`நாங்கள் நிறைய தவறுகள் செய்திருக்கிறோம்; ஆனால்..?!' - ராஜீவ் காந்தி கிளாசிக் பேட்டி #1984

1984ல் பேட்டிக் கண்டபோது சிவசங்கரி கேட்ட கேள்விகளுக்கு ராஜீவ் காந்தி அளித்த பதில்கள் இதோ...!

Published:Updated:
Rajiv Gandhi
Rajiv Gandhi ( Vikatan Archives )
0Comments
Share

(ராஜீவ் காந்தியை சந்தித்தேன்... - சிவசங்கரி! என்ற தலைப்பில் 19.02.1984, 26.02.1984 ஆகிய தேதிகளில் ஆனந்த விகடன் இதழ்களிலிருந்து...)

மாலை மணி ஏழு.புது டில்லி, அக்பர் சாலையில் உள்ள இந்திரா காங்கிரஸின் தலைமை அலுவலகம்... கண்ணில் தென்படும் காங்கிரஸ் தலைவர்கள்.ராஜீவ் காந்தியின் செயலாளர் ஜார்ஜின் அறைக்குச் சென்று உட்கார்ந்து, நிஜமாகவே வயசில் சின்னவராய்... ஜீன்ஸ், டீ ஷர்ட் அணிந்து, துடிப்பு மிகுந்தவராய் செயல்படும் ஜார்ஜையும், அங்கு வந்து போகும் இதர இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களையும் பார்க்கும்போது இளைய தலைமுறையினரின் ஆரோக்கியமான ஊடுருவல் நிறைய இருப்பது சந்தோஷத்தைத் தருகிறது.ஏழு ஐந்து...அம்பாஸடர் வண்டியைத் தானே ஓட்டிக் கொண்டு ராஜீவ் காந்தி வந்ததும், திடுமென இடம் அதிகமாய் பரபரக்கிறது...

ராஜீவ் காந்தி
ராஜீவ் காந்தி
Vikatan Archives

“குட் ஈவ்னிங்...! காக்க வைத்துவிட்டேனா? மன்னித்துக் கொள்ளுங்கள்!”ஐந்து நிமிஷங்கள் என்னை உபரியாய் காக்க வைத்து விட்டதற்காக இரண்டு, மூன்று தரம் வருந்தும் ராஜீவ் பின்னோடு அவருடைய தனி அறைக்குச் செல்கிறேன். புகைப்படத்தில் பார்ப்பதைவிட நேரில் இன்னும் மெலிந்து காணப்படுகிறார் ராஜீவ், முகத்தில் முதிர்ச்சி கூடித் தெரிகிறது.அறிமுகங்கள், புகைப்படங்கள் முடிந்த பிறகு பேட்டியைத் தொடங்குகின்றேன்.

"ஏஷியாட் நடந்தபோது நான் இங்கு வந்திருந்தேன். மிக அழகாகத் திட்டமிட்டு, கச்சிதமாக இயங்கின அதன் பின்னணியில் நீங்கள் இருந்ததைப் பற்றி எல்லோரும் உயர்வாகப் பேசினார்கள். சின்ன வயசிலிருந்தே நீங்கள் இப்படித் திட்டமிட்டுச் செயல்படுபவர் தானா?"

“எதிலும் ஒருவிதக் கட்டுப்பாடுடன் திட்டமிட்டுச் செயலாற்றுவது என் குணம். 'ஸிஸ்டமாடிக், ஆர்கனைஸ்ட் பர்ஸன்’ என்றுதான் என்னை வகைப்படுத்துவேன்.” 

“உங்கள் இளமைப் பிராயத்தைப் பற்றிச் சொல்லுங்களேன் . . . நீங்கள் எப்படிப்பட்ட சிறுவனாக இருந்தீர்கள்?” சிரிக்கிறார்.... 

“இதற்குப் பதில் சொல்வது சிரமமாக இருக்கிறது. நான் எப்படிப்பட்ட சிறுவனாய் இருந்தேன் என்று மற்றவர்கள்தானே சரியாகச் சொல்ல இயலும்? சின்ன வயசில் அதிகம் ‘ரிஸர்வ்ட்’டாக இருந்தேன்...” 

“உங்கள் தாத்தா நேருஜியைப் பற்றிப் பேசலாமா? அவரின் பாதிப்பு உங்களிடம் உண்டா?” 

“ஓ! நிறைய... நிறைய...” 

“எந்த ரீதியில்...?” 

“எதிர்கால இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்று அவர் கற்பனை பண்ணியதை நான் நன்கு அறிவேன். . . நேர்மைக்கும், மனிதாபிமானத்துக்கும் மிகவும் மதிப்புக் கொடுத்தவர் அவர், நாட்டில் இன்றைக்குக் காணப்படும் பல பிரச்னைகளுக்குக் காரணம், உயர்ந்த விஷயங்களையும் நாமெல்லாம் இழந்து வருவதுதான் என்றே நான் நினைக்கிறேன். தாத்தாவின் நேர்மை, மனிதாபிமானம் கொள்கைகளை நான் தீவிரமாக நம்புவதே அவரின் பாதிப்பு என்னுள் அதிகமாக இருப்பதால்தான்.”

