``கேட்க யாருமில்லாமல் அநாதையாக நிற்கிறோம்…” - அறிவாலயத்தில் கேட்கும் திமுக தொண்டர்களின் குரல்

திமுக ஒன்றியச் செயலாளர்கள் தேர்தல் ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்துவருகிறது. தொடங்கியது முதல் இப்போதுவரை நாள்தோறும் ஏதாவது ஒரு புகாரை எடுத்துக்கொண்டு அறிவாலயத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள் நிர்வாகிகள்... என்ன செய்யப்போகிறது தலைமை..?

Published:Updated:
அறிவாலயத்தில் குவிந்த திமுக நிர்வாகிகள்
அறிவாலயத்தில் குவிந்த திமுக நிர்வாகிகள்
0Comments
Share

``ஒரு திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது (அதிமுக பொதுக்குழு) என்பது உங்களுக்குத் தெரியும். அந்தப் பிரச்னைக்குள் நான் போக விரும்பவில்லை. அதில் தலையிடவேண்டிய அவசியமுமில்லை. தி.மு.க-வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயிருக்கிறார்கள். தி.மு.க அழிந்ததாக வரலாறு இல்லை. இந்த உணர்வோடு நாம் இருக்கிறோம்.” அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இல்ல விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியவைதான் இவை.

``தமிழ்நாட்டில் அ.தி.மு.க கேப்டன் இல்லாத கப்பல்போல் சென்றுகொண்டிருக்கிறது. அவர்களுக்குக் கொள்கையும் இல்லை; கோட்பாடும் இல்லை; தலைமையும் இல்லை என்ற அவலநிலையில் சென்றுகொண்டிருப்பது வெட்ட வெளிச்சமாகத் தெரியவருகிறது. அ.தி.மு.க பொதுக்குழு மேடையில் சி.வி.சண்முகம் நடந்துகொண்டது அவர்களது தனிப்பட்ட பிரச்னை; உட்கட்சி விவகாரம். அதில் நான் தலையிட விரும்பவில்லை. ஆனால் இன்றைக்குத் தமிழ்நாட்டுக்கு வழிகாட்டும் இயக்கமாக திராவிட இயக்கத்தின் ஓர் அடித்தளமாக தி.மு.க., இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு அனைவரையும் ஒன்று திரட்டி உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கின்ற அமைப்பாகச் செயல்பட்டுவருகிறது” என்பது அமைச்சர் மனோ தங்கராஜ் உதிர்த்த வார்த்தைகள்.

ஆனால், ஒன்றியச் செயலாளர்கள் நியமனப் பிரச்னையைத் தீர்க்க கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அறிவாலயத்தில் திரளும் தி.மு.க நிர்வாகிகளின் எண்ணிக்கையும், அணிவகுக்கும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றனவே தவிர குறைந்தபாடில்லை என்கிறார்கள் ஆளுங்கட்சியின் உள்விவகாரம் அறிந்த சிலர்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தி.மு.க ஒன்றியச் செயலாளர்கள் தேர்தலில் பழையவர்களை அப்படியே தொடரச்செய்யவும், அதிக குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களை மட்டும் மாற்றச் சொல்லி தலைமையிலிருந்து உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் ஒன்றியச் செயலாளர்கள் நியமனம் நடந்துவருகிறது. ஆனால், தி.மு.க-வின் அனைத்து மாவட்டங்களிலும் ஏதாவது ஒரு சர்ச்சை எழுந்தவண்ணம் இருக்கிறது.

தி.மு.க ஒன்றியச் செயலாளர்கள் நியமனத்தில் எழும் சர்ச்சைகள் குறித்து தலைமைக்குப் புகார் தெரிவிக்க மதுரை தொடங்கி ராமநாதபுரம், திருப்பூர் எனப் பல்வேறு மாவட்டங்களிலிருந்து நிர்வாகிகள் அறிவாலயத்தை நோக்கிப் படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர். நியமனத்தில் எழும் பிரச்னைகளைத் தீர்க்க அந்தந்த மாவட்டத் தலைவர்கள், அமைச்சர்கள், பொறுப்பு அமைச்சர்களே தீர்த்துவைக்க வேண்டும் எனத் தலைமை உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், குற்றச்சாட்டுகளே அவர்கள்மீதுதான் என்கிறார்கள் அறிவாலய வாசலில் காத்திருக்கும் நிர்வாகிகள். நாகை, திருவாரூர், தருமபுரி, மயிலாடுதுறை உள்ளிட்ட சில மாவட்டங்களிலிருந்து ஒன்றியச் செயலாளர்கள் நியமனம் தொடர்பாகப் புகாரளிக்க சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஜூலை 5-ம் தேதி அறிவாலயம் வந்திருந்தனர். அவர்களில் சிலரை ஓரங்கட்டி விசாரித்தோம். எல்லோரிடமுமிருந்து பொதுவாக வந்த பதில், “மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் தங்களுக்கு வேண்டியவர்களையே நியமித்துக்கொள்கிறார்கள்.

