பன்னீர் ஸ்கெட்சை முறியடிக்க எடப்பாடி போடும் மெகா திட்டம்! - அடுத்தக்கட்ட நகர்வுகள் என்னென்ன?!

கொங்கு மண்டலத்தில் மட்டும் ஆதிக்கத்தைச் செலுத்தி வரும் இபிஎஸ் தரப்பு, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தங்களது செல்வாக்கை உறுதிப்படுத்தும் வகையிலும் மிகப்பெரும் திட்டம் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
0Comments
Share

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பொதுச்செயலாளர் பதவி யாருக்கு என்பதில் பெரும் குழப்பம், நிலவி வருகிறது. சசிகலாவுக்குப் பிறகு டி.டி.வி தினகரன் என்ற நிலையை ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் சேர்ந்தே மாற்றினர். அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான போட்டி நாளுக்கு நாள் நீண்டு கொண்டு செல்கிறதே தவிர இன்னமும் முடிவுக்கு வந்தபாடில்லை. அதே சமயம், பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களை கைக்குள் போட்டுக் கொண்டு எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் பதவியைத் தக்கவைத்துக் கொண்டார்.

எடப்பாடி பழனிசாமி - சசிகலா - ஓ.பன்னீர் செல்வம்
எடப்பாடி பழனிசாமி - சசிகலா - ஓ.பன்னீர் செல்வம்

இதனையடுத்து இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இருவரும் மாறி மாறி எதிர் முகாமில் இருப்பவர்களை அதிமுக-விலிருந்து நீக்குவதாக அறிவித்தனர். மற்றொரு பக்கம் சட்டப்போராட்ட யுத்தமும் நடந்து கொண்டிருக்கிறது.

கூட்டம்
கூட்டம்

இந்த நிலையில்தான் கட்சியில் பின்னடைவைச் சந்தித்தது வரும் ஓ.பி.எஸ், கட்சியைக் கைப்பற்றும் முயற்சியில், பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டவும் அதைத் தொடர்ந்து `ஆபரேஷன் எஸ்’ என்கின்ற பெயரில் ஒரு பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்திக்காட்டவும் திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

நிலைமை இவ்வாறு இருக்க, கொங்கு மண்டலத்தில் மட்டும் ஆதிக்கத்தைச் செலுத்தி வரும் எடப்பாடி தரப்பு, தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தங்களது செல்வாக்கை உறுதிப்படுத்தும் வகையிலும், அதிமுக எனும் கட்சி தங்களுடையதுதான் என்று க்ளைம் பண்ணும் விதமாகவும் மிகப்பெரும் திட்டம் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். அந்த வகையில் திருநெல்வேலி, மதுரை, கோவை, சேலம், திருச்சி, காஞ்சிபுரம் என அடுத்தடுத்து ஆறு இடங்களில் பெரும் மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளனராம்.

கூட்டம்
கூட்டம்

ஓ.பி.எஸ்-க்கான செல்வாக்கு தென்மாவட்டங்களில் என்று சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில், முதலில் அங்கிருந்து தொடங்க முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறதாம். அதற்கான முன்னோட்டம்தான், அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக​ எடப்பாடி தேர்வானதைத் தொடர்ந்து மாவட்ட வாரியாகத் தொண்டர்களைச் சந்தித்துவருகிறார். அதில் திண்டுக்கல் மாவட்டம், பழனியில் நடந்த வரவேற்பு விழாவில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ​தொண்டர்களைச் சந்தித்தார்‌. இந்த நிகழ்விற்கான கூட்டத்தைத் திண்டுக்கல் மாவட்டம் முழுவதுமிருந்து இருந்து முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் ஏற்பாட்டில் ஆயிரக்கணக்கானோர் திரட்டப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.