``கட்சி என்ன... கத்தரிக்கா வியாபாரமா..? - மணிவண்ணன் #AppExclusive

”டைரக்டராக ஆரம்பித்து வில்லனாக முகம் காட்டி, அன்று காமெடியனாக வலம் வந்த மணிவண்ணனின் சுவாரஸ்ய பேட்டி இதோ உங்களுக்காக...

Published:Updated:
Exclusive Interview's Actor Manivannan
Exclusive Interview's Actor Manivannan
0Comments
Share

தீபாவளிக்கு மட்டும் மணிவண்ணன் நடித்த ஆறு படங்கள் ரிலீஸாகின்றன. டைரக்டராக ஆரம்பித்து அவ்வப்போது வில்லனாக முகம் காட்டி, இன்று காமெடியனாக கலக்கிக் கொண்டிருக்கும் மணிவண்ணன் பெயர் சொன்னால் ஏரியா விற்கிறது! `ரஜினியை விடவும் அதிகம் சம்பாதிக்கிறார்' என்று கவுண்டமணியைக் கை காட்டுவார்கள். அவரையும் நைஸாக ஓரங்கட்டிவிட்டுப் பறக்கிறது மணிவண்ணக்கொடி!மணிவண்ணன் வீட்டில் சர்ம்பல் நிற கிரானைட் பதிக்கப்பட்ட ஹாலைக் கடந்து உள்ளே போனதுமே மணிகள் கோத்த கதவுகளுடன் ஒரு ரூம்!

Exclusive Interview's Actor Manivannan
Exclusive Interview's Actor Manivannan

``பூஜையறைதான்! நான்தான் பக்கா நாத்திகவாதி... ஆனா, என் மனைவி ஒரு கோயில் பட்டாச்சாரியோட பொண்ணாச்சே! கோயில் சாப்பாட்டையே சாப்பிட்டு வளர்ந்த ஐயங்கார் பொண்ணு!" சிரித்தபடி மனைவி செங்கமலத்தை அறிமுகப்படுத்துகிறார்.செங்கமலத்தின் அண்ணன் ஆறுமுகமும் பாரதிராஜாவும் நெருங்கிய நண்பர்கள்.

பாரதிராஜாவே தன் சிஷ்யன் மணிவண்ணனுக்கு செங்கமலத்தை மனப்பெண்ணாக சிபாரிசு செய்ய இவர்களது கலப்புத் திருமணம் குன்றத்தூர் முருகன் கோயிலில் நடந்தது பதினேழு வருடங்களுக்கு முன்! இந்தத் தம்பதிக்கு இன்று இரண்டு குழந்தைகள். ஜோதியும் ரகுவும் படிப்பது நுங்கம்பாக்கம் `ஷெர்வுட் ஹால்' பள்ளியில்.

``கட்சி என்ன... கத்தரிக்கா வியாபாரமா..?  - மணிவண்ணன் #AppExclusive

``பசங்க கூட என்னை மாதிரி தான். சாமி பூதமெல்லாம் பிடிக்காது" - சிரிக்கிறார் மணிவண்ணன்.பாரதிராஜாவின் இயல்பான கிராமத்துப் படங்களால் கவரப்பட்டு, இருபத்து மூன்று வயதில் சென்னை வந்து துங்கம்பாக்கத்திலிருக்கும் அக்கா பரிமளமுத்து வீட்டில் தங்கிக்கொண்டு சினிமா வாய்ப்பு தேடி... இன்று புகழின் உச்சியில்!``எனக்கு எப்பவுமே நம்பிக்கை கொஞ்சம் அதிகம்...

