`சிண்ட்ரெல்லா செருப்பு’... அடுத்தகட்டம் நோக்கி நகர்கிறதா திமுக Vs பாஜக மோதல்?

அமைச்சர் பி.டி.ஆர் கார் மீது பாஜக-வினர் செருப்பு வீசிய சம்பவத்துக்கு எதிராகப் பெரிய அளவில் திமுக-வினர் போராட்டம் நடத்தவில்லை...

Published:Updated:
பி.டி.ஆர் - சரவணன்
பி.டி.ஆர் - சரவணன்
0Comments
Share

காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான சண்டையின்போது உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக வருகை தந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை வரவேற்பதற்காக, மதுரை விமான நிலையத்தில் அந்தக் கட்சியினர் கூடியிருந்தனர். அப்போது அங்கு வந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பாஜக-வினரை வெளியேற்ற உத்தரவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இதற்கு பாஜக-வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்திவிட்டுச் செல்லும் வழியில் பிடிஆர் காரை பாஜக-வினர் முற்றுகையிட்டதோடு, கார் மீது பாஜக மகளிர் நிர்வாகிகள் சிலர் காலணியையும் வீசினர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கருத்து தெரிவித்திருந்த பிடிஆர், ``பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் குறித்துப் பேச விரும்பவில்லை. அதற்கு இது சரியான தருணம் இல்லை. இது போன்ற அரசியல் செய்பவர்கள் யார் என்பது மக்களுக்குத் தெரியும்” என்று கூறியுள்ளார். பிடிஆர் கார்மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் நிகழ்ந்த சில மணி நேரத்தில், நள்ளிரவில் அவரின் வீட்டுக்குச் சென்ற பாஜக மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன், அவரை நேரில் சந்தித்து மன்னிப்புக் கேட்டார். பாஜக-விலிருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்தார்.

பி.டி.ஆர் வீட்டுவாசலில்
பி.டி.ஆர் வீட்டுவாசலில்

இதைத் தொடர்ந்து மதுரை மாநகர் பாஜக தலைவர் சரவணன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகத் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். முன்னதாக இது குறித்து சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``பி.டி.ஆர் நம்முடைய நாட்டுக்காக வீர மரணமடைந்த லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருக்கிறார். அதே இடத்திலே பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களும் இருந்திருக்கின்றனர். `பாரதிய ஜனதா கட்சி அந்த இடத்திலிருந்து வெளியே செல்ல வேண்டும். யாரும் உள்ளே வரக் கூடாது. நீங்கள் அஞ்சலி செலுத்துவதற்குத் தகுதி அற்றவர்கள்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளனர். இதை பாஜக தொண்டனால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்... நான் வன்முறையைக் கையில் எடுக்கக்கூடிய கட்சியை நடத்தவில்லை. தொண்டர்கள் யாருக்கும் வன்முறையைக் கையில் எடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கப்போவதும் கிடையாது. நமது கட்சி ஆழமான தேசிய கலாசாரத்தின் அடிப்படையில் இருக்கக்கூடிய கட்சி. மதுரை மக்கள் தங்களை யாராவது சீண்டினால் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள். இதிலே பாஜக தொண்டர்களை ஏன் சீண்டிப் பார்க்க வேண்டும்... எதற்காக நீங்கள் தகுதி அற்றவர்கள் எனச் சொல்ல வேண்டும்?” என்கிற கேள்வியை முன்வைத்திருக்கிறார் அண்ணாமலை.

அண்ணாமலை| பா.ஜ.க
அண்ணாமலை| பா.ஜ.க

இந்த நிலையில் தனது கார்மீது வீசப்பட்ட செருப்பை இணைத்து, “என் கார்மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் குறித்துப் பேச ஏராளம் உள்ளது. இப்போதைக்கு மதுரை விமான நிலையத்தின் பாதுகாப்பு வளையத்துக்குள் நுழைந்த Cinderella-வின் ஒத்த செருப்பு பத்திரமாக இருக்கிறது. அது உங்களுக்கு வேண்டுமானால், என்னுடைய அலுவலர்கள் அதை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள்” எனத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பிடிஆர். அமைச்சர் தனது பதிவில் குறிப்பிட்ட 'Cinderella-வின் ஒத்த செருப்பு' என்றால் என்ன என்றும், `யார் அந்த Cinderella?’ என்றும் பலரும் சமூக வலைதளங்களில் தேடிவருகின்றனர்.

துரைமுருகன்
துரைமுருகன்

இந்த விவகாரம் குறித்து திமுக-வின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தனது அறிக்கையில், “பா.ஜ.க-வின் தேசப்பற்று சாயம் வெளுத்துவிட்டது. இந்த நிலையில் திமுக-வினர் அமைதியாக இருக்க வேண்டும்” என்று வேண்டுகோள் வைத்திருந்தார். இது ஒரு புறம் இருக்க, பிடிஆர் கார்மீது பாஜக-வினர் செருப்பு வீசிய சம்பவத்துக்கு எதிராக பெரிய அளவில் திமுக-வினர் போராட்டம் நடத்தவில்லை. நிகழ்வு நடந்த அன்று சென்னையில் கமலாலயத்தை முற்றுகையிடவும் திமுக-வினர் தயாராகி உள்ளனர். ஆனால், தலைமையிடமிருந்து சிக்னல் தரப்படவில்லை என்கிறார்கள் நிர்வாகிகள்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இது குறித்து சில திமுக மூத்த நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, “திமுக-வினர் இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்த வேண்டும் என்றுதான் பாஜக எதிர்பார்த்தது. குறிப்பாக, மேற்கு வங்காள மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களை இப்படித் தூண்டி தூண்டித்தான் பாஜக அங்கு வளர்ந்துவருகிறது. கிட்டத்தட்ட அதே பாணி அரசியலைத்தான் இங்கும் கையிலெடுக்கிறது பாஜக. இதை அறிந்து திமுக-வினர் பாஜக-வின் அடுத்தகட்ட திட்டத்துக்கு இரையாகிவிடாமல் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் ஒவ்வோர் அடியையும் பார்த்து எடுத்துவைக்கிறார்” என்கிறார்கள்.