“உங்கள் தாத்தாவோடு நீங்கள் கழித்த அந்த நாட்களைப் பற்றிக் கூறுங்களேன்.?”

“காலை நேரங்களில் அவர் எங்களுடன் அதிகமாக இருப்பார்... அப்போது வீட்டிலேயே பல மிருகங்களை வளர்த்து வந்தோம். புலி, சிறுத்தை, ஹிமாலயன் பாண்டா போன்றவை... தாத்தா மென்மையான சுபாவம் கொண்டவர். தன்னைச் சுற்றியுள்ள யாரையும், எதையும் நேசிக்கும் மனப் பக்குவம் அவருக்கு உண்டு. அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம்..”

“அவருடைய இந்தக் குணங்களில் உங்களுக்கு ஏதாவது இருக்கிறது என்று நம்புகிறீர்களா?”

“இருக்கலாம்... ஆனாலும் அவர் ஒரு உயர்ந்த மனிதர்... அந்த அளவுக்கு வேறு யாரும் உயர்வது கஷ்டம்...”

“உங்கள் பைலட் நாட்களைப் பற்றி?

“நான் மிகவும் சந்தோஷமாக இருந்த நாட்கள் அவை... வேலை பார்க்கிற உணர்வு இல்லாமல் கை நிறையச் சம்பளம், மனசுக்குப் பிடித்த வேலை என்று நிம்மதியாய் இருந்த நாட்கள்...”

“எப்போதேனும் நீங்கள் ஓட்டிய விமானத்தில் கோளாறு உண்டாகி, பதட்ட நிலை உருவானது உண்டா?''

“ஒரு முறை இன்ஜின் பெயிலாகி உள்ளது. ஆனாலும் பதட்டம் என்பது கிடையாது. எதையும் நிதானமாக அணுகும் பயிற்சி, பயத்தைத் தவிர்க்க உதவுகிறது என்றே நினைக்கிறேன்.”

Rajivi gandhi, sivashankari
Rajivi gandhi, sivashankari
Vikatan Archives

“உங்களையும் சஞ்சய் காந்தியையும் ஒப்பிட்டுப் பேசுபவர்களைப் பற்றி உங்கள் கருத்து?”

“இப்படி ஒப்பீடு செய்பவர்கள் என்னையோ, சஞ்சயையோ நிஜமாக அறிந்தவர்கள் இல்லை...”

''சஞ்சய் அளவுக்கு உங்களுக்குத் தீவிரத்தன்மை இல்லை என்கிறார்களே?”

“முந்தின கேள்வியின் பதிலையேதான் நான் மீண்டும் சொல்ல வேண்டி இருக்கிறது. எங்களை ஆத்மார்த்தமாக அறியாதவர்களெல்லாம் தெரிந்த மாதிரி பேசத் துவங்குகையில் நிஜம் என்பது மறைந்துதான் போகிறது... சஞ்சய் அரசியலில் புகுந்தபோது நிலைமை வேறு... உணர்ச்சிக் கொந்தளிப்பு அதிகம் இருந்த சமயம் அது. அதனால் தன்னை வேறுவிதமாக சஞ்சய் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம்... இப்போது அப்படி இல்லை. இதைக்கூட நினைவில் வைத்துக் கொள்ளாமல் இப்படிப்பட்ட ஒப்பீடுகளை மற்றவர்கள் செய்ய முற்படுவதை நினைக்கையில் வருத்தமாக இருக்கிறது.”

“சஞ்சயுடன் நீங்கள் நெருக்கமாக இருந்தீர்களா?”

“பள்ளியில் இருந்த நாட்களில் நாங்கள் நெருக்கமாக இல்லை. இங்கிலாந்தில் இருந்தோம். பின், இங்கு வந்த பிறகு நெருக்கமாக இருந்தோம்... ஆனால், அத்தனையும் சஞ்சயின் அகால மரணத்தால்... ரொம்பவும் வருத்தமான சம்பவம் அது...” பேச்சு சஞ்சயைச் சுற்றி இருப்பதால் மேனகாவைப் பற்றிப் பேசுகிறேன்...

“ஒரு கேள்வி கேட்டால் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்..... சென்ற வருஷம் திருமதி காந்தி, திருமதி மேனகா சண்டை பிரபல்யப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் பேசப்பட்டது. ஒரு குடும்பத்துச் சண்டை மற்றவர்களுக்கு எதற்கு? அந்தக் குடும்பத்தின் சம்பந்தப்பட்டவர் என்ற ரீதியில் அதைப் பரவ விடாமல் துவக்கத்திலேயே நீங்கள் தடுத்திருக்க வேண்டாமா?”

ராஜீவ் காந்தி பதில் கூறாமல் அமர்ந்திருக்கிறார். அரை நிமிஷத்துக்குப் பின்,“இந்தக் கேள்வி வேண்டாமென்றால் விட்டு விடுகிறேன்” என்று நான் கூறியதும், ஸ்நேகமாய் புன்னகைத்து “தாங்க்யூ என்கிறார்.

“குழந்தை வருணிடம் உங்களுக்கு ஒட்டுதல் உண்டா?”

