திமுக உட்கட்சித் தேர்தல்: நடக்கப்போகும் மாற்றங்கள் என்னென்ன?!

மாவட்டச் செயலாளர்கள் மட்டுமின்றி, பொதுக்குழு உறுப்பினர்களிலும் மாற்றங்கள் இருக்கும் என்கிறது அறிவாலய வட்டாரம்!

Published:Updated:
அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்
0Comments
Share

கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வருகிறது தி.மு.க உட்கட்சித் தேர்தல். ஒன்றியம், நகரம், பகுதி, வட்டம் என அத்தனை மட்டங்களிலும் தேர்தல் முடிந்துவிட, அவர்களுக்கெல்லாம் தலைமையான மாவட்டச் செயலாளர் தேர்தல் செப்டம்பர் 22 முதல் 24 வரையில் நடைபெறுகிறது. இதில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும் என்பது குறித்து மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

``தி.மு.கவின் 15-வது உட்கட்சித் தேர்தல் நடந்துவருகிறது. ஒரு மாவட்டத்துக்குச் செயலாளர் என்பது தனிப்பொறுப்பு கிடையாது. ஒரு குழுவை நேரடியாகக் கட்டிக்காக்கும் பொறுப்பு. மாவட்டச் செயலாளர்களுக்கு கீழ், மாவட்ட அவைத் தலைவர், துணைச் செயலாளர்கள் மூவர் இருக்க வேண்டும். அவர்களில் ஒருவர் பொதுப்பிரிவினராகவும், ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது மலைவாழ் வகுப்பினராகவும், ஒருவர் மகளிராகவும் இருக்க வேண்டும். மேலும், பொருளாளர் மற்றும் தலைமைச் செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள்... அதில் ஒருவர் மகளிராக இருத்தல் வேண்டும். இதுவும் தலைமைக் கழகத்தால் மாவட்ட வாரியாக எண்ணிக்கை அறிவிக்கப்படும். இந்த ஒட்டுமொத்தப் பதவிகளுக்காகவும்தான் மூன்று நாள்கள் தேர்தல் நடக்கிறது.

வேட்புமனுவை 1,000 ரூபாய் செலுத்திப் பெற்றுக்கொள்ள வேண்டும். பூர்த்தி செய்து அளிக்கும்போது 25,000 ரூபாய் கொடுத்திட வேண்டும். எந்த மாவட்டத்துக்கு விண்ணப்பிக்கிறோமோ, அதே மாவட்டத்தில் வசிக்கும் பேரூர், ஒன்றிய, நகர, பகுதி, மாநகர செயலாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டப் பிரிதிநிதிகள்தான் இவர்களுக்காக முன்மொழியவும், வழிமொழியவும் வேண்டும் என்பது கட்சி விதி.

கட்சி அமைப்பு ரீதியாக 77 மாவட்டங்களாக இருந்ததை தற்போது 72 ஆகக் குறைத்திருக்கிறார்கள். இதன்மூலம் 5 மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்படலாம்.

கார்த்திக், பையா கிருஷ்ணன், சேனாதிபதி
கார்த்திக், பையா கிருஷ்ணன், சேனாதிபதி

கோவையில் 5 மாவட்டங்கள் இருந்ததை, மூன்றாகச் சுருக்கப்போகிறார்கள் என்று ஆரம்பம் முதலே ஜூவியில் சொல்லிவந்தது, தற்போது நடந்திருக்கிறது. கோவை வடக்கு மாவட்டச் செயலாளராக சி.ஆர்.ராமச்சந்திரனும், கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக சேனாதிபதியும், மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக கார்த்திக்கும், மாநகர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளராக பையா கிருஷ்ணனும், தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக வரதராஜனும் இருந்தனர். இவற்றில், கோவை கிழக்கு மாவட்டத்தை நீக்கிவிட்டனர். மாநகர் கிழக்கு - மேற்கு என்றிருப்பதை ஒன்றினைத்து மாநகர் மாவட்டமாக மாற்றிவிட்டனர். இதில் ஐந்து மாவட்டச் செயலாளருமே தூக்கப்படும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

பொறுப்பு அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜிதான் மாவட்டச் செயலாளர்களை நியமிக்கிறார் என்பதாக பேசப்பட்டது. ஆனால், சென்னையில் கட்சியில் கமெண்ட் பொசிஷனில் இருக்கும் ஒருவர் தான் 5 பேர் கொண்ட பட்டியலை பொறுப்பு அமைச்சர்களிடம் வழங்குகிறாராம். அவர்களிலிருந்து இருவரைத் தேர்வுசெய்து தலைமையிடம் கொடுப்பதுதான் பொறுப்பு அமைச்சர்களின் பணி. அதன்படி, கோவையில் கார்த்திக் மீது அதிகப்படியானப் புகார்கள் எதுவும் இல்லாததால், அவர் பெயரும் பட்டியலில் இருந்திருக்கிறது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

