நிலவில் தண்ணீர் கண்டுபிடிப்பு!விவசாயம் செய்யலாம்... மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்!

தற்சமயம் வெளிநாடுகள் நடத்திய ஆய்வில் ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை நிலவில் பயிரிடலாம் என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. நிலவில் இருக்கும் நீரை அப்படியே நாம் குடிக்க முடியாது. மேலும் பயிர்களுக்கு அந்த நீரை பயன்படுத்தும்போதும் சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும்.

Published:Updated:
சந்திரயான் 2
சந்திரயான் 2 ( ISRO )
0Comments
Share

`நிலவில் நீர் இருப்பது குறித்து கண்டுபிடித்திருப்பது மிக முக்கிய கண்டுபிடிப்பு ஆகும். இதனால் மக்கள் நிலவிலேயே குடியேறி விவசாயம்கூட செய்ய முடியும்' என்று கடந்த சனிக்கிழமை திருச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மற்றும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

மயில்சாமி அண்ணாதுரை
மயில்சாமி அண்ணாதுரை

இதுகுறித்து மயில்சாமி அண்ணாதுரையிடம் பேசினோம்.

``மனிதர்கள் விண்வெளியில் சர்வதேச செயற்கை விண்வெளி மையம் அமைத்து ஆராய்ச்சிகள் செய்து வருகின்றனர். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, இந்த விண்வெளி மையத்தை மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. தற்போது நிலவில் நீர் இருப்பது கண்டுபிடித்திருப்பதால், மனிதர்கள் நிலவிலேயே நிரந்தர சர்வதேச விண்வெளி மையம் அமைக்கலாம். மேலும், மனிதர்கள் நிலவுக்கு பயணிக்கும்போது, பூமியில் இருந்தே உணவுகளைக் கொண்டு செல்லாமல் அங்கேயே விவசாயம் செய்வது குறித்தும் ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. மேலும், நிலவில் இருக்கும் மண்ணை வைத்து வீடுகட்ட முடியுமா என்ற ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன.

நிலவில் நீர் இருப்பதை சந்திரயான்-1 கண்டுபிடித்தது. இதை அடிப்படையாக வைத்து நிலவில் உள்ள மண்ணில் தாவரங்களை பயிரிடும் சாத்தியக்கூறுகள் பற்றியும், பயிரிட தேவைப்படும் சுற்றுப்புறம் குறித்து நடந்த முதல்கட்ட ஆய்வில் வெற்றி கிடைத்துள்ளது. இந்தியா சந்திராயன்-3 விண்வெளிக்கு அனுப்பினால், அது விவசாயம் செய்வது குறித்து ஆய்வு செய்யும் வாய்ப்புகள் உள்ளன.

சந்திரயான் 2
சந்திரயான் 2

தற்சமயம் வெளிநாடுகள் நடத்திய ஆய்வில் ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை நிலவில் பயிரிடலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலவில் இருக்கும் நீரை அப்படியே நாம் குடிக்க முடியாது. மேலும் பயிர்களுக்கு அந்த நீரை பயன்படுத்தும்போதும் சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும்.

2024 அல்லது 2025 ஆண்டு, மனிதன் மீண்டும் நிலவுக்குச் செல்லும் வாய்ப்பு உள்ளது. அப்போது நாம் பூமியில் செய்த விவசாய ஆராய்ச்சியை நிலவுக்குச் செல்லும் மனிதர்கள் அங்கே சோதனை செய்து அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வார்கள். சீனா நிலவில் பயிர்களை விதைக்கும் சோதனையை தனது விண்கலம் மூலம் மேற்கொண்டது. அதில் சீனா ஓரளவு வெற்றியும் கண்டது. தற்போது மனிதர்கள் நேரடியாக நிலவுக்கு செல்லும்போது இன்னும் பலனளிக்கக்கூடிய ஆராய்ச்சிகளைச் செய்வர்.

சந்திரயான்-2
சந்திரயான்-2

நிலவில் நீர் இருப்பதால், அதிலிருந்து ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனை பிரிக்கலாம். நீரில் இருந்து பிரித்த ஹைட்ரஜனை விண்வெளியில் தேவைப்படும் ஆற்றலுக்குப் பயன் படுத்திக்கொள்ளலாம் மற்றும் ஆக்சிஜனை வைத்து கார்பன்-டை-ஆக்சைட் தயாரிக்கலாம். மேலும், நிலவில் மனிதர்களும் குடியேறுவதால் அவர்கள் வெளியேற்றும் கார்பன்-டை-ஆக்சைடையும் பயிர்கள் பயன்படுத்திக்கொள்ளும்.

தவிர, பயிர்களும் மனிதர்களுக்கு தேவைப்படும் ஆக்சிஜனை தயாரித்து தரும். உதாரணமாக, ஒரு சதுர மீட்டர் அளவுக்கு பயிர்களை வளர்த்தால், அது ஒரு மனிதனுக்குத் தேவையான ஆக்சிஜனை வெளியேற்றிவிடும். நிலவில் விவசாயம் செய்ய சில இடர்ப்பாடுகள் இருந்தாலும், பயிர்கள் சுற்றுப்புறத்தைப் பொறுத்து தன்னை மாற்றிக்கொள்ளும்'' என்றார்.