ஆறுமுகசாமி, அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கைகள்... அரசியல் ரீதியாக ஏற்படுத்தக்கூடிய தாக்கம் என்ன?!

ஆறுமுகசாமி ஆணையம், அருணா ஜெகதீசன் அறிக்கைகள் தமிழக அரசியல் களத்தில் என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதைப் பார்ப்போம்?

Published:Updated:
சட்டமன்றம்
சட்டமன்றம்
0Comments
Share

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்ய அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கைகள் நேற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இரண்டு அறிக்கைகளிலுமே ஏற்கெனவே சொல்லப்பட்டு வந்த விஷயங்களுக்கு மாறாக பல்வேறு தகவல்கள் வெளியாகிருப்பதால் அரசியல் அரங்கில் முக்கிய விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. இந்தநிலையில், இந்த இரண்டு அறிக்கைகளும் தமிழக அரசியல் களத்தில் என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதைப் பார்ப்போம்?

 ஜெயலலிதா மரணம் - ஆறுமுகசாமி ஆணையம்
ஜெயலலிதா மரணம் - ஆறுமுகசாமி ஆணையம்

ஆறுமுகசாமி ஆணையம் :

2016, செப்டம்பர் மாதம் 22-ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜெயலலிதா, அங்கேயே உடல்நலம் குன்றி டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஏராளமான சர்ச்சைகள் கிளம்பின. கூடுதலாக, ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் என சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்திக்கொண்டிருந்த ஓ.பி.எஸ்-ஸும் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். அதிமுக-வின் இரண்டு அணிகளும் ஒன்று சேர்ந்தபோது, அதை நிபந்தனையாகவும் முன்வைத்தார். அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை 25.09.2017 அன்று அப்போதைய அ.தி.மு.க அரசு அமைத்தது.

தொடர்ந்து, ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள், உறவினர்கள், சசிகலா, அவரின் உறவினர்கள், மூத்த அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், அப்போலோ நிர்வாகம், அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட பலருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. நடுவில் அப்போலோ மருத்துவமனை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு காரணமாக விசாரணைக்குத் தடைவிதித்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2022-ம் ஆண்டு, மார்ச் 7-ம் தேதி மீண்டும் விசாரணை தொடங்கியது. ஓ.பி.எஸ்., சசிகலாவின் உறவினர் இளவரசி, அப்போலோ மருத்துவர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆணையத்தில் ஆஜராகித் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர். 14-வது முறை கால நீட்டிப்புக்குப் பிறகு, கடந்த 27-ம் தேதி, ஆங்கிலத்தில் 500 பக்கங்களும், தமிழில் 608 பக்கங்களும் கொண்ட ஆணையத்தின் அறிக்கையை முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்தார். அப்போது தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வெளியான செய்திக்குறிப்பில், சசிகலா, விஜயபாஸ்கர் உள்ளிட்ட நான்குபேரை அரசு விசாரணைக்கு ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆறுமுகசாமி ஆணையம்
ஆறுமுகசாமி ஆணையம்

அறிக்கையில் என்ன சொல்லப்பட்டுள்ளது?

ஆறுமுகசாமி ஆணையத்தில் பல்வேறு விஷயங்கள் சொல்லப்பட்டிருந்தாலும், ஒருசில விஷயங்கள் பல்வேறு கேள்விகளை உண்டாக்கியுள்ளது. அவை,

ஆஞ்சியோ செய்வதற்கு அடிப்படைத் தேவையான ரத்தத்தில் கிரியேடினின் அளவு சரியாக இருந்தும், ஏன் ஒத்திவைக்கப்பட்டது என்ற காரணத்தை விளக்கவில்லை.

சசிகலா வெளியேற்றப்பட்டு, 2012-ல் மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்ததிலிருந்து அவர்கள் இருவருக்கும் இடையே சுமுக உறவு இல்லை.

சசிகலாவைக் குற்றம்சாட்டுவதைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது.

ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 5 -ம் தேதி இரவு 11.30 என மருத்துவமனை அறிவித்தது. ஆனால் அவர் இறந்த நேரம் 2016 டிசம்பர் 4-ம் தேதி மதியம் 3 மணி முதல் 3.50-க்குள் இருக்கும் என்கிறது சாட்சியங்கள்.

2016 டிசம்பர் 4 -ம் தேதி மதியம் 3 மணி முதல் 3.30 மணிக்குள் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவை ஜெயலலிதாவின் மருமகன் ஜெ.தீபக் அனுசரித்துள்ளார்.

