``பதவி வேண்டுமென்றால் அடிக்கடி அழைப்பு கொடுப்பார்” - பன்னீர் கோரிக்கையை நிராகரித்த எடப்பாடி

``அதிமுக இயக்கத்தைச் சிலர் தங்கள்வசம் கொண்டு செல்ல முயல்கின்றனர். அதைத் தடுக்கும்போதுதான் சில பிரச்னைகள் உருவாகின்றன.'' - எடப்பாடி பழனிசாமி

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
0Comments
Share

``அம்மாவின் பிள்ளைகளான எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அசாதாரணச் சூழல் ஏற்பட்டது. அவற்றை எங்கள் மனதிலிருந்து அப்புறப்படுத்தி, மீண்டும் கழகம் ஒன்றிணைந்து மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. ஆகவே, கசப்புகளை மறந்து, ஒன்றிணைந்து, கூட்டுத் தலைமையாகச் செயல்படுவோம்” என சசிகலா, டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு ஓ.பன்னீர்செல்வம் இன்றைய செய்தியாளர் சந்திப்பின் மூலம் அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில், இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், ``அதிமுக இயக்கத்தைச் சிலர் தங்கள்வசம் கொண்டு செல்ல முயல்கின்றனர். அதைத் தடுக்கும்போதுதான் சில பிரச்னைகள் உருவாகின்றன. பொதுக்குழு உறுப்பினர்களால்தான் அதிமுக-வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

அதிமுக-வில் பொதுக்குழுவுக்கு மட்டுமே முழு அதிகாரம் இருக்கிறது. செயற்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டால் மட்டுமே தீர்மானம் செல்லும். ஒப்புதல் பெறாததால் இரட்டைத் தலைமை பதவி காலாவதியாகிவிட்டது. ஒற்றைத் தலைமை வேண்டும் என மக்களும், கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் விரும்புகின்றனர். ஓ.பி.எஸ் அவருக்குப் பதவி வேண்டுமென்றால் அடிக்கடி அழைப்பு கொடுப்பார்.

ஓ.பி.எஸ்-ஸிடம் உழைப்பு கிடையாது. ஆனால் பதவி மட்டும் வேண்டும். அவரால் பதவி இல்லாமல் இருக்க முடியாது. அவருடைய குடும்பத்தில் இருப்பவர்களுக்குப் பதவி வேண்டும். மற்றவர்களை பற்றி அவருக்குக் கவலை கிடையாது. ஓபிஎஸ்-ஸின் மகனும், எம்பி-யுமான ரவீந்திரநாத், ஸ்டாலினைச் சந்தித்து `சிறப்பான ஆட்சி’ என வாழ்த்து சொல்வது எப்படிச் சரியாகும்... அதிமுக தொண்டர்கள் அதை எப்படி ஏற்பார்கள்... ரெளடிகளை வைத்து அதிமுக அலுவலகத்தை ஓ.பி.எஸ் தாக்கினார். அதிமுக அலுவலகத்திலிருந்து முக்கிய ஆவணங்களை ஓ.பி.எஸ் தரப்பினர் திருடிச் சென்றனர்.

அதிமுக - ஓபிஎஸ் - இபிஎஸ்
அதிமுக - ஓபிஎஸ் - இபிஎஸ்

உயர்ந்த பொறுப்பில் இருக்கிற ஓ.பி.எஸ் இப்படித் தாழ்வாக, அநாகரிகமாக நடந்துகொண்டால் எப்படி அவருடன் இணைந்து பணியாற்ற முடியும்... ஒற்றைத் தலைமை குறித்து அதிமுக நிர்வாகிகள் ஓ.பி.எஸ்-ஸுடன் 15 நாள்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பொதுக்குழுவுக்கு நாங்கள் அழைப்பு விடுத்தபோது நிராகரித்த ஓ.பி.எஸ்., ஏன் நீதிமன்றங்களை நாடிச் செல்கிறார்?.

நான் எப்போதும், எந்தப் பதவிக்கும் ஆசைப்பட்டது கிடையாது. நான் எப்போதும் சொந்தக்காலில் நிற்க விரும்புபவன். கட்சிக்குச் சோதனையான காலங்களிலும் உண்மையாகச் செயல்பட்டேன்'' என்றார் காட்டமாக.