``திமுக அமைச்சர்களைப் போல் தப்பிக்க பார்க்க மாட்டோம்!" - லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு குறித்து இபிஎஸ்

``ஒரு சில சுயநல சக்திகளோடு இணைந்து, அதிமுக-வை அழிக்க நினைத்தவர்களுக்கு திமுக அரசு உதவி செய்தது." - இபிஎஸ்

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
0Comments
Share

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோருக்குச் சொந்தமான 39 இடங்களில் இன்றுகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ரெய்டு தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிட்டிருக்கிறார். அதில், ``வருகிற 16.9.2022- ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி கே.பழனிசாமி
எடப்பாடி கே.பழனிசாமி

அதற்கு களப்பணியாற்றிவரும் கழக வீரர்கள் கவனத்தை திசைதிருப்ப முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் மூன்றாவது முறையாக ரெய்டு என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்தி வருகிறது அரசு. ஏற்கெனவே 2 வீடுகளிலும் இரண்டு முறை சோதனை நடத்தி வெறுங்கையோடு திரும்பிய லஞ்ச ஒழிப்புத்துறையினர், மூன்றாவது முறையாக சோதனை செய்வது வேடிக்கையாக இருக்கிறது.

வேலுமணி
வேலுமணி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிமீது தி.மு.க அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உயர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை குட்டு வாங்கியிருக்கிறது.

திராவிட அரசு, நேர்மையான அரசு என்று தங்களைத் தாங்களே மார்தட்டிக்கொள்ளும் இந்த விடியா தி.மு.க அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் திராணி இருந்தால் உச்ச நீதிமன்றத்தால் இரண்டு நாள்களுக்கு முன்பு குட்டுபட்டிருக்கும் தி.மு.க அமைச்சரை உடனடியாக அமைச்சரவையிலிருந்து விடுவித்து, வழக்கை விரைந்து நடத்தத் தயாரா? முறைகேடு புகார்கள் பதியப்பட்டுள்ள முன்னாள், இந்நாள் தி.மு.க அமைச்சர்கள் 13 பேர் மீதுள்ள முறைகேடு புகார்கள் குறித்த வழக்கினை விரைந்து நடத்தி அவர்களுக்கு தண்டனை வாங்கித் தருவாரா?

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

தற்போது தமிழகமெங்கும் நில அபகரிப்பு செய்யும், தனக்கு வேண்டிய நிறுவனம்மீது நடவடிக்கை எடுக்கத் தயாரா? தனது அமைச்சர்களைக் காப்பாற்ற நிலுவையில் உள்ள பல வழக்குகளை நடத்தாமல், அவர்கள் வாய்தா மேல் வாய்தா வாங்குவதைத் தடுக்காமல், யோக்கியம் பேசுகிறார். தனது ஏவல்துறை மூலம் பழிவாங்கும் போக்கை கைவிட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களுக்கு இனியாவது நல்லது செய்வது பற்றி சிந்திக்க வேண்டும்.

``திமுக அமைச்சர்களைப் போல் தப்பிக்க பார்க்க மாட்டோம்!" - லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு குறித்து இபிஎஸ்

ஒரு சில சுயநல சக்திகளோடு இணைந்து, அதிமுக-வை அழிக்க நினைத்தவர்களுக்கு திமுக அரசு உதவி செய்தது. ஆனால் அந்த சதிகளை சட்டப்படி நீதிமன்றங்கள் மூலம் சந்தித்து தவிடு பொடியாக்கியிருக்கிறோம். எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகளில் சோதனை நடத்துவதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் அதை சட்டரீதியாக எதிர்த்துப் போராடி வெல்வோம். எங்கள் மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. திமுக அமைச்சர்களைப் போல் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பிக்க பார்க்க மாட்டோம். காவல்துறையினர் நடுநிலைமையோடு ஆளுங்கட்சியினரின் அடாவடித்தனத்திற்கு அடிபணியாமல் சட்டத்தின்படி, நீதி நேர்மையோடு பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.