"என் அக்கா வீனஸ் இல்லையென்றால் நான் இங்கு இல்லை!"- கண்ணீருடன் விடைபெற்ற செரீனா வில்லியம்ஸ்

27 ஆண்டுக்கால டென்னிஸ் பயணத்தை நிறைவு செய்த செரீனா வில்லியம்ஸ், தனது டென்னிஸ் பயணம் குறித்தும் தனது சகோதரி வீனஸ் குறித்தும் கண்ணீருடன் பேசினார்.

Published:Updated:
செரீனா வில்லியம்ஸ்
செரீனா வில்லியம்ஸ்
0Comments
Share
அமெரிக்காவைச் சேர்ந்த 40 வயதான டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், 4 ஒலிம்பிக் தங்கப் பதக்கம் மற்றும் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று டென்னிஸ் விளையாட்டில் ஜாம்பவானாக வலம் வருபவர். தற்போது நியூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வரும் செரீனா, இந்தத் தொடருக்குப் பின்னர் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற இப்போட்டியின் தொடக்கச் சுற்றில் மாண்டினீக்ரோ (Montenegro) நாட்டு வீராங்கனை கோவினிச்சை எதிர்கொண்டு 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். அதேபோல் இரண்டாவது சுற்றில் எஸ்டோனியன் நாட்டு வீராங்கனையை அனெட் கொண்டவீட்டை 7-6, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.

தனது சகோதரி வீனஸ் உடன் செரீனா வில்லியம்ஸ்
தனது சகோதரி வீனஸ் உடன் செரீனா வில்லியம்ஸ்

இதையடுத்து நேற்று நடந்த மூன்றாவது சுற்றில் குரோஷியா வீராங்கனை அஜ்லா டோம்லஜனோவிக்கை (Ajla Tomljanovic) எதிர்கொண்டு ஆடினார். இதுதான் செரீனா விளையாடும் கடைசித் தொடர் என்பதால் இந்த ஆட்டம் பரபரப்பாகச் சென்று கொண்டிருந்தது. ஆட்டத்தின் இறுதியில் 5-7, 7-6, 1-6 என்ற செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸ் தோல்வி அடைந்தார். இதனால் அவர் அமெரிக்க ஓப்பன் போட்டியிலிருந்து வெளியேற நேர்ந்தது.

இதைத் தொடர்ந்து முன்னரே அறிவித்தது போல 27 ஆண்டுகளாக டென்னிஸ் விளையாட்டின் ஜாம்பவானாக வலம் வந்த செரீனா வில்லியம்ஸின் பயணம் நிறைவு பெற்றது. அவரது சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்குப் பிரியா விடை கொடுத்தனர்.

இந்நிலையில் தனது இத்தனை ஆண்டுக்கால டென்னிஸ் பயணம் பற்றிக் கண்ணீருடன் பேசிய செரீனா, "நான் செரீனாவாக இங்கு இருப்பதற்குக் காரணம் என் சகோதரி வீனஸ். அவள் இல்லாவிட்டால் நான் செரீனாவாக இருந்திருக்க முடியாது. எனவே இந்தச் சமயத்தில் என் சகோதரி வீனஸ்க்கு நன்றி கூற விரும்புகிறேன். இவை அனைத்தும் என் பெற்றோரிடமிருந்துதான் தொடங்கியது. அவர்களுக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவளாக இருப்பேன். என் கண்களில் இப்போது இருப்பது ஆனந்தக் கண்ணீர் என்றே நினைக்கிறேன். இது என் வாழ்வின் மகிழ்ச்சியான பயணம்" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

இதற்கு முன் பேட்டி ஒன்றில் வருங்கால டென்னிஸ் வீரர்களுக்குக் குறிப்பாக கறுப்பின பெண் வீராங்கனைகள் குறித்துப் பேசியிருந்த செரீனா, "கறுப்பினப் பெண்கள் தன்னம்பிக்கையுடன் இருக்கவேண்டும். கறுப்பாக இருப்பதை எண்ணி வருத்தப்படாதீர்கள். மாறாக, அதை எண்ணிப் பெருமைப்படுங்கள்" என்று அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வண்ணம் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.