அறிவாலயத்தில் குவிந்த திமுக நிர்வாகிகள்
அறிவாலயத்தில் குவிந்த திமுக நிர்வாகிகள்

எதிர்க்கட்சியாக இருந்தபோது கட்சிக்காக உழைத்தவர்களை ஆளுங்கட்சி ஆன பிறகு உதாசீனப்படுத்துகிறார்கள். இத்தனைக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் முதற்கொண்டு உள்ளாட்சித் தேர்தல் வரை தீவிரமாகக் கட்சி வேலை செய்து கட்சியின் வெற்றிக்காக உழைத்தவர்களை நீக்குகிறார்கள்” எனக் கொதிக்கிறார்கள்.

அறிவாலயத்தில் என்ன பதில் கிடைக்கிறது என்ற கேள்வியைக் கேட்டதும், ``அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆர்.எஸ்.பாரதி, ஆ.ராஜா, அன்பகம் கலை ஆகியோரைத்தான் இந்தப் பிரச்னையைச் சரிசெய்வதற்காக நியமித்திருக்கிறார்கள். ஆனால், அவர்களால் எங்களுக்குரிய பதிலையோ, பிரச்னைக்குரிய தீர்வையோ சொல்ல முடியவில்லை. அவர்களுக்கு எப்படி மாவட்டத்தின் பிரச்னை தெரியும்... அதுமட்டுமல்ல, இத்தனை பேர் வண்டி கட்டி இவ்வளவு தூரம் வந்திருப்பது தலைவரைப் பார்க்கத்தானே தவிர இவர்களை அல்ல. இவர்களும் இப்போதைக்குப் பிரச்னை தீர்ந்தால் போதுமென்று ‘அமைச்சரை விசாரிக்கிறோம், மாவட்டத்தைக் கூப்பிட்டுச் சொல்கிறோம். உங்களுக்கு நல்ல பதில் வரும்’ என அச்சடித்த காகிதத்தைக் கொடுப்பதுபோல ஒரே பதிலைத்தான் அனைவருக்கும் சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, பிரச்னையைத் தீர்த்துக்கொண்டிருக்கும்போதே “யப்பா இது டீ டைம். இது லஞ்ச் டைம். எல்லாரும் வெளியில் இருங்க” எனப் பிரச்னையைத் தீர்க்காமல் விசேஷ வீட்டில் நடந்துகொள்வதுபோல நடந்துகொள்கிறார்கள். கட்சி நிர்வாகிகள் என்ற மரியாதையும் கிடைப்பதில்லை. முன்பெல்லாம் தலைமைக்கு வந்தால் எங்கள் பிரச்னை தீரும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், இப்போது அறிவாலயம் வந்தும் அநாதைகள்போல ரோட்டில் நிற்கிறோம். கட்சி அலுவலகத்துக்குள்கூட வர முடியாமல், தலைமையைப் பார்க்கவிடாமல் துரத்துகிறார்கள். இன்றைக்குத் தலைமைக்கு நாங்கள் கொடுத்த வெற்றி நீடிக்க வேண்டும் என்ற எண்ணம் துளியும் இருப்பதாகத் தெரியவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் வந்துகொண்டேயிருக்கிறது. அப்போது எங்களிடம்தானே வந்து நிற்க வேண்டும்... அப்போது பார்த்துக்கொள்கிறோம்” எனப் புலம்பித் தீர்த்துவிட்டார்கள்.

அறிவாலயம்
அறிவாலயம்

“ஒன்றே ஒன்று மட்டும் சொல்கிறோம் எங்களைத் தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் தேவையில்லை. சொந்தக் கட்சியினரே போதும்” என விரக்தியின் உச்சிக்கே சென்றுவிட்டனர். அவர்களின் ஒரே கோரிக்கை தலைமை தங்கள் குறைகளைக் காதுகொடுத்துக் கேட்க வேண்டும் என்பதுதான்… அவர்கள் சொல்வதுபோல கேட்கவில்லையென்றால் அறிவாலயத்துக்குப் படையெடுக்கும் நிர்வாகிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத்தான் செய்யும் என்கிறார்கள்.