நான் முதன் முதலா கதை வசனம் எழுதின 'நிழல்கள்' எனக்குப் பலத்த அடி வாங்கித்தந்த படம்தான் தெரியுங்களா? `பதினாறு வயதினிலே'ல ஆரம்பிச்சு அதுவரைக்கும் தொடர்ச்சியா ஹிட் படங்களா தந்துட்டிருந்த பாரதிராஜாவுக்கும் அந்தப் படம்தான் முதல் அடியே! `வழக்கமா பாரதிராஜாவுக்குக் கதை வசனம் எழுதற பாக்யராஜ், செல்வராஜ் ரெண்டு பேரையும் விட்டுட்டு, சினிமா தெரியாத ஒரு புதுப்பையனை எழுத வெச்சதாலதான் படம் விழுந்துடுச்சுன்னு இண்டஸ்டிரில பேச்சு கிளம்பிடுச்சு!

அந்த வெறியிலதான் அடுத்து `அலைகள் ஓய்வதில்லை'க்குக் கதை வசனம் எழுதினேன். ஃபீலிங்ஸை ஒதுக்கி வச்சுட்டேன். படத்துல எதார்த்தத்தை மீறின காதல் இருக்கும். செக்ஸ் கொஞ்சம் பிரதானமா இருக்கும். பட், படம் ஜெயிச்சது! நானும் படத்தை ஜெயிக்க வைக்கிற சூத்திரத்தை கத்துக்கிட்டேன்னு வெச்சுக்கங்களேன்!"

``இப்ப உங்க குருவை நீங்க பகைச்சுக்கிட்டதாகவும் நீங்க படைப்பாளிகள் அமைப்பு பக்கமே போகாததால்தான் அப்படி ஆச்சுன்னும்கூட பேச்சு இருக்கே..!"

``அதெல்லாம் வேலை வெட்டி இல்லாதவங்க பேசறதுங்க! உண்மையில் எனக்கும் பாரதிராஜாவுக்கும் குரு - சிஷ்யன்கிற உறவுக்கும் மேல் தந்தை - மகன்ங்கிற அளவுக்குப் பலமான உறவு இருக்குங்க. டைரக்ஷனை விட்டுட்டு நான் ஒரு நடிகனா ஆயிட்டதால் நடுநிலைமையோட இருப்போம்னுதான் அங்கே போகலே! - ஆனா என்னோட ஆதரவு தமிழ்ப் படைப்பாளிகள் சம்மேளனத்துக்குத் தான்...

ஃபெப்சிங்கிறதே தேவையில்லாத காய்ஞ்சுப்போன சருகு மாதிரிங்கிறது என்னோட கருத்து!"சமீப காலமாக டைரக்ஷனை விட்டுவிட்டு மணிவண்ணன் நடிப்பில் முழுசாக செட்டிலாகிவிட்டதுக்கு அவர் உடல்நிலையும் கூட ஒரு காரணம். நாலு வருடங்களுக்கு முன் மணிவண்ணனுக்கு பெரிய அளவில் ஆபரேஷன் ஒன்று ஆனது. அதிக குடியினால் வயிறு கெட்டு விட்டது தான் அந்த ஆபரேஷனுக்குக் காரணம் என்று அப்போது பேசப்பட்டது. ஆனால், அதை மறுக்கிறார் மணிவண்ணன்.

Exclusive Interview's Actor Manivannan
Exclusive Interview's Actor Manivannan

``அதற்கு ஒண்ணு ரெண்டு வருஷத்துக்கு முந்தியே நான் குடிப்பதை நிறுத்திவிட்டேங்க... அப்போ நடந்தது குடல் வால் ஆபரேஷன். உயிர் பிழைச்சதே உம்பாடு எம்பாடுன்னு ஆயிடுச்சுங்க. அந்த ஆபரேஷனுக்கு அப்புறம்தான் டைரக்ஷன்ல இருந்து விலகி இருக்க ஆரம்பிச்சுட்டேங்க...”பேச்சுக்குப் பேச்சு, வந்துங்க போய்ங்க என்று மரியாதையான கோயம்புத்துார் பாஷை மிளிர்கிறது.

