``தற்காலிகமாக தடுக்கலாம்... நிரந்தரமா முடியாது" - நிர்வாகிகள் கூட்டத்தில் வெடித்த எடப்பாடி

கூட்டத்தில், 'தமிழ்நாட்டுல, நம்ம கூட கூட்டணி வைச்சாதான் எந்தக் கட்சியாலயும் வெற்றியடைய முடியும். அது புரிய வேண்டியவங்களுக்குப் புரியும்' என்று பட்டாசாக வெடித்திருக்கிறார் எடப்பாடி.

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
0Comments
Share

சட்டமன்றக் கூட்டத்தொடர் அறிவிப்பு, சிவசேனா கட்சியின் சின்னம் முடக்கம், பன்னீரின் போட்டி நிர்வாகிகள் நியமனம் என அ.தி.மு.க-வை உலுக்கும் நடவடிக்கைகளுக்கு இடையே, சென்னை எம்.ஜி.ஆர் மாளிகையில் நடந்திருக்கும் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பரபரப்பை எகிற வைத்துவிட்டது. கூட்டத்தில், எடப்பாடி பேசியிருக்கும் சில விஷயங்கள்தான் நிர்வாகிகள் மத்தியில் 'ஹாட் டாபிக்'.

அக்டோபர் 10-ம் தேதி நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, ஏழு மாவட்டச் செயலாளர்கள் வரவில்லை. 'அவர்களின் உடல்நிலை சரியில்லாததால் பங்கேற்கவில்லை' என்பது காரணமாகச் சொல்லப்பட்டது. கூட்டத்தில் வரவேற்புரையை தமிழ்மகன் உசேனும், நன்றியுரையை திண்டுக்கல் சீனிவாசனும் நிகழ்த்தியிருக்கிறார்கள். 15 நிமிடமே பேசினாலும், பேச்சில் பட்டாசைக் கொளுத்திவிட்டாராம் எடப்பாடி.

நிர்வாகிகள் கூட்டம்
நிர்வாகிகள் கூட்டம்

அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் சிலரிடம் பேசினோம். "இந்த ஆலோசனைக்கூட்டத்தில், கழகத்தின் பொன்விழா நிறைவு பொதுக்கூட்டங்கள், 51-ம் ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டங்கள் குறித்துதான் பிரதானமாகப் பேசப்பட்டது. ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு பொதுக்கூட்டம் வீதம், தமிழகமெங்கும் கூட்டங்களை நடத்திட எடப்பாடி வலியுறுத்தினார். சசிகலா, பன்னீர்செல்வம் குறித்து எதுவும் பேசவில்லை. ஆனால், பா.ஜ.க தரும் மறைமுக அழுத்தத்தைக் குறிப்பிட்டும் சில விஷயங்களைப் பேசினார்.

நம்ம பக்கம்தான் நியாயம் இருக்கு. நம்ம பக்கம் 95 சதவிகித நிர்வாகிகள் இருக்காங்க. உச்ச நீதிமன்றத்துல நம்ம பக்கம்தான் சாதகமா தீர்ப்பு வரும். நமக்கு எதிரானவங்க, சிலரோட கூட்டு போட்டுகிட்டு வெற்றியை தற்காலிமா தடுக்கலாம்... ஆனா, நிரந்தரமா தடுக்க முடியாது. தி.மு.க மேல மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கு. 'ஓசில போறீங்க'னு பொன்முடி சொல்றதுல தொடங்கி, அடித்தட்டு மக்களை தி.மு.க-காரங்க மிரட்டுறது வரை, இந்த ஆட்சி மேல மக்களுக்கு கோபம்தான் ஏற்பட்டிருக்கு. அந்தக் கோபத்தை நமக்குச் சாதகமா மாத்திக்கணும். தமிழ்நாட்டுல, நம்ம கூட கூட்டணி வைச்சாதான் எந்தக் கட்சியாலயும் வெற்றியடைய முடியும். அது புரிய வேண்டியவங்களுக்குப் புரியும்' என்று பட்டாசாக வெடித்தார்.

நிர்வாகிகள் கூட்டம்
நிர்வாகிகள் கூட்டம்

உட்கட்சிப் பிரச்னையால் சிவசேனா கட்சியின் சின்னம் முடக்கப்பட்டதிலிருந்து, அ.தி.மு.க-வின் இரட்டை இலைச் சின்னமும் முடக்கப்படலாம் என்கிற பேச்சு எழுந்திருக்கிறது. அதற்கு பதிலளிப்பது போலத்தான் எடப்பாடியின் பேச்சு அமைந்திருந்தது. பெரும்பாலான நிர்வாகிகளும், அ.தி.மு.க கட்டமைப்பும் தன் வசம் இருப்பதால், தன்னை பகைத்துக் கொண்டு எந்த தேசிய கட்சியாலும் தமிழ்நாட்டில் வெற்றிப் பெற முடியாது என்பதை மறைமுகமாக கூறினார் எடப்பாடி. கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளின் செல்போன்களை வாங்கி வைத்துக் கொண்டாலும், கூட்டத்தில் தான் பேசுவது டெல்லி வரைச் செல்லும் என்பதெல்லாம் எடப்பாடிக்கு நன்றாகத் தெரியும். அதையெல்லாம் தெரிந்தேதான் பேசினார். விரைவிலேயே, ஒன்றிய அளவில் தி.மு.க ஆட்சிக்கு எதிராக கூட்டங்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

அக்டோபர் 17-ம் தேதி சட்டமன்றம் கூடவிருக்கிறது. எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உதயகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் சபாநாயகர் அலுவலகத்திற்குத் தெரியப்படுத்தப்பட்டும், இதுவரை அந்த விவகாரத்தில் சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை. கூட்டத்தொடரில், பன்னீருடன் ஒரே இருக்கையில் உரசிக்கொண்டு உட்கார எடப்பாடி விரும்பவில்லை. கடந்த காலங்களில், எதிர்க்கட்சி வரிசையில் அ.தி.மு.க இருந்தபோது, சட்டமன்றத்திற்கு வராமலேயே அரசியல் செய்தவர் ஜெயலலிதா. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் ஒரு முடிவு எடுக்காதவரை, ஜெயலலிதா பாணியில் சட்டமன்றத்தை புறக்கணிக்கும் முடிவில் இருக்கிறார் எடப்பாடி. இதுதொடர்பாகவும், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்தார்" என்றனர் விரிவாக.

நிர்வாகிகள் கூட்டம்
நிர்வாகிகள் கூட்டம்

அ.தி.மு.க-வின் லகானை விட்டுக் கொடுக்காமல், குதிரையை செலுத்தப் பார்க்கிறார் எடப்பாடி. குதிரையும் இப்போதுவரை அவர் கட்டுப்பாட்டுக்குள்தான் நகர்கிறது. கட்டுப்பாடு தொடருமா, அல்லது தளருமா என்பது பிரதமரின் தேவர் குருபூஜை விசிட்டுக்குப் பிறகு தெரிந்துவிடும்.