“நிறைய... வீ ஆல் லவ் ஹிம்... ஆனால், இப்போதெல்லாம் அவன் எங்கள் வீட்டுக்கு வருவதில்லை... அதான் வேதனையைத் தருகிறது...

“இதற்கு ஏதும் செய்ய முடியாதா?”

“நிறைய செய்கிறோம். போன் பண்ணுகிறோம். என் குழந்தைகள் அங்கு சென்று முயற்சித்தார்கள். ஆனால், எதற்கும் பயன் இல்லை. வலியும் வேதனையும்தான் மிச்சம்...” ராஜீவ் காந்தி தொடர்ந்து ஏதும் பேசாமல் மெளனித்து, 'ஏதேனும் சாப்பிடுகிறீர்களா?' என்று கேட்டு பேச்சைத் திசை திருப்பி, ஜார்ஜை அழைத்து, இரண்டு ‘காம்பா கோலா’ கொண்டு வரச் சொல்கிறார்.

“விட்டுக் கொடுப்பது - காம்ப்ரமைஸ் - உங்களுக்கு எளிதில் சாத்தியமாகும் சமாசாரமா?”

“இல்லை... என்னை ஓரளவுக்குப் பிடிவாதக்காரன் என்றுகூடச் சொல்லலாம். எனக்குள் நான் வைத்திருக்கும் சரி, தவறு என்கிற வரைமுறைகளை மதிக்கிறேன். அதற்காக நான் தவறே செய்யாதவன் என்று கூறுவதாக எண்ணாதீர்கள். ஐ ஹாவ் மேட் மிஸ்டேக்ஸ்... இருப்பினும், என் மனசுக்கு நான் உண்மையாக இருப்பதும் முதலில் என்னை நானே கன்வின்ஸ் செய்ய முயற்சிப்பதும் எனக்குப் பிடித்திருக்கிறது. என்னையே நான் கன்வின்ஸ் செய்து கொள்ளாவிட்டால் பிறரை கன்வின்ஸ் செய்வது எப்படி? உள்ளுக்குள் ஒரு சூன்யம் அல்லவா இருக்கும்...?”

“திருமதி காந்தியிடம் உங்கள் எண்ணங்களை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு, பாதிப்புகள் உண்டாக்க முடியும் என்று நம்புகிறீர்களா?”

ராஜீவ் வாய்விட்டுச் சிரிக்கிறார்...“குடும்ப சம்பந்தமாகவா, இல்லை...?”

“எல்லாவற்றிலும்தான்...”

“ம்ம்...” புருவங்களைச் சுருக்கிக் கொண்டு தீவிரமாய் யோசிக்கிறார். “சில விஷயங்களில் அவர் என் கருத்துக்களை ஏற்பார்: எல்லாவற்றிலும் அல்ல...”

“பிரதமராக இல்லாமல் ஒரு தாயாக திருமதி காந்தியை விமரிசிக்க முடியுமா?”

“கஷ்டமான கேள்விகளாகக் கேட்கிறீர்களே!” என்றவர், சிரித்துக் கொண்டே வினவுகிறார்: “இப்போதைய அம்மாவையா, அல்லது என் இளமைக் கால அம்மாவையா?”

“அன்றிலிருந்து இன்று வரை...”

“ஒரு தகப்பன் என்கிற ரீதியில் பெற்றோரின் கடமை, பொறுப்பு எனக்கு இப்போது துல்யமாகப்புரிகிறது... எனினும், இன்றைய அரசியல் நிலை வேறு, அன்று நான் வளர்ந்த சூழ்நிலை வேறு... அத்தனை நெருக்கடிகளிலும், வேலை நடுவிலும் அம்மா எங்களை மிக அக்கறையுடன் கவனித்து வளர்த்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அம்மாவின் கவனிப்பு இல்லையே என்று நாங்கள் ஒரு கணம் கூட ஏங்காமல் வளர்ந்ததுதான் நிஜம்.”

“உங்கள் தந்தை ஃபெரோஸ் காந்தி இறந்தபோது, உங்களுக்கு வயது பதினாறுதான். அவரின் இழப்பு உங்களை வெகுவாகப் பாதித்ததா, இல்லை தாத்தாவின் நெருக்கம் அதை ஈடுகட்டி விட்டதா?”

“யாரும் யாருக்கும் ஈடாக முடியாது என்றே நான் நினைக்கிறேன். அதுவும் அப்பா ஸ்தானத்தை யாரால் இட்டு நிரப்ப முடியும்? தந்தையைச் சின்ன வயசில் இழந்தது எங்களுக்குப் பெரிய இழப்புதான்...”

Rajivi Gandhi, Sivashankari
Rajivi Gandhi, Sivashankari
Vikatan Archives

“மிகச் சிறந்த பார்லிமெண்டேரியன் என்று பேர் வாங்கினவர் ஃபெரோஸ் காந்தி. அவருடைய குணங்களில் ஏதேனும் உங்களுக்கு வந்திருக்கிறது என்று நினைக்கிறீர்களா?”

“அப்பாவுக்கு யந்திரங்களில் நாட்டம் அதிகம் உண்டு. அந்த ஈடுபாடு எங்கள் இருவருக்குமே வந்திருக்கிறது. ஸிஸ்டமேடிக்காகத் திட்டமிட்டு வேலை செய்யும் திறமையும் அவரிடமிருந்து எனக்கு வந்திருக்கும் குணம் என்றே நினைக்கிறேன்.”

