வேலுமணி சகாக்கள்... மலேசியா டு தமிழ்நாடு... அதிர வைக்கும் ரெய்டு பிண்ணனி!

`தமிழ்நாடுதான் எங்கள் அடுத்த குறி’ என்று அமித் ஷா பேசியதும், எல்லோரும் தி.மு.க முகாமை பார்த்துக் கொண்டிருக்க அ.தி.மு.கவில் ரெய்டு படலத்தை அரங்கேற்றியிருக்கிறது வருமானவரித்துறை.

Published:Updated:
வேலுமணியுடன் செந்தில் பிரபு மற்றும் சந்திரசேகர்
வேலுமணியுடன் செந்தில் பிரபு மற்றும் சந்திரசேகர்
0Comments
Share

கொட்டும் மழைக்கு நடுவிலும் அதிரடிக்கும் ரெய்டுகளால் அ.தி.முகவில் அனல் பறந்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.கவில் இது ரெய்டு காலம். ஒற்றைத் தலைமைக்காக முட்டி மோதிக்கு கொண்டிருப்பவர்களை, நாலா பக்கமும் ரெய்டுகள் நெருக்குகின்றன. மாத மாதம் ஒரு முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் வீட்டுக்கு சென்று ரெய்டு நடத்துவதை லஞ்ச ஒழிப்புத்துறை வாடிக்கையாக வைத்துள்ளது.

வருமான வரித்துறை ரெய்டு
வருமான வரித்துறை ரெய்டு

அ.தி.மு.கவினரும் தடபுடல் விருந்துடன் ரெய்டுகளை எதிர் கொண்டு வந்தனர். ஆனால், இந்த முறை வருமானவரித்துறையும் குறிவைத்து தாக்கியிருப்பது அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

‘தமிழ்நாடுதான் எங்கள் அடுத்த குறி’ என்று அமித் ஷா பேசியதும், எல்லோரும் தி.மு.க முகாமை பார்த்துக் கொண்டிருக்க அ.தி.மு.கவில் ரெய்டு படலத்தை அரங்கேற்றியிருக்கிறது வருமானவரித்துறை. எடப்பாடியை ஒற்றைத் தலைமையாக்க பக்க பலமாக இருப்பது எஸ்.பி வேலுமணி தானாம்.

ரெய்டு
ரெய்டு

அதனால்தான் அவரின் நிழலாக வலம் நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகரை குறி வைத்து ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இது எடப்பாடி அணிக்கு நேரடியாக விடப்பட்டுள்ள எச்சரிக்கை மணியாகவே பார்க்கின்றனர் வேலுமணி ஆதரவாளர்கள்.

“வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஒப்பந்தம் கொடுத்து ரூ.800 கோடிக்கு மேல் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்கெனவே இருமுறை ரெய்டு நடத்திவிட்டது. இனி அவ்வளவுதான் டீலிங் முடிந்தது என்று வேலுமணி&கோ பெரு மூச்சு விட்ட நிலையில் வருமானவரித்துறை என்ட்ரி கொடுத்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே வேலுமணியின் நகர்வுகளை வருமானவரித்துறை கண்காணித்து கொண்டுதான் இருந்தது.

சந்திரசேகர்
சந்திரசேகர்

இந்த ரெய்டில் அதிகம் நோண்டப்படுவது சந்திரசேகர் தரப்புதான். சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் யாருக்கு டெண்டர் விடவேண்டும் என்கிற முடிவை எடுக்கும் இடத்தில் இருந்தது சந்திரசேகர் தானாம். சமீபத்தில் கூட சென்னை மாநகராட்சியில் பேருந்து நிழல் குடை மூலம் நடைபெற்ற ஊழல் வெளிவந்தது.

இதற்கு மூளையாக செயல்பட்டது சந்திரசேகரின் தம்பி செந்தில் பிரபு என்கிறார்கள். இதில் தான் சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் நடைபெற்றது தெரியவந்திருக்கிறது. பேருந்து நிழல் குடை விளம்பரத்துக்கு பெரும் பணம் வசூலிக்கப்பட்டாலும், அதில் சிறிய பங்கையே மாநகராட்சிக்கு கட்டியுள்ளார்களாம்.

