அதிமுக: தொண்டர்களிடம் பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்து பெறத் திட்டமா?- ஓபிஎஸ்-ன் மூவ் என்ன?

அ.தி.மு.க-வை கைப்பற்றுவதில் எடப்பாடி வேகம் காட்டிவரும் நிலையில், பன்னீர் தரப்பு என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

Published:Updated:
ஓபிஎஸ்
ஓபிஎஸ்
0Comments
Share

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை பிரச்னை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தச் சூழலில், கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில், சட்ட விதிகளைத் திருத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல், பன்னீர்செல்வம் மற்றும் அவர் ஆதரவாளர்களைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்த பிரமாணப் பத்திரம் ஏற்கெனவே இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், பொதுக்குழுவுக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்யப்பட்டதால் எடப்பாடி தரப்பு தாக்கல்செய்த பிரமாணப் பத்திரங்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

இதையடுத்து, பொதுக்குழு தொடர்பாக தனி நீதிபதியின் உத்தரவை ரத்துசெய்த இரு நீதிபதிகள்கொண்ட சென்னை உயர் நீதிமன்ற அமர்வு, ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுவும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது. அதைத் தொடர்ந்து, நீதிமன்றத் தீர்ப்பின் நகல் மற்றும் ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுத் தீர்மானங்கள், அதை ஆதரிக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட 2,532 பிரமாணப் பத்திரங்களை எடப்பாடி ஆதரவாளர் சி.வி.சண்முகம் அண்மையில் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் மீண்டும் தாக்கல்செய்தார். டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்த அடுத்த நாளே எடப்பாடி பழனிசாமி தரப்பு தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல்செய்தது கவனிக்கத்தக்கதாக மாறியிருக்கிறது. 

எடப்பாடி பழனிசாமி - சி.வி.சண்முகம்
எடப்பாடி பழனிசாமி - சி.வி.சண்முகம்

அ.தி.மு.க-வை கைப்பற்றுவதில் எடப்பாடி வேகம் காட்டிவரும் நிலையில், பன்னீர் தரப்பு என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. இது குறித்து பன்னீர் தரப்பு மூத்த நிர்வாகிகளிடம் பேசினோம். ``கட்சியின் திருத்தப்பட்ட 43-வது விதியின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரைத் தொண்டர்கள் தேர்ந்தெடுத்தார்கள். இருவரின் பதவிக்காலமும் 5 வருடங்கள் தொடர்கிறது. இதில், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்த எடப்பாடி அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதனால், ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டுமே அதிகாரபூர்வமாகத் தொடர்கிறது. எனவே, ஒருங்கிணைப்பாளர் பதவி தொடர வேண்டும் என்றும், ஒருங்கிணைப்பாளருக்குத்தான் அனைத்து அதிகாரங்களும் இருக்கின்றன என்பதையும் நிரூபிக்கும் வகையில் முதற்கட்டமாக பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களிடம் பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி அதைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கவிருக்கிறோம்.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

தொண்டர்கள்தான் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது அ.தி.மு.க-வின் சட்ட விதி. பொதுக்குழுவுக்குத் தலைவரை தேர்வுசெய்ய எந்த அதிகாரமும் இல்லை. எனவே, தமிழ்நாடு முழுவதும் தொண்டர்களிடம் கையெழுத்து பெற்று அதை பிரமாணப் பத்திரமாக இந்தியத் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கவிருக்கிறோம். சென்னையில் இதற்கான ஆலோசனைக் கூட்டம் பன்னீர்செல்வம் தலைமையில் நடக்கிறது" என்றனர்.  

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பன்னீரும், எடப்பாடியும் போட்டிப் போட்டு பிரமாணப் பத்திரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய முனைப்பு காட்டி வருகின்றனர்.