“இந்த மாதிரி ஒரு குடும்பத்தில் பிறக்க நேரிட்டதைப் பற்றி?”

“லாபங்கள் அதிகம்... ஆனால், என்னைப் பொறுத்தவரை பிளஸ்ஸைவிட மைனஸ் அதிகமாக இருப்பதாக உணருகிறேன். If you want to take advantage of the advantage, then yes. ஆனால், நான் மாறுபட்டு இருக்க விரும்புகிறேன்.”

“தற்போது நாட்டில் பரவலாகக் காணப்படும் இளைய தலைமுறையினரின் இருப்புக் கொள்ளாமைக்குக் காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?”

“இருப்புக் கொள்ளாமைக்குப் பல காரணங்கள். இன்றைய ஜனத்தொகையில் முக்கால்வாசியினர் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பது, முன்பு கனவுகளாய் எண்ணியிருந்த சமாசாரங்கள் இன்று கைக்கெட்டினவை என்று நம்பி, அவை கிடைக்காமல் போவது போன்ற பல காரணங்களால் இருப்புக் கொள்ளாமை-அன்ரெஸ்ட் அதிகரித்திருக்கிறது...”

“வாய்ப்புக்கள் குறைந்திருப்பதும் (Lack of opportunities)—ம் ஒரு முக்கிய காரணம் இல்லையா?”

“வாஸ்தவம்... தவிர, அந்த நாட்களில் நாம் கடைப்பிடித்து வந்த நேர்மை, உண்மை போன்ற பல விஷயங்களை மறந்து வருவதும் தவறான பாதிப்புக்களை உண்டாக்குகிறது என்பதை மறக்கக்கூடாது...”

“காரணங்கள் புரிகின்றன; ஆனால், தீர்வுக்கு வழி?”

''நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி இழந்து வரும் மனிதாபிமானம், நேர்மையைத் திரும்ப நிலைநிறுத்துவது தான் முதல் பரிகாரம்...”சில கணங்களுக்குச் சும்மா இருந்து அவர் தீர்மானமாகக் கூறுவதை ஜீரணிக்கப் பார்த்துவிட்டு, அடுத்த கேள்வியைக் கேட்கிறேன்:

“கடவுளிடம் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?”

“என்னையும் மீறிய ஒரு சக்தியில் நம்பிக்கை உள்ளது. ஆனால் அதைக் கடவுள் என்று அழைப்பதைவிட, உண்மை -Truthfulness-என்று சொல்லவே விரும்புகிறேன். காந்திஜி குறிப்பிடுவாரே - அந்த நேர்மை, உண்மை. இன்றைக்குப் பல தலைவர்கள் மது, தீண்டாமை கூடாது என்று காந்திஜி சொன்னார் என்று தேவையில்லாத விஷயங்களில் முக்கியத்துவம் செலுத்துகிறார்களே தவிரவும், அவர் தீவிரமாய் நம்பிய உண்மை, அஹிம்சை இவற்றை நினைத்தும் பார்க்காமல் இருக்கிறார்கள். அஹிம்சை என்றால், 'நான் உன்னை அடிக்கமாட்டேன்' என்பது அல்ல, அந்த நினைப்பு கூட எழாமல் இருப்பதுதான். இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் இந்தக் கொள்கைகள் உலகத்துக்கே பொது... இதில் எனக்கு ஆணித்தரமாய் நம்பிக்கையுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாய் இவற்றை நம் நடைமுறையில் புகுத்திவிட்டால் பிரச்னைகள் ஓரளவுக்குத் தீர்ந்துவிடும். I have 100% faith in this.”

“ஒரு வெளிநாட்டுக்காரரை மணந்திருக்கும் அனுபவங்களை...”

நான் முடிக்கும்முன் சிரித்துக் கொண்டு குறுக்கிடுகிறார்:“சோனியா இப்போது இந்தியப் பிரஜை...”

“வேறு நாட்டவர் என்பதால், தாம்பத்தியத்தில் சந்தோஷம் நிலவ அதிகமாகப் பிரயாசைப்பட வேண்டி இருந்ததா?”

“அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. We were and are very happy, touch wood.”

“சோனியாவிடம் நீங்கள் காணும் சிறப்புக் குணம்?”

“நான் நிதானத்தோடு நடக்க அவள் மிக உதவுகிறாள் — She saw to it that my head was screwed on the rightway!”

“அரசியலில் புகுந்த பிறகு முன்னைப்போல உங்களால் குடும்பத்துடன் இருக்க முடிகிறதா?”

“இல்லைதான். ஆனால், இது எதிர்பார்த்ததுதானே? பதினைந்து வருஷங்கள் சந்தோஷமாக, நிம்மதியாக, பைலட் தொழில், குடும்பம் என்று வாழ்ந்து விட்டு இப்போது அரசியலுக்கு வந்திருக்கிறேன்... வாழ்க்கையில் திருப்பங்கள் வரும்போது எது முக்கியம் என்று தேர்ந்தெடுக்கத் தெரிய வேண்டாமா?”

