``அமித் ஷாவிடம் பேசியது என்ன?” - 20 நிமிட சந்திப்புக்குப் பின் எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

``உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் .கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை விரைவுப்படுத்த கோரிக்கை வைத்தோம்'' - எடப்பாடி பழனிசாமி!

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி - அமித் ஷா
எடப்பாடி பழனிசாமி - அமித் ஷா ( File photo2 )
0Comments
Share

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வரும்நிலையில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடம் நீடித்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், `` உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் பற்றி உள்துறை அமைச்சரிடம் எடுத்துக் கூறினோம். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் மக்கள் குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் தேவையான தண்ணீர் கிடைக்கும். நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை துரிதமாக செயல்படுத்த கோரிக்கை விடுத்தோம்.

அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி
அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு முழுவதும் அடியோடு சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. தமிழ்நாட்டில் தடையின்றி போதைப் பொருள் கிடைக்கின்றன. இதனால் மாணவர்கள், இளைஞர்கள் சீரழியும் சூழ்நிலை உருவாகிறது. தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இது குறித்து பல நேரங்களில் நான் சட்டமன்றத்திலும், அறிக்கை வாயிலாகவும் சுட்டிக்காட்டி இருக்கிறேன். ஆனால் தமிழ்நாடு அரசு அதற்குரிய சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக மத்திய அரசும் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம்.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்

மாநில அரசு அலட்சியமாக மெத்தனமாக இருப்பதால் தமிழ்நாடு முழுவதும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தில் எல்லா துறைகளிலும் கமிஷன், கலெக்க்ஷன், கரப்ஷன் நடைபெற்று வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுக-வின் ஒற்றைத் தலைமை விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அது குறித்து பேச முடியாது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை. மக்கள் கொரோனா தொற்றின் காரணமாக வாழ்வதற்கே சிரமப்பட்டு கொண்டிருக்கும் இந்த தருணத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவது சரியா?” என்றார்.