"குழந்தைகள் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல!"- Indemnity Bond-ல் கையெழுத்து வாங்கும் தனியார் பள்ளி

'மாணவர்கள் பள்ளியின் காவலில் இருக்கும்போது ஏதாவது பிரச்னை அல்லது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பல்ல என்பதை ஒப்புக்கொள்கிறேன்.' - பெற்றோரிடம் ஒப்பந்தம் போடும் கோவை தனியார் பள்ளி

Published:Updated:
தனியார் பள்ளி
தனியார் பள்ளி
0Comments
Share

கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியாமூர் பகுதியில் தனியார் பள்ளி மாணவி மரணம் மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு மாநிலம் முழுவதும் தனியார் பள்ளிகளின் செயல்பாடுகள் விமர்சனத்துக்குள்ளாகிவருகின்றன.

கள்ளக்குறிச்சி வன்முறை..!
கள்ளக்குறிச்சி வன்முறை..!

கோவை, அவிநாசி சாலையில் ஜி.ஆர்.டி பப்ளிக் என்கிற சி.பி.எஸ்.இ பள்ளி இயங்கிவருகிறது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி சம்பவத்துக்குப் பிறகு அந்தப் பள்ளி பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துவருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

அதன்படி, ``எங்கள் பள்ளியின் உடைமைகள் மற்றும் எந்தவொரு நபருக்கும், இழப்பு அல்லது காயம் தொடர்பாக எந்த உரிமை கோரலையும் செய்ய மாட்டோம் என ஒப்புக்கொள்கிறேன். மாணவர்கள் பள்ளியின் காவலில் இருக்கும்போது ஏதாவது பிரச்னை அல்லது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பல்ல என்பதை ஒப்புக்கொள்கிறேன்.” என பெற்றோரிடம் ஓர் இழப்பீட்டு பத்திரத்தில் (Indemnity Bond) கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கிவருவதாகப் புகார் எழுந்திருக்கிறது.

ஒப்பந்தம்
ஒப்பந்தம்

கையெழுத்து போடவில்லை என்றால், மாற்றுச் சான்றிதழை பெற்றுக்கொண்டு செல்லுமாறு வற்புறுத்துவதாகவும் பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இது குறித்து அந்தத் தனியார் பள்ளி நிர்வாகம், ``கோவையில் உள்ள பல பள்ளிகள் இந்த நடைமுறையைப் பின்பற்றுகின்றன. அந்த ஒப்பந்த நகலை வழங்கியது நாங்கள்தான். ஆனால் கையெழுத்து போடச் சொல்லி யாரையும் கட்டாயப்படுத்தவில்லை” என்று விளக்கமளித்திருக்கிறது.

ஜி.ஆர்.டி பள்ளி
ஜி.ஆர்.டி பள்ளி

இது குறித்து கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பூபதியிடம் விசாரித்தபோது, ``பள்ளியில் இருக்கும்போது மாணவர்களுக்கு அந்தக் கல்வி நிறுவனம்தான் முழுப்பொறுப்பு. இப்படி கையெழுத்து வாங்குவதெல்லாம் எந்த விதிகளிலும் இல்லை. இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.