“உங்கள் பொழுதுபோக்கு?”

“முன்பெல்லாம் புகைப்படம் எடுப்பது... ‘HAM’ ரேடியோவில் தொடர்பு கொள்வது . . . ஆனால், இப்போது எதற்கும் நேரம் இல்லை.”

ராஜீவ் காந்தி என்ற தனி நபர் பற்றின கேள்விகள் போதும் என்று தீர்மானித்து அரசியலுக்குக் கவனத்தைத் திருப்புகிறேன்.

“பைலட்டாக மிகவும் சந்தோஷமாக இருந்தேன் என்று சொன்னீர்களே, அதை விட்டுவிட்டு அரசியலில் புகுந்தீர்கள் மிஸ்டர் ராஜீவ் காந்தி?”

பதில் டக்கென்று வருகிறது. “சஞ்சயின் மறைவுக்குப் பிறகு கட்சியில் உண்டான சூன்யத்தை என் வருகை இட்டு நிரப்பும் என்று மூத்த தலைவர்களும் தொண்டர்களும் நம்பினார்கள். யோசனை பண்ணியபோது அது சரியானதே என்று தோன்றியது. புகுந்து விட்டேன்.”

“அரசியலில் நுழைய வேண்டுமா என்று நீண்ட நாட்கள் தயங்கின மாதிரி தோன்றியதே?”

“தயக்கம் இல்லை; என்னால் முடியுமா முடியாதா என்ற யோசனை. ஆழ்ந்து சிந்தித்து ஒரு தெளிவான முடிவுக்கு நானாக வருவதுதானே நியாயம்?”

“பல அரசியல்வாதிகளிடம் இன்று ஒரு பேச்சு; நாளைக்கு அதை மறந்துவிட்டு இன்னொன்று என்பது போன்ற பழக்கம் இருக்கிறது. நீங்கள் எந்தவிதத்தில் மாறுபட்டு இருக்கப் போகிறீர்கள்?”

“நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. இன்றைக்கு பார்லிமெண்டில் கட்சி தாவுவது பற்றித் தீவிரமாய் வாதம் எழுந்தபோது, சுற்றிலும் பார்த்தால் 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் கட்சி மாறினவர்கள்தாம். சரி, உங்கள் கேள்விக்கு - நான் எப்படி வித்தியாசமாக இருக்கப்போகிறேன்- என்று கேட்டதற்குப் பதில் சொல்கிறேன். ஏற்கெனவே நான் கூறியபடி காந்தியத்தில், தன் மனசுக்கு முதலில் உண்மையாக இருக்கும் கொள்கையில் நம்பிக்கை வைத்து, இழந்து வரும் மதிப்புகளே மீட்டுத்தர முயற்சிக்கப்போகிறேன். விழிப்பு உணர்ச்சி மக்களுக்கு வந்துவிட்டால் அவர்களே அரசியல்வாதிகளை ஒழுங்கு பண்ணிவிட மாட்டார்களா?”

“கேட்க ரொம்ப நன்றாக இருக்கிறது. ஆனால், இது நடைமுறைக்குச் சாத்தியமா?”

“ஏன் சாத்தியமில்லை? தற்சமயம் காங்கிரஸில் பொறுப்புகள் வகிப்பவர்கள் எல்லாம் ‘சுத்தமான’வர்கள். ஓரிருவர் இங்கு அங்கு மாறாக இருக்கலாம், நான் மறுக்கவில்லை. இதில் அவசரமும் கூடாது, அசமந்தத்ததனமும் கூடாது... உண்மையான ஈடுபாடு முக்கியம்... பொறுமை வேண்டும்...

Rajivi Gandhi family
Rajivi Gandhi family
Vikatan Archives

“நம் நாட்டில் 'அடல்ட் ஃப்ரான்சைஸ், 21 வயசு வந்தவர்களுக்கு ஓட்டுரிமை' - வெற்றி பெற்றிருப்பதாக நினைக்கிறீர்களா?”

“நிச்சயமாய்- இல்லாவிடில் நாம் இந்த அளவுக்குக்கூடத் தலை தூக்கியிருப்போமா என்பது சந்தேகமே.”

“படித்தவர்களில் பலர் வோட்டுச் சாவடிக்குப்போவதைத் தவிர்க்கிறார்கள். இந்த நிலை உங்களுக்குத் தெரியுமா?

“ஒப்புக் கொள்கிறேன். எதிர்பார்ப்புக்கள் நடக்காமல் போனபோது படித்தவர்களிடையே ஒரு ஏமாற்றம் உண்டாகி, அவர்கள் வோட்டுப் போடுவதில் நம்பிக்கை இழந்திருப்பது நிஜம்தான்...”

“குறுக்கே பேசுவதற்கு மன்னிக்கவும். காங்கிரசின் ஆட்சிதானே சுதந்திரம் வாங்கிய நாளாய் இருந்திருக்கிறது? எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றால், தவறு யாருடையது?”

