அவள் அப்படித்தான்: "ரீமேக் இல்லை, ரீ-கிரியேட் செய்கிறேன். 2040-க்கான கதை இது!"- பத்ரி வெங்கடேஷ்

"1978ல வந்த படம் இது. ஆனா 1990க்கான விஷயம் போல, அதுல முன்நோக்கி சிந்திச்சிருப்பாங்க. அதைப் போல நானும் 2022ல இந்தக் கதையை எழுதுறேன். ஸோ..." - பத்ரி வெங்கடேஷ்

Published:Updated:
அவள் அப்படித்தான்
அவள் அப்படித்தான்
0Comments
Share

ஒரு காலத்தில் தமிழ் சினிமா பெண்களைப் பற்றி உருவாக்கிய பிம்பங்கள் எண்ணிடலங்காதவை. அன்றைய தமிழ் சினிமாவும் மக்களின் மனநிலையும் பெண், பெண்மை குறித்து உருவாக்கிய கற்பிதங்களை அடித்து நொறுக்கும் படமாக வந்து நின்றதுதான் 'அவள் அப்படித்தான்'. 1978ல் கமல், ரஜினி, ஶ்ரீப்ரியா ஆகியோர் இணைந்து நடித்த இப்படத்தை ருத்ரைய்யா இயக்கியிருந்தார். ஒரே படத்தில் டன் கணக்கில் பாராட்டுகளை அள்ளிக்கொண்ட இயக்குநர் அவர்தான் என இப்போதும் சொல்கிறார்கள்.

அவள் அப்படித்தான் (1978)
அவள் அப்படித்தான் (1978)
அப்படிப் பெயர் வாங்கியிருக்கும் `அவள் அப்படித்தான்' படத்தை ரீமேக் செய்யவிருக்கிறார் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ். `பாணா காத்தாடி, `செம போத ஆகாதே', `பிளான் பண்ணி பண்ணனும்' ஆகிய படங்களை இயக்கியவர். ருத்ரைய்யாவின் குடும்பத்தினர் இதற்கு என்.ஓ.சி.யும் வழங்கிவிட்டனர் எனத் தகவல் வர, பத்ரி வெங்கடேஷிடம் பேசினேன்.

"'அவள் அப்படித்தான்' பார்த்த பிறகுதான் சினிமா எடுக்கணும்னு ஆசை வந்துச்சு. இப்போ அந்தப் படத்தை மறுபடியும் பண்ணலாம்னு சோஷியல் மீடியாவுல தெரிவிச்சேன். ஆனா, அதுக்கு இவ்ளோ வரவேற்பு அமைஞ்சது ஆச்சரியமாச்சு. அந்தப் படத்துல வரும் 'உறவுகள் தொடர்கதை' பாடல் எல்லாருக்கும் தெரியும். ஆனா, பலரும் படத்தைப் பார்த்திருக்க மாட்டாங்க. அந்த படம் பேசின பல விஷயங்கள் இன்னைக்கும் பொருந்தும்.

நித்யா மேனன்
நித்யா மேனன்

'ஒரு நல்ல கலைப்படத்தை ஏன் மறுபடியும் பண்ணனும்'ன்னு சிலர் கேட்குறாங்க. அதை தவறுன்னு நானும் சொல்லமாட்டேன். அது அவங்க கருத்து. 'ஸ்பார்டகஸ்'ன்னு ஒரு படம், பல முறை வந்திருக்கு. இப்பவும் வெப்சீரீஸ் ஆக கலக்குது. நான் ரீமேக் பண்ணல. அதை ரீ-கிரியேட் பண்ண விரும்புறேன். இந்தப் படத்தை நான் பண்ணப்போறேன்னு ருத்ரைய்யா குடும்பத்தினர்கிட்ட சொன்னேன். அவங்களுக்கு சந்தோஷம். அதுல ஒர்க் பண்ணின கே.ராஜேஸ்வர், வண்ணநிலவன்னு அவங்களும் மீண்டும் ஸ்கிரிப்ட்ல உதவ ரெடியா இருக்காங்க.

அந்தப் படத்தைப் பொறுத்தவரை, ரஜினி, கமல், ஶ்ரீப்ரியான்னு அதுல நல்ல நட்சத்திரங்கள் அமைஞ்சிருப்பாங்க. 1978ல வந்த படம் அது. ஆனா 1990க்கான விஷயம் போல, அதுல முன்நோக்கி சிந்திச்சிருப்பாங்க. அதைப் போல நானும் 2022ல இந்தக் கதையை எழுதுறேன். ஸோ, இது 2040ல எப்படி இருக்கும் என்பது போல அட்வான்ஸா யோசிச்சாதான் செட் ஆகும்.

ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன்

இந்த கதைக்கான நடிகர்கள் யாரும் இன்னும் முடிவாகல. தனுஷ், சிம்புவுக்கு இந்தக் கதை அருமையா பொருந்தி நிற்கும். எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா கூட்டணியும் நல்லா இருக்கும். வேற ஒரு கலர் கிடைக்கும். அது தவிர, ஶ்ரீப்ரியா ரோலுக்கு ஸ்ருதிஹாசன்கிட்ட பேசியிருக்கோம். நித்யா மேனன் ரொம்ப பாந்தமா இருப்பாங்க. பிரியா பவானிசங்கரும் நல்ல சாய்ஸ்தான். ஸோ, காஸ்ட்டிங் அமையறதை வச்சு, ஸ்கிரிப்ட்டை கொஞ்சம் செதுக்க வேண்டியிருக்கும்.

பத்ரி வெங்கடேஷ்
பத்ரி வெங்கடேஷ்

ஆனா, ஒரே ஒரு விஷயத்துல தெளிவா இருக்கேன். இந்தப் படத்தை பண்ணினால் சரியா பண்ணனும். நடிகர்கள் அமையறதைப் பொறுத்து அடுத்த கட்டத்துக்கு நகர்த்த விரும்புறேன். கதை பக்கம் என்.ஓ.சி கிடைச்சிருக்கு. நிறைய பேரோட ஆசீர்வாதம் இருக்கு. இப்போதைக்கு அவசரப்படல. இன்னொரு ஆசை, இளையராஜா சாரே இந்த படத்துக்கும் இசையமைக்கணும். கமல் சார் பாடின 'பன்னீர் புஷ்பங்களே...' பாடலை அவரையே மீண்டும் பாட வைக்கணும்னும் விரும்புறேன்" என்கிறார் பத்ரி.