ராஜினாமா முடிவில் துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன்? - திமுக-வில் நடப்பது என்ன?!

தி.மு.க துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
சுப்புலட்சுமி ஜெகதீசன்
சுப்புலட்சுமி ஜெகதீசன்
0Comments
Share

தி.மு.க-வின் அமைப்புரீதியிலான 15-வது பொதுத் தேர்தல் நடைபெற்றுவருகிறது. மாவட்ட கழகத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தி.மு.க ஆளும்கட்சியாக இருக்கும் நிலையில், எப்படியாவது கட்சிப் பதவியை வாங்கிவிட வேண்டுமென உடன்பிறப்புகள் பலரும் தீவிரமாகக் காய்களை நகர்த்திவருகின்றனர். இப்படியான சூழலில், தி.மு.க துணை பொதுச்செயலாளராக இருக்கும் சுப்புலட்சுமி ஜெகதீசன், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், பல்வேறு சர்ச்சைகளையும் எழுப்பியிருக்கிறது. சுப்புலட்சுமியின் ராஜினாமா விவகாரத்துக்கு, அமைச்சர் ஒருவருடனான அரசியல் உரசல்தான் காரணம் என்ற தகவல் கிடைக்கவே விசாரணையைத் தீவிரப்படுத்தினோம்.

கனிமொழி - சுப்புலட்சுமி ஜெகதீசன்
கனிமொழி - சுப்புலட்சுமி ஜெகதீசன்

விஷயமறிந்த உடன்பிறப்புகளிடம் பேசுகையில், ``சுப்புலட்சுமி ஜெகதீசன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக தலைமைக்குக் கடிதம் கொடுத்தது உண்மைதான் எனக் கூறப்படுகிறது. 15 நாள்களுக்கு முன்பே அந்தக் கடிதத்தை அவர் தலைமைக்குக் கொடுத்துவிட்டாராம். ஆனால், தற்போது வரை தலைமை அந்தக் கடிதத்தை ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில், ஈரோடு மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட சுப்புலட்சுமி ஜெகதீசன், பா.ஜ.க வேட்பாளரான சி.ஆர்.சரஸ்வதியிடம் தோல்வியடைந்தார். தோல்வியடைந்தார் என்பதைவிட திட்டமிட்டு அவர் தோற்கடிக்கப்பட்டார் என்பதுதான் சரியாக இருக்கும் என்பது சுப்புலட்சுமி ஜெகதீசன் தரப்பினரின் குற்றச்சாட்டு. அமைச்சர் ஒருவரும், அவரின் ஆதரவாளர்களான ஒன்றியச் செயலாளர்கள் சிலரும் சேர்ந்துதான் ஸ்கெட்ச் போட்டு, சுப்புலட்சுமியைத் தோற்கடித்தனராம்.

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, சுப்புலட்சுமி எதிர்பார்த்த ராஜ்ய சபா எம்.பி பதவியும் அவருக்குக் கிடைக்கவில்லை. பவர்ஃபுல்லாக வலம்வரும் வகையில் எந்த அரசுப் பதவியும் இல்லாதது சுப்புலட்சுமிக்குப் பெரும் வருத்தம். தி.மு.க-வின் உயர்ந்த பதவிகளில் ஒன்றான துணை பொதுச்செயலாளர் பதவி இருந்தும், லோக்கல் அரசியலில் பெரிதாக மரியாதை இல்லை என்ற வருத்தம் வேறு. இதற்கிடையே அமைச்சர் ஒருவர் திட்டமிட்டு, தன்னுடைய அரசியல் வாழ்க்கையை அழித்துவிட்டார் என சுப்புலட்சுமி கடுமையான கோபத்தில் இருந்துவந்தார். இப்படியான சூழலில்தான், உட்கட்சித் தேர்தல் வந்தது.

2021 தேர்தலில் தன்னுடைய தோல்விக்குக் காரணமாக இருந்த ஒன்றியச் செயலாளர்களுக்கு மறுபடியும் கட்சியில் பதவி கொடுக்கக் கூடாது என தலைமையிடம் சுப்புலட்சுமி போர்க்கொடி தூக்கினார். இதில் தான் சாதித்து, அந்த அமைச்சருக்கு பதிலடி கொடுக்க வேண்டுமெனவும் தீவிரமாக இருந்தார். ஆனால், இந்த முறையும் சுப்புலட்சுமிக்குத் தோல்வியே எஞ்சியது. அதையும் முறியடித்த அந்த அமைச்சர், சுப்புலட்சுமியை வீழ்த்திய ஒன்றியச் செயலாளர்களுக்கு தலைமையிடம் பேசி, மீண்டும் பதவியை வாங்கித் தந்தார். அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் கலங்கிப்போன சுப்புலட்சுமி `துணை பொதுச்செயலாளர் என்ற பொறுப்பை மட்டும் கொடுத்துவிட்டு, என்னுடைய பேச்சுக்குத் தலைமையில் எந்த மரியாதையுமே இல்லையென்றால் அப்படிப்பட்ட பதவி எனக்குத் தேவையில்லை’ என்று கோபத்தோடு தன்னுடைய ராஜினாமா கடிதத்தைத் தலைமையிடம் கொடுத்துவிட்டார்.

சுப்புலட்சுமி ஜெகதீசன்
சுப்புலட்சுமி ஜெகதீசன்
Photo: Vikatan

அதனால்தான் சமீபத்தில் விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க முப்பெரும் விழாவையும் சுப்புலட்சுமி புறக்கணித்தார். மேலும், கடந்த சில நாள்களாகவே சுப்புலட்சுமியின் கணவர் ஜெகதீசன் தி.மு.க தலைமையைக் கடுமையாக விமர்சித்து கருத்துகளைப் பதிவிட்டுவந்ததற்கும் இதெல்லாம்தான் காரணம்’’ என்றனர்.

இந்தப் பஞ்சாயத்து காரணமாக விரைவில் சுப்புலட்சுமியையும், அமைச்சரையும் நேரில் வரவழைத்து தலைமைக் கழகத்தில் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்!