``பழைய பார்முலா வேண்டாம்; சிறிய பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகளை உருவாக்கலாம்"-இயக்குநர் பாண்டிராஜ்

இயக்குநர் பாண்டிராஜ், இன்றைய தமிழ் திரைப்படங்கள் குறித்தும் தமிழ் சினிமாவின் எதிர்காலம் குறித்தும் பேசியிருக்கிறார்.

Published:Updated:
director pandiraj
director pandiraj
0Comments
Share
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் உலகத் திரைப்பட விழா நிகழ்ச்சி புதுக்கோட்டையில் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்று வருகிறது.

விழாவின் 3-ம் நாளான நேற்று, திரைப்பட இயக்குநர் பாண்டிராஜ் கலந்துகொண்டு இன்றைய தமிழ்த் திரைப்படங்கள் குறித்தும் தமிழ் சினிமாவின் எதிர்காலம் குறித்தும் பேசியிருந்தார். அப்போது பேசிய அவர், "கோவிட் தொற்று காலத்திற்குப் பிறகு திரைப்பட ரசிகர்களின் மனநிலையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஓடிடி, இணையதளம் மூலம் மக்கள் நிறைய வெளிநாட்டுப் படங்களைத் தேடிப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். எனவே, நாம் ஒரே வட்டத்துக்குள் சுற்றிக்கொண்டு ஒரே பார்முலாவில் படத்தை எடுத்து ஓட்ட முடியாது என்பதை புரிந்து கொள்ளவேண்டும். படத்தின் தொடக்கத்தில் பாட்டு, அடுத்து ஒரு சண்டைக் காட்சி, அப்புறம் மற்றொரு பாட்டு என்ற பழைய பார்முலாவை மட்டும் வைத்து இனி திரைப்படங்கள் எடுக்க முடியாது. மக்கள் வெவ்வேறு புதிய அனுபவங்களைக் காணத் தயாராகிவிட்டனர். எனவே அதற்குகேற்ப புதிய புதிய திரைக்கதைகளில் திரைப்படம் எடுக்கவேண்டும்" என்று கூறினார்.

PANDIRAJ
PANDIRAJ

மேலும், "தமுஎகச போன்ற அமைப்புகள் திரைப்பட விழாக்களை நடத்துவதுபோல, சிறிய பட்ஜெட் படங்களுக்குகெனத் பிரத்யேகத் திரையரங்குகளை உருவாக்க முன்வர வேண்டும். பல படங்களுக்குத் தேர்வாகாமல் போன புதுமுக நடிகர்களைக் கொண்டுதான் இயக்குநர் சுசீந்திரன் ‘வெண்ணிலா கபடிக் குழு' படத்தை எடுத்தார். அந்தப் படம் நல்ல வெற்றியைத் தந்தது. இதுபோன்ற சிறிய பட்ஜெட் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதுமட்டுமின்றி படத்தின் தலைப்புகள் மிகவும் முக்கியம். அரசியல் ஆர்வலர்கள், திரைப்பட ரசிகர்கள் என அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் வகையில் திரைப்படங்களுக்கு தலைப்பிடவும், போஸ்டரை வடிவமைக்கவும் வேண்டும். இதுபோன்ற சில ஈர்ப்புகள் திரைப்படங்களுக்கும் அவசியம். என்னுடைய திரைப்படங்களான ‘பசங்க', ‘மெரினா' இரண்டிற்கும் படம் எடுத்துக் கொண்டிருக்கும் போதுதான் தலைப்பைத் தேர்வு செய்தோம். அதன் மூலம் படங்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது" என்றார்.