வி.கே.சசிகலா, சிவக்குமார், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து, அவர்கள் 4 பேரையும் விசாரணைக்கு உட்படுத்த உத்தரவிட வேண்டும்.

மருத்துவர் பாபு ஆபிரகாம் ஆஞ்சியோ தொடர்பாகவும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறைகள் தொடர்பாகவும் முரண்பட்ட தகவலை பதிவு செய்திருப்பதால் அவர் விசாரிக்கப்பட வேண்டும்

அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் பல்வேறு நாள்களில் அரசுக்கு கடிதம் வாயிலாக நடவடிக்கைகளில் தெரிவிக்கவில்லை என்பதை குற்றமாகக் கருதி விசாரிக்கப்பட வேண்டும்

ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என செய்தியாளர் சந்திப்பில் பொய்யான தகவலைத் தெரிவித்த அப்பல்லோ குழுமத் தலைவர் பிரதாப் சி ரெட்டி விசாரிக்கப்பட வேண்டும்.

என ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள இந்தக் கருத்துக்கள் பல்வேறு கேள்விகளை உண்டாக்கியுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

அருணா ஜெகதீசன் அறிக்கை:

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த சம்பவத்தில் ஸ்னோலின் என்ற மாணவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பிய இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் 23.05.2018-ல் ஆணையம் அமைத்து உத்தரவிடப்பட்டது. நான்கு ஆண்டுகளாக நடிகர் ரஜினி உட்பட பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் குழு 3,000 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை 2022-ம் ஆண்டு மே மாதம் 18-ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. அப்போது அதில் சொல்லப்பட்ட பல்வேறு தகவல்கள் கசிந்த நிலையில், நடைபெற்ற சட்டசபை கூட்டத்தின் இரண்டாம் நாள் நிகழ்வில் அருணா ஜெகதீசன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாகவும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன. பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட 38 வழக்குகளைத் திரும்பப் பெறவும், போராட்டத்தின் போது காவல் துறையால் கைது செய்யப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளான 93 நபர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த பரிந்துரைகளில் சில ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தின் ஒட்டுமொத்த நிர்வாகக் குளறுபடிகள் நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் வெளிப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

பல்வேறு கோணங்களில் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காவல்துறை வரம்பை மீறியுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காவல்துறை அத்துமீறி செயல்பட்டுள்ளது உள்ளிட்ட கருத்துகள் இடம் பெற்றுள்ளன. அதேபோல, அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 வருவாய்த்துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதேபோல, துப்பாக்கிச்சூடு சம்பவத்தை டி.வியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில், அப்போதைய உளவுத்துறை ஐ.ஜி இதுகுறித்து எடப்பாடியிடம் தகவல் தெரிவித்ததாக அறிக்கையில் கூறப்பட்டிருப்பது பல்வேறு சர்ச்சைகளை உண்டாக்கியிருக்கிறது. இப்படி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள இரண்டு ஆணைய அறிக்கைகள், அரசியல் ரீதியாக என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம்..,

``அருணா ஜெகதீசன் அறிக்கையில், மாவட்ட ஆட்சித்தலைவர் உள்பட 17 அரசு அதிகாரிகள்மீது நேரடியாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அதற்குத் துறை ரீதியான நடவடிக்கைகள் எடுப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை டி.வியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என எடப்பாடி அப்போது சொன்னார். ஆனால், ஆணையத்தின் அறிக்கையில் அப்படியில்லை. அப்போதைய தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், உளவுத்துரை ஐ.ஜி.சத்தியமூர்த்தி உள்ளிட்டவர்கள், தூத்துக்குடியில் நடந்த ஒவ்வொரு அசைவுகளையும் முதல்வரிடம் தெரிவித்தோம் என ஆணையத்தில் சாட்சி சொல்லியிருக்கிறார்கள். இதன்மூலம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து எடப்பாடி பொய்யான தகவலைத் தெரிவித்திருக்கிறார் என்பது உண்மை. அவர் நினைத்திருந்தால், துப்பாக்கிச்சூட்டை நடத்தாதீர்கள் என்று சொல்லியிருக்கமுடியும். அதனால், 13 பேர் மரணத்துக்கு நேரடியாக எடப்பாடிதான் பொறுப்பேற்க வேண்டும். அரசியல் ரீதியாக தி.மு.க, ஆலைக்கு எதிராகப் போராடிய கட்சிகள், அமைப்புகள் எடப்பாடிக்கு எதிராக இந்த விஷயத்தைக் கையிலெடுப்பார்கள்.