“நாங்கள் நிறைய தவறுகள் செய்து இருக்கிறோம் - இதற்காக நான் வருந்துகிறேன். ஆனால், இப்போது ஒருவித விழிப்புணர்வு உண்டாகி இருப்பதில் கண்டிப்பாய் நிலைமையில் மாற்றம் தோன்றியிருக்கிறது. சமீபத்தில் நடத்திய சேவா தளக் கூட்டத்தில் மொத்தம் 370 பேர் பங்கு கொண்டதில், 196 பேர் பட்டம் பெற்றவர்கள். 30 பேர் இரட்டைப் பட்டம் பெற்றவர்கள். இது ஒரு உதாரணம் தான். இப்படி ஒவ்வொரு காரியத்திலும் படித்தவர்கள் வலியப் பங்கேற்க வருவது ஆரோக்கியமான விஷயம்.”

“இன்றைய இளைய தலைமுறையினரிடம் நம்பிக்கை உண்டாக்கி விட்டால், நாளைக்குத் தலைவராக வருவது உங்களுக்குச் சுலபம்தான். ஆனால், நாட்டில் தலைவிரித்தாடும் லஞ்சம், பொய்மை, இரட்டை வேஷம் இவற்றால் இளைய தலைமுறையினர் நிலை குலைந்து போயிருக்கிறார்களே. இவர்களை எப்படி உங்கள் வழிக்குக் கொண்டு வர உத்தேசம்?”

ராஜீவ் காந்தி முன்னால் சாய்ந்து உட்காருகிறார்.“தலைவனாக வேண்டும் என்கிற எண்ணத்தைவிட மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்கிற தீவிரத்துடன் நான் அரசியலில் புகுந்திருப்பதுதான் நிஜம். சமுதாயத்தின் மேன்மைக்காகப் பாடுபடுவதோடு மக்களிடையே உண்மை, நேர்மை பற்றின விழிப்பு உணர்ச்சியைத் தோற்றுவிப்பதையே நான் மிக மிக விரும்புகிறேன். இன்றைய இளைய தலைமுறையினரிடம் ஒருவிதக் கசப்பு ஊடுருவி இருப்பது உண்மை; ஆனாலும் அவர்களை அணுக முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது.”

“இளைஞர் காங்கிரஸின் நடவடிக்கைகளை எடுத்துச் சொல்ல இயலுமா?"

“ஒரு வரியில் பதில் சொல்வது கஷ்டம். விளையாட்டு, பண்பாடு, ஆக்கபூர்வமான சமூகத் தொண்டு என்று பலவகைப்பட்ட திட்டங்களைத் தன்னுள் அடக்கி இளைஞர் காங்கிரஸ் செயல்படுகிறது.”

“உங்கள் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர்களான கோ-ஆர்டினேடர்களை ‘ராஜீவின் ஒற்றர்கள்’ என்று காங்கிரஸ்காரர்களே குற்றம் சாட்டுகிறார்களே?”

“கோ- ஆர்டினேடர்களுக்கு ஆங்காங்கு பட்டிதொட்டிகளுக்கெல்லாம் சென்று வறுமையை ஒழிக்கவும், ஏழை மக்களின் வாழ்வு மலரவும் இருபது அம்சத்திட்டம் எந்த அளவுக்கு உதவி இருக்கிறது என்பதைக் கண்காணிப்பது முக்கியமான வேலை. அந்தந்த மாவட்ட கட்சி அமைப்பின் ஒத்துழைப்பு இருந்தால்தான் இவர்கள் செம்மையாய் வேலை செய்ய முடியும். ஊழல் இருக்கும் இடங்களைப் பற்றிப் புகார் செய்வது மக்களின் நலனை உத்தேசித்துத்தானே ஒழிய, தனிப்பட்ட நபர்கள் மேல் உள்ள விருப்பு வெறுப்பால் அல்ல... உண்மையாக உழைக்கும் இவர்களை ஒற்றர்கள் என்று கூறுவது சரியானதல்லவே?”

“தொழிற்கல்வி மற்றும் உயர்ந்த கல்வி படித்தவர்கள் அரசியலில் ஈடுபட்டு, நிர்வாகப் பொறுப்பேற்பது நல்லதென்று கருதுகிறீர்களா?”

“நிச்சயமாக... அரசியலில் மட்டுமல்லாமல் அன்றாட மனித நடவடிக்கை சம்பந்தப்பட்ட அனைத்துக்குமே திறமையான நிர்வாகம் தேவைதானே! ஆனால் எதுவும் ஒரு அளவோடு இருப்பது நல்லது...”

Rajivi Gandhi, Sonia Gandhi
Rajivi Gandhi, Sonia Gandhi
Vikatan Archives

“21-ம் நூற்றாண்டில் இந்தியா வல்லரசுகளில் ஒன்றாகத் திகழும் வாய்ப்பு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?”

“இந்தியாவுக்கு அப்படியொரு ஆசை இருக்கிறதாக நான் எண்ணவில்லை. வல்லரசு என்றால் இன்றைக்குப் பக்கத்து நாடுகளையும், பலவீனமான நாடுகளையும் ஆட்டி வைத்துப் பயமுறுத்தி, தன் கொள்கைகளே மிரட்டி ஏற்க வைக்கும் ஒன்று என்று பரவலாக எல்லோராலும் கருதப்படுகிறது. இந்த நிலை நிச்சயமாய் இந்தியாவுக்குத் தேவையில்லை. ஆனால், பசுமை, வளமை நிறைந்து, திருப்தியுடன் மக்கள் வாழும் நாடாக நிச்சயம் இந்தியா வளர வேண்டும்...”