ரெய்டு
ரெய்டு

மேலும் ஷெல் நிறுவனங்கள் மூலம் மலேசியா, கொல்கத்தா என்று பல்வேறு பகுதிகளில் இருந்து பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. சில போலியான கணக்குகளையும் அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளனர்.

இதையடுத்து சந்திரசேகர், அவர் தந்தை ராஜன், தம்பி செந்தில் பிரபு, ராஜன் சகோதரிகள் என மொத்த குடும்பத்தையும் வருமானவரித்துறை சுற்றி வளைத்திருக்கிறது. பொதுவாக ஒரு நிறுவனம் எடுக்கும் டெண்டரில் 60%, அந்தப் பணிகள் சம்பந்தப்பட்ட பொருள்களை வாங்க வேண்டும். மீதம் உள்ள 40% தான் பணியாளர்களுக்கு ஊதியம் லாபம் எல்லாம் வரும். ஆனால், கே.சி.பி நிறுவனம் போலியான கணக்கு விவரங்களை கொடுத்துள்ளது. இதுகுறித்து கே.சி.பி நிறுவனத்தின் சந்திரபிரகாஷை அதிகாரிகள் குடைந்து எடுத்துள்ளனர்.

ரெய்டு
ரெய்டு

இதேபோல சந்திரசேகரின் ஆலயம் அறக்கட்டளை, நமது அம்மா நாளிதழ், வள்ளியம்மன் அறக்கட்டளை என்று அவர்கள் சம்மந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் தோண்டி துருவி வருகின்றனர். தேவைப்பட்டால், இதன் முடிவில் பினாமி பரிவர்த்தனை சட்டத்தில் வேலுமணியை வரவும் வாய்ப்புள்ளது.” என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

வருமானவரித்துறை ஒருபக்கம் ரெய்டில் அதிரடிக்க, லஞ்ச ஒழிப்புத்துறையும் ரகசியமாக விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது. வேலுமணி தரப்பு தன் மீதான வழக்கு விசாரணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை போராடிக் கொண்டிருக்கிறார். இதனால், அவர் மீதான குற்றத்தை நிரூபிக்க வேண்டிய நெருக்கடிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை தள்ளப்பட்டிருக்கிறது.

வேலுமணி
வேலுமணி

வேலுமணியுடன் தொடர்பில் இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், வேலுமணியின் நல்லறம் அறக்கட்டளை என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறது. சமீபத்தில் கோவை மாநகராட்சியில் பொறியாளர் பிரிவில் பணியாற்றிய அதிகாரிகளை ஓர் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்துள்ளது. இதில் வேலுமணிக்கு எதிரான சில முக்கிய ஆவணங்கள் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்துள்ளதாக சொல்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், “சந்திரசேகர், செந்தில் பிரபு உள்ளிட்டோர் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களுடன் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறைய ஆகியோரிடம் ஏற்கெனவே புகார் அளித்திருக்கிறோம்.

ஜெயராம் வெங்கடேசன்
ஜெயராம் வெங்கடேசன்

வேலுமணி மற்றும் அவர் கூட்டாளிகள் அரசு டெண்டரை பயன்படுத்தி மோசடி செய்து அரசுக்கு ரூ.700 கோடி அளவுக்கு இழப்பீடு ஏற்படுத்தி பல கிரிமினல் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போதுமான முகாந்திரம் உள்ளது. எனவே,அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.

சந்திரசேகர் தரப்பு வங்கி பரிவர்த்தனை, மோசடிகளைப் பார்த்து வருமானவரித்துறை அதிகாரிகளே அதிர்ந்துவிட்டார்களாம். விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வ செய்தி குறிப்பை வெளியிட உள்ளார்கள். சந்திரசேகர் மற்றும் செய்யாத்துரை இருவர் மூலமாக பொதுக்குழுவுக்கு ஸ்வீட் பாக்ஸ்கள் நகர்ந்ததை, மோப்பம் பிடித்து ஓ.பி எஸ் அணி டெல்லிக்கு கொடுத்தத் தகவல் தான் ரெய்டுக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. ரெய்டுகளை தாக்குப்பிடிக்குமா அ.தி.மு.க?