ப்ரியன்
ப்ரியன்

ஆறுமுகசாமி ஆணையத்தைப் பொறுத்தவரை, நாடகத்தனமான பல திருப்பங்களைக் கொண்டிருக்கிறது. ஆதித்த கரிகாலன் மரணம் போல ஜெயலலிதாவின் மரணமும் பல மர்மங்களைக் கொண்டிருக்கிறது. விஜயபாஸ்கர், சசிகலா, மருத்துவர் சிவக்குமார், ராதாகிருஷ்ணன், பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களை குற்றம் சாட்டியிருக்கிறார்கள். இந்த விஷயங்கள் திடுக்கிடும் தகவல்களோடு இருக்கிறதேதவிர மர்மத்தை வெளியில் கொண்டுவருவதாக இல்லை. எய்ம்ஸ், அப்போலோ அறிக்கைகளைக்கூட ஒப்புக்கொள்ளவேண்டாம். ஆனால் ஆணையத்துக்கென தனியாக ஒரு மருத்துவக்குழுவை நியமித்து என்னென்ன மாதிரியான சிகிச்சைகள் கொடுக்கபப்ட்டன என்பதை ஆணையம் கண்டறிந்து இருக்கலாம். ஆனால், அதைச் செய்யாமல் அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் பல கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார் ஆறுமுகசாமி. சசிகலா `2012-ல் மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்ததிலிருந்து அவர்கள் இருவருக்கும் இடையே சுமுக உறவு இல்லை' என்று சொல்கிறார் ஆறுமுகசாமி. எந்த சாட்சியத்தின் அடிப்படையில் அவர் இந்த முடிவுக்கு வந்தார் என்று தெரியவில்லை.

ஆகமொத்தம், இந்த அறிக்கையில், திடுக்கிடும்படியான திருப்பங்கள், ஆச்சர்யமளிக்கக்கூடிய தகவல்கள் இருந்தாலும், ஐந்து கோடி ரூபாய் செலவு செய்தும் ஆணையம் தன்னுடைய கடமையை முழுமையாகச் செய்திருக்கிறதா என்கிற கேள்வி எழுகிறது. இனி அடுத்தடுத்து தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்பதைப் பார்க்கவேண்டும். அரசியல் ரீதியாக எடப்பாடி தரப்பு சசிகலாவுக்கு எதிராக இந்த அறிக்கையைப் பயன்படுத்த அதிக வாய்ப்பிருக்கிறது'' என்கிறார் அவர்.

தராசு ஷ்யாம்
தராசு ஷ்யாம்

மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாமிடம் பேசினோம்..,

``ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை அதிமுகவுக்கு அழுத்தத்தைக் கொடுக்கும். ஆனால், அறிக்கைக்குப் பிறகு அரசாணை வெளியாகியிருக்கிறது. அதில், அறிக்கையில் இருக்கும் பல தகவல்கள் அதில் இல்லை. அரசாணை எய்ம்ஸ் மருத்துவமனையைத்தான் அதிகமாகக் குற்றம் சாட்டியிருக்கிறது. எய்ம்ஸ் குழுவை நியமித்ததே உச்ச நீதிமன்றம்தான். ஆறுமுகசாமி ஆணையத்துக்கு அந்தக் குழுவை நிராகரிக்கிற மருத்துவ அனுமதி கிடையாது. அதனால், நிச்சயமாக அவர்கள் உச்ச நீதிமன்றத்துக்குச் செல்வார்கள். அதனால், இது பயனில்லாத வெற்று முயற்சி என்றுதான் நான் நினைக்கிறேன். அரசியல் ரீதியாகப் பார்த்தால், இரண்டு தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம். மேடைப்பேச்சுக்கு உதவும். ஐந்து வருடம் ஆணையம் மக்கள் வரிப்பணத்தைச் சாப்பிட்டது. ஓய்வு பெற்ற நீதிபதிக்கு வேலை கொடுத்ததுபோல, இனி ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் புலனாய்வுக் குழுவில் இடம் கிடைக்கும் அவ்வளவுதான். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைப் பொறுத்தவரை நிர்வாக ரீதியான பரிந்துரைகள்தான் இருக்கின்றன. துறை ரீதியான நடவடிக்கைகள்தான் பரிந்துரைக்கக்கப்பட்டிருக்கின்றன'' என்கிறார் அவர்.