`கம்பெனியை ஒரே நாளில் இழுத்து மூடிவிடுவேன்' - சீறிய தாம்பரம் திமுக எம்.எல்.ஏ... நடந்தது என்ன?!

நிலத்தின் உரிமையாளர் பூஜா கோயல் தாம்பரம் திமுக எம்.எல்.ஏ-வை அணுகி, இடத்தை மீட்டுத்தர பஞ்சாயத்து செய்யக் கூறியிருக்கிறார்.

Published:Updated:
எம்.எல்.ஏ ராஜா
எம்.எல்.ஏ ராஜா
0Comments
Share

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அருகே மெல்ரோசாபுரத்தில் பூஜா கோயல் என்பவருக்குச் சொந்தமாக 1.77 ஏக்கர் நிலம் இருக்கிறது. அந்த இடத்தை டேஜுங் மோபார்ட்ஸ் (Daejung Moparts Pvt Ltd) என்ற தனியார் நிறுவனம் 2018-ம் ஆண்டு முதல் 2028 வரை 10 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுத்துச் செயல்பட்டுவருகிறது.

டேஜுங் நிறுவனம்
டேஜுங் நிறுவனம்

அதன்படி, ஹூண்டாய் உள்ளிட்ட முன்னணி கார் நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களைச் செய்து கொடுக்கிறது டேஜுங் மோபார்ட்ஸ் நிறுவனம். இதற்கிடையே, நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ-ஆக இருந்த ஆர்.கே.சர்மா என்பவர் ரூ.230 கோடி ஊழல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அதேபோல, கடந்த 2008-ம் ஆண்டு குத்தகை நிலத்தை முறைகேடாக வட இந்தியர் ஒருவருக்கு விற்பனை செய்திருக்கிறார். இது தொடர்பாக 2022-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் மறைமலைநகர் காவல் நிலையத்தில், தற்போதைய சி.இ.ஓ கிருஷ்ணமூர்த்தி புகார் அளித்து வழக்கு பதிவும்செய்யப்பட்டுள்ளது‌.

வாக்குவாதத்தில் ஈடுபடும் எம்.எல்.ஏ
வாக்குவாதத்தில் ஈடுபடும் எம்.எல்.ஏ

ஆனால், அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் குத்தகைக் காலம் முடிவதற்குள் அந்த நிறுவனத்தைவிட்டு வெளியேறுமாறு பூஜா கோயல் கூறியுள்ளார். ஆனால், குத்தகை காலம் முடிய இன்னும் அவகாசம் இருப்பதால், இடத்தைவிட்டு வெளியேற முடியாது என நிறுவனம் சார்பாகக் கூறப்பட்டிருக்கிறது.

இந்நிலையில்தான், நிலத்தின் உரிமையாளர் பூஜா கோயல் தாம்பரம் திமுக எம்.எல்.ஏ-வை அணுகி, இடத்தை மீட்டுத்தர பஞ்சாயத்து செய்ய கூறியுள்ளார். அதன்படி, அந்த நிறுவனத்துக்கு வந்த எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா சி.இ.ஓ கிருஷ்ணமூர்த்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததோடு, வாக்குவாதமும் முற்றியிருக்கிறது.

எம்.எல்.ஏ ராஜா
எம்.எல்.ஏ ராஜா

அறையில் நடந்த இந்த விவகாரம், நிறுவனத்தின் வாசல் வரை நீடித்திருக்கிறது. இறுதியாக, "கை காலை உடைத்துவிடுவேன். கம்பெனியை ஒரே நாளில் இழுத்து மூடிவிடுவேன்' என்று எம்.எல்.ஏ ஆவேசமாகப் பேசுவது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. வீடியோவை ஆதாரமாகவைத்து மறைமலைநகர் காவல் நிலையத்தில் கிருஷ்ணமூர்த்தி புகார் அளித்துள்ளார். அதன்படி, எம்.எல்.ஏ ராஜா மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்துள்ளனர். இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையதளங்களில் பகிரப்பட்டு வைரலாகிவருகின்றன. அதேபோல, எம்.எல்.ஏ ராஜா தற்போது தலைமறைவாக இருக்கிறார்.