அதனால், செந்தில் பாலாஜி அவரையே மீண்டும் நியமிக்கலாம் என்று வலியுறுத்தியிருப்பதாக தகவல். ஆனால், அவருக்கு எதிராக கோவை மாவட்ட இளைஞரணியில் பணியாற்றி வரும் கோட்டை அப்பாஸ் என்பவர் போட்டிக்கு நிற்கிறார். இளைஞர் அணி என்கிற ரெகமெண்டேஷனோடு அப்பாஸ் இருப்பதால், அவர் முன்னணியில் இருக்கிறார். கார்த்திக் மீண்டும் தொடரும் பட்சத்தில் இரண்டு மாவட்டச் செயலாளர்கள் புதிதாக நியமிக்கப்படுவார்கள், அல்லது மூவருமே மாற்றப்படுவார்கள் என்பதுதான் கோவை நிலைமை.

இதேபோன்றுதான் திருப்பூர், தருமபுரியிலும் மாற்றங்கள் இருக்கிறது. திருப்பூர் கிழக்கு மாவட்டத்தையே தூக்கிவிட்டனர். அங்குதான் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாவட்டச் செயலாளராக இருந்தார். ஒருவரோ அல்லது மூவருமேகூட இங்கு மாற்றப்படலாம்.

அமைச்சர் சாமிநாதன்
அமைச்சர் சாமிநாதன்

தருமபுரியில் மாவட்டங்கள் பிரிக்கப்படவுமில்லை, சேர்க்கப்படவுமில்லை, சட்டமன்றத் தொகுதிகள் மாற்றி அமைக்கபட்டிருக்கின்றன. கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி முன்னாள் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் இன்பசேகரன் முன்னாள் எம்.எல்.ஏ என இருவரில் ஒருவரோ, அல்லது இருவருமேகூட தூக்கியடிக்கப்படலாம். அதில் ஒரு மாவட்டத்துக்கு அ.ம.மு.க-விலிருந்து வந்த முன்னாள் அமைச்சர் பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பனை ஸ்டாலின் நியமிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல் வருகிறது.

பழனியப்பன்
பழனியப்பன்

தஞ்சாவூரில் உள்ள இரு மாவட்டச் செயலாளர்கள் மீதும், திருநெல்வேலி, தென்காசியில் இருக்கும் மாவட்டப் பொறுப்பாளர்கள் மீதும்கூட புகார்கள் இருப்பது தெரிந்ததே. அவர்களது இடங்களுக்கும் சேர்த்தே சென்னை டீம் பெயர்களைப் பரிந்துரை செய்திருக்கிறது. எப்படி 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, வேட்பாளர் பட்டியலை ஸ்டாலின் மட்டுமே ரெடி செய்தாரோ அதுபோன்று இப்போது அவர் செய்திட வாய்ப்பில்லை. எனினும், அவர் பார்வைக்குச் சென்று, அவர் பார்த்து ஒப்புதல் கொடுத்த பின்னர்தான் அறிவிக்கப்படும்.

திமுக உட்கட்சித் தேர்தல்: நடக்கப்போகும் மாற்றங்கள் என்னென்ன?!

இதில் இன்னொரு விவகாரம் ஓடிக்கொண்டிருக்கிறது. சென்னை, தாம்பரம், ஆவடி என அருகருகே உள்ள மூன்று மாநகராட்சி மேயர் பதவிகளுமே பட்டியலின சமூகத்தவருக்கு ஒதுக்கப்பட்டு, அச்சமூகத்தினரே மேயராக இருக்கின்றனர். ஆனால், மாவட்டச் செயலாளர்களைப் பொறுத்தமட்டில் பட்டியலின சமூகத்தவருக்கு இந்த மூன்று மாவட்டங்களிலும் சரி, மற்ற மாவட்டங்களிலும் சரி சரியான பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை என்கிற குமுறல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சமூக நீதிப் பேசும் தி.மு.க., சமூக நீதிக்காக தேசிய அளவில் இயக்கம் கண்ட தி.மு.க-வில் இப்படியொரு நிலை இருப்பது வருத்தமளிப்பதுதான். தலைவரிடம் இதுபற்றி கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது, விரைவில் இதற்கொரு விடிவுகாலம் பிறக்கும்!” என்பதாக முடித்துக்கொண்டார்.