Doctor Vikatan: பிறந்த குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்து குளிப்பாட்டலாமா?

நலங்கு மாவில் சேர்க்கப்படுகிற ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வாமை தன்மை இருந்தால் அது குழந்தையின் சருமத்தை பாதிக்கக்கூடும் என்பதால்தான் நலங்குமாவு வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

Published:Updated:
குளியல்
குளியல்
0Comments
Share

Doctor Vikatan: பிறந்த குழந்தைக்கு நலங்குமாவு தேய்த்துக் குளிப்பாட்டலாமா? குழந்தையின் சருமத்தில் எண்ணெய் தடவி, பிறகு குளிப்பாட்டுவது சரியா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா...

சருமநல மருத்துவர் பூர்ணிமா
சருமநல மருத்துவர் பூர்ணிமா

குழந்தைகளைக் குளிப்பாட்ட நிச்சயம் நலங்குமாவு பயன்படுத்தக்கூடாது. நலங்குமாவில் சேர்க்கப்படுகிற பொருள்கள் யாருக்கு, எந்தவித ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்று சொல்வதற்கில்லை.

பிறந்த குழந்தையின் சருமம் மிக மென்மையாக இருக்கும். ஒவ்வொரு குழந்தையின் சருமமும் ஒவ்வொருவிதமாக இருக்கும். சில குழந்தைகள் அலர்ஜி தன்மையோடு பிறப்பார்கள். குழந்தையின் சருமம் ஓரளவு முதிர்ச்சியடையும்வரை அந்த ஒவ்வாமை தொடரும். ஒரு கட்டத்துக்குப் பிறகுதான் அது சரியாகும்.

ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருளை அதற்குள் குழந்தையின் சருமத்துக்கு அறிமுகப்படுத்த வேண்டாமே.... குறிப்பாக மஞ்சள்... இது குழந்தையின் சருமத்துக்கு பெரிய ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இப்படி நலங்கு மாவில் சேர்க்கப்படுகிற ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வாமை தன்மை இருந்தால் அது குழந்தையின் சருமத்தை பாதிக்கக்கூடும் என்பதால்தான் நலங்குமாவு வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

Baby (Representational image)
Baby (Representational image)
Pexels

குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்துவிட்டுக் குளிப்பாட்டுவதும் தேவையற்றது. குழந்தையின் சருமத்தில் இயல்பிலேயே எண்ணெய்ப்பசை அதிகமிருக்கும். அதுவே குழந்தைக்குப் போதுமானது. தவிர, எண்ணெய் தடவுவதால் குழந்தையின் சருமத்தில் கட்டிகள், இன்ஃபெக்ஷன், அலர்ஜி போன்றவை உருவாக நாமே வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பதாகி விடும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.