`வீட்டுச் சிறையில் ஜி ஜின்பிங்... சீனாவில் ராணுவ ஆட்சி?' - உண்மையும் பின்னணியும்!

சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறாரா... உண்மை என்ன?

Published:Updated:
சீன அதிபர் ஜி ஜின்பிங்
சீன அதிபர் ஜி ஜின்பிங்
0Comments
Share

கடந்த சில தினங்களாகவே சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருப்பதாகச் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவிவருகின்றன. அங்கு ராணுவப் புரட்சி ஏற்பட்டிருப்பதால், நாட்டின் முழுக்கட்டுப்பாடும் சீன ராணுவத் தளபதியிடம் சென்றுவிட்டதாகவும் தகவல்கள் சொல்லப்படுகின்றன. இந்தச் செய்திகள் உண்மையா... சீன அதிபரின் நிலை என்ன? - விரிவாக அலசுவோம்!

பரவிய செய்தி!

சீன அதிபர் ஜி ஜின்பிங், உஸ்பெகிஸ்தான் தலைநகர் சாமர்கண்ட்டில் நடந்த ஷாங்காய் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு, செப்டம்பர் 16-ம் தேதி அன்று சீனாவுக்குத் திரும்பினார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில், ``ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொண்டு ஜின்பிங் நாடு திரும்பியபோது, அவரை விமான நிலையத்தில் வைத்தே சீன ராணுவத்தினர் கைதுசெய்தனர். அப்போதிலிருந்தே அவர் வீட்டுச் சிறையில்தான் இருக்கிறார். சீனாவின் அடுத்த அதிபராக ராணுவத் தளபதி லீ கியாமிங் பொறுப்பேற்றுக்கொள்ள அதிக வாய்ப்புகள் இருக்கின்றன'' என்று ஒரு வதந்தி பரவத் தொடங்கியது.

சீன அதிபர்
சீன அதிபர்
AP

இந்த வதந்திக்கு வலுசேர்க்கும் வகையில் அமெரிக்காவில் வசிக்கும் சீனப் பெண் ஜெனிஃபர் ஜெங், ``சீன ராணுவத்தின் வாகனங்கள் தலைநகர் பீஜிங்கை நோக்கிப் பயணிக்கின்றன. இந்த வாகன அணிவகுப்பு 80 கி.மீ தூரத்துக்கு நீண்டு காணப்படுகிறது. அதேவேளையில், `சீன மக்கள் விடுதலை ராணுவ'த்தின் தலைவர் பதவியிலிருந்து அதிபர் ஜின்பிங்கை `சீன கம்யூனிஸ்ட் கட்சி'யின் தலைவர்கள் நீக்கிவிட்டதாகவும் புரளிகள் பரவிக்கொண்டிருக்கின்றன'' என்று ட்விட்டரில் பதிவிட்டார். கூடவே, ராணுவ வாகனங்கள் அணிவகுத்துச் செல்லும் வீடியோ காட்சி ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தார்.

கார்டன் ஜி சாங் என்ற எழுத்தாளர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``சீனாவின் மூத்த அதிகாரிகள் சிறைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். 59% விமானங்கள் ரத்துசெய்யப்பட்டிருக்கின்றன'' என்று பதிவிட்டு பதற்றத்தை அதிகப்படுத்தினார். விமானங்கள் ரத்துசெய்யப்பட்டது தொடர்பான சில ஸ்கிரீன் ஷாட்டுகளும் ட்விட்டரில் வெளியாகின. ஆனால், இந்த ஸ்கிரீன் ஷாட்டுகள் போலியாக உருவாக்கப்பட்டவை என்று சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. மேலும், சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு காட்சிகளும் பழைய வீடியோவாக இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது. இதுவரை இந்த வதந்திகள் குறித்து சீன அரசும், அரசு ஊடகமும் எந்தவொரு விளக்கத்தையும் அளிக்கவில்லை.

சீன ராணுவம்
சீன ராணுவம்

`வெறும் வதந்திதான்!'

இந்த நிலையில், ``இது வெறும் வதந்திதான். சக்திவாய்ந்த தலைவரான ஜி ஜின்பிங் முழு நாட்டையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். எனவே, ராணுவக் கட்டுப்பாட்டில் சீனா செல்வதற்கான வாய்ப்புகளே இல்லை'' என்று சில சர்வதேச பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். மேலும், ``அதிபர் ஜி ஜின்பிங் அருகிலுள்ள ஹாங்காங்குக்குச் சென்று வந்தாலே, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தன்னை ஓரிரு வாரங்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்வார். தற்போது உஸ்பெகிஸ்தான் வரை சென்று திரும்பியிருப்பதால் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறார். இந்தச் சூழலைப் பயன்படுத்தி சிலர் வதந்திகளைப் பரப்பிவருகின்றனர். அக்டோபர் 9-ம் தேதி பீஜிங்கில் நடைபெறவிருக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது மாநாட்டுக்கான புதிய உறுப்பினர்களை அறிவித்திருக்கிறார் ஜின்பிங். இந்த ஒரு செய்தியே அவர் வீட்டுச் சிறையில் இல்லை என்பதை உறுதி செய்கிறது'' என்கின்றனர் சீன அரசியலை உற்று நோக்குபவர்கள்.

வதந்தியின் பின்னணி!

சீனாவில், ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அதிபராக இருக்க முடியாது என்றிருந்த சட்டத்தை, கடந்த ஆண்டு மாற்றியமைத்தார் ஜின்பிங். தனது வாழ்நாள் முழுவதும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும், நாட்டின் அதிபராகவும் தானே இருந்துகொள்ளும் வகையில் ஜின்பிங் கொண்டுவந்த சட்ட மாற்றங்கள், சொந்தக் கட்சிக்குள்ளேயே புகைச்சலை உண்டாக்கின. அதோடு, ஜின்பிங் தலைமையில் சீனாவில் ஊழலில் ஈடுபடுபவர்களைக் களையெடுக்கும் பணி நடைபெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு சீன அரசில் முக்கியப் பதவிகளிலிருந்த இரண்டு மூத்த அமைச்சர்களுக்கும், நான்கு முக்கிய அதிகாரிகளுக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், ஜின்பிங்குக்கு எதிராகச் செயல்பட்டதால்தான், அவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதாகவும் ஒரு செய்தி சொல்லப்படுகிறது. இந்த இரண்டு சம்பவங்களால் சீன அதிபர்மீது அதிருப்தியிலிருக்கும் சிலர், உள்நாட்டிலிருந்தே இது போன்ற புரளிகளைக் கிளப்பியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

 மா சே துங்
மா சே துங்

`` `சீனாவின் தந்தை’ எனப் போற்றப்படும் மா சே துங்குக்குப் பிறகு வேறெந்த அதிபருக்கும் மக்கள் மத்தியில் புகழும் மரியாதையும் கிடைக்கவில்லை. சீன வரலாற்றில் மா சே துங்குக்கு பிறகு அதிகம் போற்றப்பட்ட அதிபராக, தான் இருக்க வேண்டும் என்ற முயற்சிகளில் ஜின்பிங் இறங்கியிருக்கிறார். அவரது முயற்சிகளைத் தடுக்கும் வகையில் சர்வதேசச் சதிகள் நடைபெற்றுவருவதாகச் சொல்லப்படுகிறது. அதில் ஒரு பகுதியாகக்கூட இந்த வதந்திகள் பரப்பப்பட்டிருக்கலாம்'' என்கின்றனர் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.