எம்.எல்.ஏ-க்கள் உறங்கிய பிறகு ஆட்சி கவிழ்ப்பு திட்டத்தை அரங்கேற்றிய ஏக்நாத் ஷிண்டே - பட்னாவிஸ்!

எம்.எம்.ஏ.க்கள் அஸ்ஸாமில் தங்கி இருந்த போது ரகசியமாக வந்து தேவேந்திர பட்னாவிஸை சந்தித்து பேசிவிட்டு செல்வேன் என்று மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

Published:Updated:
ஆலோச்
ஆலோச்
0Comments
Share

மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியை கவிழ்ப்பதில் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னின்று செயல்பட்டாலும், அதனை வெளியில் காட்டிக்கொள்ளாமல் கடைசி வரை இருந்தார். பட்னாவிஸ் முதல்வர் பதவிக்காக அலைகிறார் என்று அனைத்து தரப்பினரும் குற்றம்சாட்டியதால், இம்முறை மறைமுகமாக இருந்து ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார். ஆனால் கட்சியின் உயர்மட்டக்குழு எடுத்த நடவடிக்கையால் முதல்வர் பதவி தேவேந்திர பட்னாவிஸுக்கு கிடைக்காமல் போய்விட்டது.

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை அஸ்ஸாம் மாநிலத்திற்கு அழைத்து சென்றதில் இருந்து பாஜக தலைவர்களும், ஏக்நாத் ஷிண்டேயும் ரகசிய வேலைகளை எல்லாம் இரவு நேரத்தில் மட்டுமே செய்துள்ளனராம். சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவரையும் போன் மூலம் பேசி தங்களது பக்கம் இழுப்பது, அவர்களுக்கு வாகன வசதி செய்து கொடுப்பது போன்ற நடவடிக்கை நடந்துள்ளது. தேவேந்திர பட்னாவிஸ் இதற்காக குஜராத் சென்று முகாமிட்டு இருந்தார். அவரை தனி விமானத்தில் வந்து அடிக்கடி ஏக்நாத் ஷிண்டே சந்தித்துவிட்டு சென்றுள்ளாராம். இந்த ஆட்சி கவிழ்ப்பு அனைத்திற்கு முழுக்காரணம் தேவேந்திர பட்னாவிஸ் என்ற உண்மையையும் ஏக்நாத் ஷிண்டே போட்டு உடைத்துவிட்டார்.

எம்.எல்.ஏ.க்களுடன் ஷிண்டே
எம்.எல்.ஏ.க்களுடன் ஷிண்டே

நேற்று சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்ட பிறகு இதனை ஷிண்டே தெரிவித்தார். ``எனது அணி எம்.எல்.ஏ-க்கள் இரவில் உறங்கிய பிறகு நான் குஜராத் வந்து தேவேந்திர பட்னாவிஸை சந்தித்து பேசுவது வழக்கம். அவர்கள் காலையில் எழும்பும் முன்பு நான் மீண்டும் அவர்கள் தங்கி இருந்த ஹோட்டலுக்கு சென்றுவிடுவேன். இவை அனைத்திற்கும் காரணம் தேவேந்திர பட்னாவிஸ்” என்று அருகில் இருந்தவரை குறிப்பிட்டார்.

ரகசியம் வெளியில் வந்ததை அறிந்து பட்னாவிஸ் சற்று சங்கோஜத்துடன் இருந்தார். ``எனது எம்.எல்.ஏ.க்களுக்கு நான் எப்போது என்ன செய்கிறேன் என்று தெரியாது. எங்களை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை குறைவுதான். ஆனால் பதவி ஏற்கும் முன்பாக பிரதமர் நரேந்திர மோடி போன் மூலம் தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதாக குறிப்பிட்டார். அமைச்சர் அமித் ஷாவும் எங்களை மலை போல் நின்று காப்பதாக குறிப்பிட்டார்” என்றார். சந்திப்புகள், திட்டமிடுதல் அனைத்தும் நள்ளிரவிலேயே நடந்து முடிந்திருக்கிறது.

இதற்கிடையே உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே மீது மட்டும் கொறடா உத்தரவை மீறியதற்காக நடவடிக்கை எடுக்கப்படாது என்று ஏக்நாத் ஷிண்டே ஆதரவு கொறடா பரத் கொகாவாலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ``மறைந்த பால்தாக்கரேயிக்கு மரியாதை கொடுக்கும் விதமாக ஆதித்ய தாக்கரே மீது மட்டும் கொறடா உத்தரவை மீறியதற்காக நடவடிக்கை எடுக்கும்படி கேட்கவில்லை. கொறடா உத்தரவை மீறி வாக்களித்த மற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் பதவி பறிக்க சபாநாயகரிடம் நோட்டீஸ் கொடுத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

ஆதித்ய தாக்கரே
ஆதித்ய தாக்கரே

மேலும் பெரும்பான்மையை நிரூபிக்கும் தீர்மானத்தின் மீது வாக்களிக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் வரவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சியிலும் பிளவு ஏற்பட்டுவிட்டதா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் நேற்று தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் எம்.எல்.ஏ.க்களால் குறிப்பிட்ட நேரத்திற்கு வரமுடியாமல் போய்விட்டது. சில எம்.எல்.ஏ.க்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்கொண்டதாக தெரிய வந்துள்ளது. வேறு சிலர் முன்கூட்டியே வந்து பார்த்துவிட்டு அதிக நேரம் பிடிக்கும் என்று கருதி சென்று இருந்தனர். எம்.எல்.ஏ.க்கள் மிகவும் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டது கட்சி தலைமையை அதிருப்தியடைய செய்துள்ளது. ஆனால் சில நிமிடங்கள் தாமதமாக வந்ததற்காக அவையை மூடிவிட்டதாக அசோக் சவான் குற்றம் சாட்டியிருக்கிறார்.