“ஒரு பக்கம் ஏஷியாட், ‘நாம்’,காமன்வெல்த் மாநாடுகள் என்று தடபுடலாய் நடத்துவதோடு, இன்ஸாட், ஆப்பிள் போன்ற செயற்கைக் கோள்களை அனுப்பும் அளவுக்கு நாம் வளர்ந்துவிட்டாலும் இன்னொரு பக்கம் இன்றைக்கும் பட்டினியால் மக்கள் சாவதைக் குறித்து?''

ராஜீவ் காந்தி முன்னால் சாய்ந்து வேகமாய் மறுக்கிறார்.“இந்தியாவில் மக்கள் பட்டினியால் சாகிறார்கள் என்ற உங்கள் கூற்றை நான் நிச்சயம் ஏற்க இயலாது. சுதந்திரத்திற்குப் பின்னால் நாம் சாதித்திருப்பதில் முக்கியமானது பட்டினிச் சாவை ஒழித்திருப்பது. வறுமை இருக்கிறது; பசி இருக்கிறது; நான் மறுக்கவில்லை. ஆனால் கண்டிப்பாய் சுதந்திர இந்தியாவில் மக்கள் பட்டினியால் சாவதில்லை. விஞ்ஞானத்தில் முன்னேறுவதைப்பற்றிக் குறிப்பிட்டீர்கள். ஒரு நாடு முன்னேற விஞ்ஞான முன்னேற்றம் அத்யாவசியமானது. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் விஞ்ஞான, தொழில் ரீதியாய் நாடு முன்னேறாத வரையில் வறுமையை அடியோடு ஒழிப்பது சாத்தியமாகாது. உலக நாடுகளின் மதிப்பைப் பெறவும், அவர்களோடு நட்பை வளர்த்து நல்ல முறையில் அமைதியை நிலைநாட்டவும் அகில உலக அளவில் மாநாடுகள், கலாசாரப் பரிவர்த்தனைகள் அவசியமாகின்றன.”

''வெளிநாட்டில் தங்கியிருக்கும் இந்தியர்கள் சில இந்திய கம்பெனிகளின் நிர்வாகங்களில் உரிமை பெறுவது பற்றி உங்கள் கருத்து?”

“இது குறித்துத் தெளிவாக என் கருத்தை வெளியிட்டிருக்கிறேன். ஏற்கெனவே இருக்கும் பொருளாதார அமைப்பைச் சீர்குலைய வைக்காமல், சிறப்பாக கம்பெனிகள் நடக்க உதவுமென்றால், இந்தத் தலையீடுகளை நான் வரவேற்கிறேன்.”

“லாட்டரி மோகம் நாட்டின் எல்லா மாநிலங்களிலும் ராட்சசத்தனமாக வளர்ந்துவிட்டது. முக்கியமாய்த் தமிழ்நாட்டில் மட்டும் வருஷத்துக்கு 150 கோடி ரூபாய்க்கும் மேல் மக்களால் செலவழிக்கப்படுவதாகச் சொல்கிறார்கள். இந்த மாதிரி சூதாட்ட வெறி மக்களுக்கு நல்லது என்றா நினைக்கிறீர்கள்?"

“இல்லை. . . நிச்சயமாய் இல்லை. சூதாட்டங்கள் என் ரசனைக்கு உட்பட்டவை அல்ல. ஆனால், மக்கள் விரும்பினால் சில கட்டுப்பாடுகளுடன் ஆடச் சம்மதிக்கலாம். இல்லையென்றால் அந்தக் கட்டுப்பாடுகள் மறைமுகமாக, சட்டத்துக்கு எதிராக மக்களை ஆடத்தூண்டும். அமெரிக்காவில் ‘மாஃபியா’ தோன்றியதற்கு இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் பிறப்பிக்கப்பட்ட கறாரான மதுவிலக்கு, இதர சட்டங்கள்தான் காரணம் என்று சொல்வார்கள். அரசாங்கத்தின் வளர்ச்சிக்காக லாட்டரி நடத்தும் நேரத்தில் பரிசுத் தொகையைக் குறைத்து, நிறைய பேருக்குப் பகிர்ந்து கொடுப்பதன் மூலம் லாட்டரி வெறியைக் குறைக்கலாம் என்றே நான் நினைக்கிறேன்.”

“சில வருஷங்களுக்கு முன் நீங்கள் ஆந்திரப் பிரதேசத்துக்குச் சென்றபோது அன்றைய முதல்வர் உங்களுக்குத் தடபுடலாய் வரவேற்புக் கொடுத்ததற்காகக் கோபப்பட்டதன் மூலம் நீங்கள் எளிமையை விரும்புகிறவர் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தீர்கள். ஆனால், சமீபத்து பம்பாய் காங்கிரஸ் மாநாட்டில் பூ அலங்காரத்துக்கு மட்டும் லட்சத்து ஐம்பதாயிரம் செலவழிக்கப்பட்டதாக வந்த செய்தியைப் படித்த போது...”

