நாடு முழுவதும் 10 மாநிலங்களில் என்.ஐ.ஏ சோதனை... பி.எஃப்.ஐ அமைப்பைச் சேர்ந்த 100 பேர் வரை கைது!

தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், திண்டுக்கல், கன்னியாகுமரி, நாகர்கோவில், கோயம்புத்தூர், கடலூர், ராமநாதபுரம், தேனி, தென்காசி உள்ளிட்ட 16 இடங்களில், என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.

Published:Updated:
என்.ஐ.ஏ (NIA)
என்.ஐ.ஏ (NIA)
0Comments
Share

இந்தியாவிலுள்ள பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளின் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ மற்றும் அமலாக்க இயக்குநரகம் இன்று காலை முதல் சோதனை நடத்திவருகிறது. இது தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள், "பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட குழுக்கள் மற்றும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் குற்றம் சுமத்தப்படும் நபர்கள் தொடர்புடைய இடங்களில், நாடு தழுவிய அளவில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம்.

கேரளாவின் மலப்புரத்தின் மஞ்சேரியிலுள்ள பி.எஃப்.ஐ தலைவர் ஓ.எம்.ஏ சலாமின் வீடு மற்றும் 10 மாநிலங்களிலுள்ள பி.எஃப்.ஐ அலுவலகங்களில் சோதனை நடத்திவருகிறோம். தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்தல், பயிற்சி முகாம்களுக்கு ஏற்பாடு செய்தல், தடைசெய்யப்பட்ட அமைப்புகளில் சேர மக்களைத் தீவிரப்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்படும் நபர்களின் குடியிருப்பு மற்றும் உத்தியோகபூர்வ வளாகங்களில் இந்தச் சோதனைகள் இந்தியா முழுவதும் நடத்தப்படுகின்றன.

பாப்புலர் ஃப்ரண்ட்
பாப்புலர் ஃப்ரண்ட்

தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், திண்டுக்கல், கன்னியாகுமரி, நாகர்கோவில், கோயம்புத்தூர், கடலூர், ராமநாதபுரம், தேனி, தென்காசி உள்ளிட்ட 16 இடங்களில், என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்" எனத் தெரிவித்திருக்கிறது. மேலும், பி.எஃப்.ஐ அமைப்பின் மதுரை மண்டலச் செயலாளர் கம்பம் பகுதியைச் சேர்ந்த யாசர் அரபாத் என்பவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணைக்கு பிறகு கைதுசெய்தனர். நாடு முழுவதும் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ரெய்டு நடக்கும் நிலையில் 100 பேர் வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

NIA
NIA

இந்த நிலையில், பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா வெளியிட்டிருக்கும் அறிக்கையில்," எதிர்ப்புக் குரல்களை அடக்க ஏஜென்சிகளைப் பயன்படுத்தும் பாசிச ஆட்சியின் நடவடிக்கைகளுக்கு நாங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் NIA -வின் இஸ்லாமிய அமைப்புகளுக்கு எதிரான சோதனைகளுக்கு எதிராக PFI உறுப்பினர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.