``நாடு சர்வாதிகாரத்தின் கீழ் இருக்கிறது... ஜனநாயகம் இறந்துவிட்டது" - ராகுல் காந்தி காட்டம்

``இந்த சர்வாதிகாரம் இரண்டு, மூன்று பெரிய வணிகர்களின் நலனுக்காக இரண்டு நபர்களால் நடத்தப்படுகிறது.” - ராகுல் காந்தி

Published:Updated:
ராகுல் காந்தி
ராகுல் காந்தி
0Comments
Share

கடந்த 2 -ம் தேதி காங்கிரஸ் தலைவர்கள் ஆகஸ்ட் 5-ம் தேதி (இன்று) நாடு தழுவிய போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். ஆனால், டெல்லியில் தடை உத்தரவு அமலில் இருப்பதால், காவல்துறை அதிகாரிகள் இந்தப் போராட்டத்தை நடத்த காங்கிரஸ் கட்சிக்கு அனுமதி மறுத்துள்ளனர். ஆனாலும், டெல்லியில் சில இடங்களில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்க இயக்குநரகம் (ED) விசாரணை நடத்துவது பா.ஜ.க-வின் மிரட்டல் தந்திரம். அதற்கெல்லாம் நாங்கள் பயப்படவில்லை. அவர்கள் எதைச் செய்தாலும் எங்களில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. நம் நாட்டையும், அதன் ஜனநாயகத்தையும், சகோதரத்துவத்தையும் பாதுகாக்க நான் தொடர்ந்து பணியாற்றுவேன்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

மேலும், கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால் எங்களை அமைதிப்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள். நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். பா.ஜ.க என்ன செய்கிறதோ அதற்கு எதிராக நாங்கள் நிற்போம். நாங்கள் பயப்பட மாட்டோம். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசால், இன்று இந்தியாவில் ஜனநாயகம் இல்லை, பேச அனுமதி மறுக்கப்படுகிறது. போராட்டம் நடத்த அனுமதிக்கப்படவில்லை, மக்களவை மற்றும் மாநிலங்களவையிலிருந்து கேள்வி கேட்பவர்கள் இடைநீக்கம் செய்யப்படுகிறோம். நமது நாடு சர்வாதிகாரத்தின் கீழ் இருக்கிறது, ஜனநாயகம் இறந்துவிட்டது. ஜனநாயகத்தின் மரணத்தை நாங்கள் காண்கிறோம்.

ராகுல் காந்தி - மோடி
ராகுல் காந்தி - மோடி

ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இந்தியா கட்டப்பட்டது. தற்போது உங்கள் கண்முன்னே அழிக்கப்படுகிறது. சர்வாதிகாரம் தொடங்கும் இந்தத் திட்டத்துக்கு எதிராக நிற்கும் எவரும் கொடூரமாகத் தாக்கப்படுகிறார்கள், சிறையில் அடைக்கப்பட்டார்கள், கைதுசெய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டனர். விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், சமூகத்தில் வன்முறை போன்ற மக்கள் பிரச்னைகள் கேள்விகளாக எழுப்பப்படுவதை அரசு விரும்பவில்லை என்பதுதான் எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்தைச் சொல்லவிடாமல் இருப்பதன் பின்னணியில் உள்ள திட்டம். இதுதான் அரசின் ஒரே செயல்திட்டம். இது நான்கைந்து பேரின் நலனைப் பாதுகாப்பதற்காக நடத்தப்படுகிறது.

மோடி
மோடி

இந்த சர்வாதிகாரம் இரண்டு, மூன்று பெரிய வணிகர்களின் நலனுக்காக இரு நபர்களால் நடத்தப்படுகிறது. இந்தியாவிலுள்ள அனைத்துச் சுதந்திர அமைப்புகளும் இன்று பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஆர்.எஸ்.எஸ்-ஸின் யோசனையை எதிர்ப்பதே எனது வேலை, அதைத் தொடர்ந்து செய்யப்போகிறேன். எவ்வளவு அதிகமாகச் செய்கிறேனோ, அவ்வளவு அதிகமாக நான் தாக்கப்படுவேன் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தொடர்ந்து எனது பணியை மேற்கொள்வேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.