட்டு இருக்கிறது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையால் ஆளும் தி.மு.க-வினர் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். இது தொடர்பாக திமுக தரப்பில் நம்மிடம் சிலர் பேசுகையில், " தி.மு.க அரசை மிரட்டிப் பார்க்கும் வகையில் மத்திய பா.ஜ.க செயல்படுகிறது.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

அதனால்தான், பல ஆண்டுகளாகக் கிடப்பில் கிடந்த அனிதா ராதாகிருஷ்ணனின் வழக்கைக் கையில் எடுத்திருக்கிறது. அதேபோல, ஐ.பெரியசாமி, செந்தில் பாலாஜி, கீதா ஜீவன், கே.என்.நேரு ஆகிய சிட்டிங் அமைச்சர்களைக் குறிவைத்து மத்திய பாஜக காய்களை நகர்த்துகிறது. இந்த வழக்குகளையெல்லாம் சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்” என்றார்கள்.

தற்போதைய அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் அ.தி.மு.க-வில் இருந்தபோது அவர்கள்மீது தி.மு.க கொடுத்த புகார்களின் அடிப்படையில்தான் விசாரணை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.