"டைரக்ஷனை சுத்தமா மறந்துபோக நான் ஒண்ணும் தோல்விகரமான டைரக்டர் இல்லீங்களே... டைரக்டரா இருந்த பதினேழு வருஷமும் ரொம்ப பிஸியாவேதான் இருந்தேன். இப்பவும் கூட நிறைய சப்ஜெக்ட்டுகள் கைவசம் இருக்கு. அடுத்த மார்ச்சுக்கு மேல விஜய்யை வெச்சு ஒரு படம் பண்ணலாம்னு இருக்கேங்க!”தாடியைத் தடவி விட்ட படி காஷூவலாகப் பேசுகிறார்.“நினைச்சுப் பார்த்தா ஆச்சரியமா இருக்கு. நாப்பது வயசுக்கு மேல ஒரு லைஃப் வந்துருக்கு பாருங்க.

நடிக்கணும்னு தான் சினிமாவுக்கு வந்தேன்னுக் கூட சொல்லலாம். 'நிழல்கள்', 'கல்லுக்குள் ஈரம்’னு பாரதிராஜா சார் படத்தில எல்லாம் அடிச்சுப் பிடிச்சுட்டு சின்னச் சின்ன வேஷத்திலாவது வந்துடுவேன்... 'கொடி பறக்குது’லதான் கொஞ்சம் பேர் சொல்ற வேஷம்! என்ன பண்றது? அப்போ இருந்த என் மூஞ்சிக்குப் பெரிசா சான்ஸ் தர யாருக்கும் தைரியமில்லே! இன்னிக்கு இது க்ளிக் ஆயிடுச்சு...!”

“சரிதான்... ஆனா, அதே தாடி அதே இங்கிலீஷ் கலந்த டயலாக்னு உங்க நடிப்பு வித்தியாசமில்லாமல் ஒரே மாதிரியாகிவிட்டதே.!” “என்னங்க செய்றது..? `என்னங் கண்ணா'ன்னு டயலாக் பேசி ஒரு படம் ஹிட்டாகுதுன்னு வெச்சுக்கங்க. அடுத்தடுத்த படத்தில் `சூப்பரா இருக்கு சார். அதேபோல பேசிடுங்க'ன்னு ஆர்டர் போட்டறாங்க. நம்ம கெட்டப்பும் கூட இந்த ஸ்டைல்லதான் மாட்டிக்குது. இப்படியே போனா கொஞ்சநாள்ல சலிப்பு தட்டும்னு எனக்கும் தெரியுது. அதனால தான் இப்போல்லாம் மேக்கப், டயலாக் விஷயத்தில் வித்தியாசம் காட்ட முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன்.” என்று சொல்லும் மணிவண்ணனைத் தன்னைப் பற்றி சுய விமரிசனம் செய்து கொள்ளச் சொன்னால்...``எனக்குள்ளே எப்பவுமே ஒரு தலைவனுக்குரிய குணங்கள் இருக்கு...!" என்று சொல்லி அசத்தினார்!``பல்லு முளைச்ச வயசிலிருந்தே அரசியலைக் கவனிச்சு வளர்ந்ததாலேயோ என்னவோ என் பேச்சுல அரசியல் கிண்டல் ரொம்ப இருக்கும். அதையெல்லாம்தான் இப்போ என் படத்து டயலாக்ல கொண்டு வர்றேன். கிராமத்துலகூட நான் எதுக்கும் பணியாத ஒரு போர்க்குணமுள்ள இளைஞன்னு வெச்சுக்கங்களேன். மத்தவங்க பாஷையில் சொன்னா முரட்டுப் பிடிவாதக்காரன்! அந்தப் போர்க்குணம் இன்னிக்கும் என்கிட்டே இருக்கிறதால எந்த அரசியல் கட்சிகள்கூடவும் என்னால் அனுசரிச்சுப் போக முடியலே...!” என்றவர் அரசியல்வாதிகளை ஒரு பிடி பிடித்தார்.ம.தி.மு.க-விலிருந்து விலகியது பற்றியும் சொன்னார் : ``வை.கோ-வோட நியாயமான போர்க்குணம் எனக்குப் பிடிச்சிருந்ததால் அவர் கட்சிக்குப் போனேங்க... கடைசியில் அவரே இத்தனை ஊழல் பண்ணின ஜெயலலிதாவோட போய்க் கூட்டுச் சேர்ந்துட்டார்... கேட்டா, `அடுத்த எலெக்ஷன்ல நம்ம கட்சிக்கான வோட்டுகளை அதிகப்படுத்த'ன்னு ஒரு பதில் கிடைச்சது. வோட்டு கிடைக்கணும்கிறதுக்காகக் கட்சி வெச்சிருக்கறவங்களோட எனக்கு என்ன வேலைன்னு சொல்லுங்க? இப்போ நானே தலைவன்... நானே தொண்டன். தனி நபர் சிந்தனையே கொள்கை.!"