மீண்டும் ராஜீவ் காந்திக்கு சன்னமாய் கோபம் வருவது புரிகிறது.“தவறாகப் பத்திரிகைகளில் செய்திகளை வெளியிடுவதனால் உண்டாகும் தப்பான அபிப்பிராயங்கள் இவை. சற்றுத் தள்ளி இருக்கும் பார்க்கில் கூட்டத்தை அமைக்காமல் விமானகூடத்துக்கு வரும் பயணிகளுக்கு இடைஞ்சலாக அங்கேயே கூட்டத்தை ஏற்பாடு செய்ததைக் கண்டித்த விவரம் தெரியாமல், அன்று பத்திரிகைகள் தங்கள் இஷ்டத்துக்கு எழுதிவிட்டன. பம்பாய் மாநாடு பூ அலங்கார விவகாரமும் இப்படி ஒன்றைப் பத்தாக்கின சமாசாரம் தான்.”

Rajivi Gandhi, Indira Gandhi and wife and brother
Rajivi Gandhi, Indira Gandhi and wife and brother
Vikatan Archives

“மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் எந்தவிதமான உறவு நிலவ வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?"

“இது பற்றி சர்க்காரியா கமிஷன் நிறையச் சொல்லப்போகிறது. இந்த உறவு மிக மிக நிதானமாக அணுகி ஆராய வேண்டிய ஒன்று. நம் முன்னோர்கள் இதையெல்லாம் ஞாபகத்தில் கொண்டு நுணுக்கமாகச் செயல்பட்டிருக்கிறார்கள். நிபுணர்கள் இதைப் பற்றின ஒரு முடிவுக்கு வருவது ஒரு பக்கம் இருப்பினும், தனிப்பட்ட ரீதியில் என்னைக் கேட்டால் நல்ல எண்ணம், அனுசரிப்புடன் இரண்டு பக்கமும் செயல்பட்டால் அருமையான உறவை ஸ்தாபிப்பது சாத்தியம் என்று நினைக்கிறேன். முரண்டிக் கொள்வது நாட்டின் ஒற்றுமைக்கு நல்லது இல்லை. வலுவான மத்திய அரசு ஒற்றுமைக்கு முக்கியம். இதை உருக்குலைக்க முயன்றால் அந்த நடவடிக்கை நாட்டையே படுத்தும் என்பது நிச்சயம்.”கேட்க எண்ணியிருந்த கேள்விகள் அத்தனையையும் கேட்டுவிட்ட திருப்தியோடு நிமிர்ந்தவள், நினைத்துக்கொண்டு,

"'உங்களையே நீங்கள் விமரிசிக்க முடியுமா?”

என, இது நாழிகை இருந்த இறுக்கம் நீங்கி ராஜீவ் காந்தி சட்டென்று சிரிக்கிறார். “முடியும்... ஆனால் எதற்கு?”

“ப்ளீஸ்.... எனக்காக.....”

“ஆல்ரைட்... சுலபமாய் ஒரு பிரச்னையின் அடிப்படையை என்னால் உணர முடிவதை ப்ளஸ்பாயிண்டாக நினைக்கிறேன்.”

“மைனஸ்?”

“என்னேப் போலவே மற்றவர்களும் Perfectionist-ஆக இருக்க வேண்டுமென்று நான் எதிர்பார்ப்பது.... என் எதிர்பார்ப்புக்கு மற்றவர்கள் வராதது என்னை வருத்துகிறது. இது மைனஸ்பாயிண்ட் தானே?”

“கடைசி கேள்வி: உங்களிடம் சுலபமாகப் பிறரால் பாதிப்புக்களை உண்டாக்க முடியுமா?''

“ம்ம்? இது சம்பந்தப்பட்ட விஷயத்தைப் பொறுத்தது. தெரியாத சமாசாரத்தில் நான் உடனே முடிவு எடுக்க முயலுவதில்லை. அனாவசியமாய் காலதாமதம் செய்கிறேன் என்று மற்றவர்கள் நினைக்கலாம்.... இல்லை... எனக்கு நானே தெளிவாக இருக்க வேண்டும். இது முக்கியம். இப்படி விஷயஞானம் சேகரிக்கையில் மற்றவர்கள் என்னை இன்ஃப்ளுயன்ஸ் செய்ய நான் இடம் கொடுக்கிறேன். மற்றபடி இல்லை..” நன்றி கூறிவிட்டு எழுந்திருக்கிறேன். அறைக்கு வெளியே இருபது, முப்பது இளைஞர் காங்கிரஸ்காரர்கள் காத்திருக்கிறார்கள்.... அத்தனை பேரிடமும் ஒரு துறுதுறுப்பு...ராஜீவ் காந்தியின் பல கருத்துக்கள் எனக்குச் சந்தோஷத்தை அளித்திருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பேச்சோடு நிற்காமல், ஆக்கபூர்வமான செயலில் ஈடுபட்டு, என்னிடம் தெரிவித்த உயர்ந்த கருத்துக்களைப் படிப்படியாக நிறைவேற்றிக் காட்டுவாரா? காலம்தான் இதற்குப் பதில் கூற வேண்டும்.

- சிவசங்கரி