"எனக்கு ஒரு வேலை வேண்டும். பென்ஷன் மட்டும் போதவில்லை!"- முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், சச்சினின் நெருங்கிய நண்பருமான வினோத் காம்ப்ளி, "நான் ஓய்வூதியத்தில்தான் வாழ்ந்துகொண்டு வருகிறேன். எனக்கு ஒரு வேலை வேண்டும்" என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார்.

Published:Updated:
வினோத் காம்ப்ளி
வினோத் காம்ப்ளி
0Comments
Share

வினோத் காம்ப்ளி, இந்திய கிரிக்கெட்டில் மிக முக்கியமான பெயர். கழுத்தில் தங்க செயின், பிரேஸ்லெட், காதில் கம்மல் என அவரின் ஸ்டைலும், ஆட்ட அணுகுமுறையும் கரீபிய வீரர்கள் போன்று இருக்கும். 1988-ம் ஆண்டு மும்பையின் ஸ்கூல் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரோடு இணைந்து 664 ரன்கள் அடித்து ரெக்கார்ட் பார்ட்னர்ஷிப் மூலம் உலகுக்கு அறிமுகமான பெயர்தான் வினோத் காம்ப்ளி. சச்சினுக்கு மிக நெருங்கிய நண்பரும் ஆவார்.

இதுவரை 104 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள காம்ப்ளி 2477 ரன்களை எடுத்துள்ளார். 1996 உலகக்கோப்பைப் போட்டியில் ஈடன் கார்டன் மைதானத்திலிருந்து இவர் அழுதுகொண்டே சென்றதுதான் பலருக்கும் நினைவுக்கு வரும். அந்த அழுகை நடையோடு அவரின் கிரிக்கெட் கரியரும் கிட்டத்தட்ட முடிந்தது. அதன்பிறகு சச்சினால் மீண்டும் அவர் சிலமுறை அணிக்குள் அழைத்துவரப்பட்டிருந்தாலும் அவரால் அணிக்குள் நிலைக்க முடியவில்லை.

வினோத் காம்ப்ளி
வினோத் காம்ப்ளி

இதன் பிறகு கடந்த 2019-ல் மும்பையில் நடைபெற்ற டி20 லீக்கில் பயிற்சியாளராக அவர் செயல்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது அவருடைய நிலையைப் பற்றி மிட் டே (Mid Day) நாளிதழுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

அதில், "நான் இப்போது ஒரு ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர். மாதம் பிசிசிஐ தரும் ரூ.30 ஆயிரம் ஓய்வூதியத்தில்தான் என்னுடைய வாழ்வாதாரத்தைப் பார்த்துக்கொள்கிறேன். இதற்காக நான் பிசிசிஐக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இப்போதைக்கு எனக்கு வேலை வேண்டும். என்னைப் பயன்படுத்திக் கொள்ளலாம், இளம் வீரர்களுடன் நான் பணியாற்ற விரும்புகிறேன்.

சச்சின், வினோத் காம்ப்ளி
சச்சின், வினோத் காம்ப்ளி

எனக்குக் குடும்பம் இருக்கிறது. 30,000 பென்ஷன் மட்டும் என் வாழ்வாதாரத்துக்கு போதாது. எனவே நான் மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் விஜய் பாட்டீலிடம் கேட்டுள்ளேன். சச்சினுக்கும் எனது நிலைமை தெரியும். ஆனால் நான் அவரிடமிருந்து எதுவும் எதிர்பார்க்கவில்லை. அவருடைய மிடில்செக்ஸ் குளோபல் அகாடமியில் எனக்கு ஒரு பொறுப்பைக் கொடுத்தார். அதுவே எனக்கு மகிழ்ச்சிதான். அவர் என்னுடைய சிறந்த நண்பர். எல்லா காலகட்டத்திலும் அவர் என்னுடன் இருந்திருக்கிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவன் நான். இந்த கிரிக்கெட்தான் எனக்கு எல்லாமே கொடுத்தது. இப்போது எனக்கு ஏதாவது வேலை கொடுத்தால் அதுவே போதும். எனது வாழ்வை இந்த விளையாட்டுக்காக அர்ப்பணிக்கிறேன்" என்று அவர் உருக்கமாகப் பேசியிருக்கிறார்.