அனல் பறக்கும் இலவச விவகார வழக்கு... திமுக, பாஜக சொல்வது என்ன?!

``இலவசங்களை நாங்கள் எதிர்க்கவில்லை. கேளிக்கைக்காகக் கொடுக்கப்படும் இலவசங்களைத்தான் எதிர்க்கிறோம். இது போன்ற இலவசங்கள் மக்களுக்குப் பெரிய சுமையாகத்தான் இருக்கும்.” - பாஜக

Published:Updated:
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
0Comments
Share

தேர்தலின்போது இலவசங்களை அறிவிக்க, கட்சிகளுக்குத் தடைவிதிக்க வேண்டும் எனக் கோரி பா.ஜ.க மூத்த தலைவர் அஸ்வினி உபாத்தியாய டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், `இலவச அறிவிப்புகள் பொருளாதாரச் சீரழிவை ஏற்படுத்துவதாகக் கருத்து தெரிவித்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக இணைக்கக் கோரி தி.மு.க சார்பில் அந்தக் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி

அந்த மனுவில், ``பல்வேறு தரப்பு மக்களைக்கொண்ட நாட்டில், ஒவ்வொரு பகுதி மக்களுக்கான தேவை வெவ்வேறாக இருக்கிறது. அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான திட்டம் என்பது நிச்சயம் பொருந்தாது. இதனால் மாநிலங்களுக்கு ஏற்ப மாநில அரசுகள் திட்டங்களை அறிவிக்கின்றன. இதை இலவசங்களாகக் கருத முடியாது. வருமானம், அந்தஸ்து, வசதி வாய்ப்புகளிலுள்ள ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கவும், சமூக ஒழுங்கு மற்றும் பொருளாதார நீதியைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த நலத்திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. எனவே, தேர்தலில் இலவசத் திட்டங்களை எதிர்க்கும் வழக்கில் தங்களை எதிர்த்தரப்பினராகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். இலவசங்கள் தொடர்பான வழக்கு, நாடு முழுவதும் திரும்பிப் பார்க்கும் வகையில் முக்கியத்துவமான ஒன்றாக மாறியிருக்கிறது.

சமூக வலைதளங்களில் இலவசங்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும்கூட பல்வேறு தரப்பட்ட மக்கள் கருத்துகளைப் பதிவிட்டுவருகின்றனர். இது தொடர்பாக, உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், நெல்லை மாவட்ட திமுக மாணவரணித் துணை அமைப்பாளருமான காசிராஜனிடன் கேட்டபோது, "பாமர மக்களுக்கு எல்லாவிதமான அடிப்படை வசதிகளும் கிடைக்க வேண்டும் என்று நாம் நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது... இலவசங்களுக்குத் தடை வந்தால் நாம் மக்களுக்குச் செய்ய வேண்டிய திட்டங்களைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும். இதனாலேயே தி.மு.க இந்த விவகாரத்தில் தங்களை எதிர் மனுதாரராகச் சேர்க்க உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறது. தலைவர் கொண்டுவந்த திட்டங்கள் கனவுத் திட்டங்களாக நிறைய இருக்கின்றன. இலவசங்களை தி.மு.க மட்டும் கொடுக்கவில்லை. அ.தி.மு.க-வும்தானே கொடுத்தது... தமிழ்நாட்டில் மட்டும் கிடையாது, எல்லா மாநிலங்களிலும் அந்தந்த மாநில மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு ஏற்ப இலவசங்கள் வழங்கப்பட்டுவருகின்றன.

வழக்கறிஞர் காசிராஜன் - திமுக
வழக்கறிஞர் காசிராஜன் - திமுக

இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் எத்தனையோ இலவசங்கள் வழங்கப்பட்டது. தி.மு.க மட்டுமே இலவசங்களை கொடுக்கிறது என்பது தவறான கருத்து. இலவசங்களுக்குத் தடை வாங்குவதாலோ, கொடுக்கக்கூடாது என்று சொல்வதாலோ யாருக்கு என்ன பயன் ஏற்பட்டுவிடப்போகிறது... இலவசங்கள் நிறுத்தப்படுமானால் அது மக்களுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும். தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.க ஒவ்வொருவரின் கணக்கிலும் 15 லட்சம் செலுத்தப்படும் என்று கூறித்தானே ஆட்சிக்கு வந்தார்கள்... அவர்களை எப்படி இலவசங்களுக்கு எதிரான கட்சி என்று நாம் கூற முடியும்... இதில், தி.மு.க அனைத்துக் கட்சிகளுக்கும் முன்னோடியாக இருக்கிறது" என்றார்.

தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டபோது, "இலவசம் என்பதே மக்களை வாக்களிக்கச் செய்வதற்கான தந்திரம். ஆனால், கல்வி, சுகாதாரத்தை ஊக்குவிக்கச் செய்யக்கூடியதை இலவசம் என்று கொச்சைப்படுத்துவது தவறான விஷயம். மடிக்கணினி, காப்பீடு உள்ளிட்டவையெல்லாம் மக்களின் நலன் கருதிச் செய்யப்படக்கூடியவை. ஆனால், கலர் டி.வி., கிரைண்டர், வாஷிங் மெஷின், பேன் போன்றவற்றை கொடுப்பதைத்தான் எதிர்க்கிறோம். இலவசங்கள் என்பதே மக்களின் வரிப்பணத்திலிருந்துதான் கொடுக்கப்படுகின்றன.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

இலவசங்களை வாங்குவதிலேயே ஊழல்கள் நடந்துவருகின்றன. இலவசங்கள் கொடுக்கக் கூடாது என்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. கேளிக்கைக்காகக் கொடுக்கப்படும் இலவசங்களைத்தான் எதிர்க்கிறோம். இது போன்ற இலவசங்கள் மக்களுக்குப் பெரிய சுமையாகத்தான் இருக்கும். தமிழகத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவசங்களில் எத்தனை கோடி ஊழல் நடந்தது என்பதை நாம் பார்த்தோம். இலவசங்களைக் கொடுப்பவர்கள், தங்களின் பாக்கெட்டுகளை நிரப்பிக்கொள்ளச் செய்யும் ஒரு மோசடியே இது" என்றார்.

இதற்கிடையே இலவசங்கள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. தி.மு.க சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன் தன் தரப்பு வாதத்தை முன்வைத்தார்.

தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ``தேர்தல் சமயங்களில் இலவசமாகத் தொலைக்காட்சிப்பெட்டிகள், சேலைகள் வழங்கப்படுகின்றன என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இலவசங்கள் என்றால் என்ன... நலத்திட்டங்கள் என்றால் என்ன என்பதை எங்களால் நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

தி.மு.க மட்டும்தான் மிகவும் சாதுர்யமான, புத்திசாலித்தனமான கட்சி என்று நினைக்க வேண்டாம். பல விஷயங்கள் குறித்து பேசாமல் தவிர்ப்பதால் அவை குறித்து அறியாமல் இல்லை என நினைக்க வேண்டாம்.

கிராமப்புற மாணவிகளுக்கு சைக்கிள் கொடுப்பது அவர்கள் கல்வி கற்று பயனடைவதற்காகவே... மேலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட கிராமங்களுக்கு கால்நடைகள் வழங்குவது அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும். இது போன்ற திட்டங்களை கண்மூடித்தனமாக இலவசம் என நாங்கள் கூறவில்லை'' என்றனர்.

மேலும், இது குறித்தான வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.