Exclusive Interview's Actor Manivannan
Exclusive Interview's Actor Manivannan

``நீங்களே ஏன் ஒரு கட்சி ஆரம்பிச்சுடக் கூடாது..?”

``கட்சி என்ன... கத்தரிக்காய் வியாபாரமா... டக்குன்னு ஒரு தனி மனுஷன் ஆரம்பிச்சுடறதுக்கு.? ஒரு நல்ல காரணத்துக்காக ஒரே மாதிரி பாலிஸி கொண்ட பலர் சேர்ந்து ஆரம்பிக்கிற ஒரு இயக்கம் அது. அப்படித்தான் காங்கிரஸ் அன்னிக்கு ஆரம்பமாச்சு. ஆனா, இப்போல்லாம் 'உன்னோட எனக்குச் சரிப்பட்டு வராதுப்பா. நானே தனியா கடை போட்டுக்கறேன்’னு மளிகைக்கடை போடற மாதிரி கட்சியைக் கேவலப்படுத்திட்டாங்க..."

விடுதலைப்புலிகளிடம் மணிவண்ணனுக்கு இருக்கும் தொடர்பையும் ஒரு காலத்தில் அவர் வீட்டில்கூட சில விடுதலைப்புலிகள் தங்கியிருந்தார்கள் - வீட்டில் சயனைட் குப்பிகளைக் கூட கண்டெடுத்தார்கள் என்று கூறப்படும் விஷயம் பற்றியும் விசாரித்தோம்...

'இதெல்லாம் `டூ' மச்'ங்க... விடுதலைப்புலிகள் கிட்டே எனக்கு அனுதாபம் இருக்கு. அதுவும், ராஜீவ் படுகொலைக்கு அப்புறம் நான் நடுநிலைமையாளனாகி விட்டேன். விடுதலைப்புலிகள்தான்னு இல்லை...

விடுதலைக்காகப் போராடற எந்த நாட்டுக்காரனா இருந்தாலும், எந்த மொழியாக இருந்தாலும்கூட என் அனுதாபம் அவங்களுக்கு உண்டு, மனிதாபிமானமும் தன் மானமும் உள்ள யாருமே சொல்ற விஷயம் தானே இது” என்றார்.''நான் அழுது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? நேத்து டி.வி. செய்தியில் ஒரு விஷயத்தைப் பார்த்து நான் கலங்கிவிட்டேன்...

கியூபாவோட நிதியமைச்சரா இருந்து போராளியா மாறின `செகுவாரா'ங்கிறவரைப் பத்தி காட்டினாங்க. எப்பவோ முப்பது வருவடித்துக்கு முன்னே அமெரிக்க சி.ஐ.ஏ. திட்டம் போட்டு அவரைக் கொன்னு புதைச்ச உடம்பைத் தேடிப் பிடிச்சு இப்போ கியூபாவுக்கு எலும்புக்கூடா கொண்டு வந்திருக்காங்க. நம்மூர்ல நாட்டுக்காகப் போராடின சுபாஷ் சந்திர போஸ் இருக்காரா செத்தாரான்னு கூட நம்மளால இன்னும் கண்டுபிடிக்க முடியலே!"திரையில் காமெடி பண்ணும் அந்த நடிகரின் கண்களில் நிஜக் கண்ணீர்!

- லோகநாயகி

படங்கள்: பொன்ஸீ

(02.11.1997 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)